ஜபல்பூர்: பாகிஸ்தானுக்கு ஆதரவாக கோஷமிட்ட குற்றத்துக்காக முதல் தகவல் அறிக்கை பதிவு செய்து மத்திய பிரதேசம் போபால் நகரின் மிஸ்ரோத் காவல் நிலையத்தால் கைது செய்யப்பட்டவர் ஃபைசல் என்கிற ஃபைசான். இதுதவிர இவர் மீது ஏற்கெனவே பதிவு செய்யப்பட்ட 14 குற்றவியல் வழக்குகள் நிலுவையில் உள்ள தாக கூறப்படுகிறது.
இந்நிலையில், சம்மந்தப்பட்ட நபர் ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனுவை விசாரித்த மத்திய பிரதேச உயர் நீதிமன்ற நீதிபதி டி.கே.பாலிவால் கூறியதாவது: மனுதாரர் அவர் பிறந்து வளர்ந்த நாட்டுக்கு எதிராக பொதுவில் கோஷம் எழுப்பியதாக தெரியவந்துள்ளது. ஆகவே குற்றவாளி ஒவ்வொரு மாதத்தின் முதல் மற்றும் நான்காவது செவ்வாய்க் கிழமைகளில் போபால் மிஸ்ரோத் காவல் நிலையம் முன்பு உள்ள கொடிக் கம்பத்தில் ஏற்றப்பட்டிருக்கும் தேசியக்கொடியை 21 முறை வணங்கி, “பாரதத் தாய்க்கு வெற்றி” என்று வாழ்த்து சொல்ல வேண்டும். மேலும் குற்றவாளி இனி வரும் காலங்களில் நடைபெறவிருக்கும் நீதிமன்ற விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு நல்குவார் என்கிற உத்தரவாதத்தின் பேரில் அவர் ரூ.50 ஆயிரம் பிணைத்தொகை செலுத்திய பிறகு ஜாமீனில் விடுவிக்கப்படுவார். தான் பிறந்து வளர்ந்து வாழும் நாட்டின் மீது பற்றும், பெருமிதமும், பொறுப்புணர்வும் மனுதாரர் மனதில் ஏற்படும் வகையில் சில நிபந்தனைகளை விதித்து அவருக்கு ஜாமீன் வழங்க இந்த நீதிமன்றம் உத்தரவிடுகிறது. இவ்வாறு நீதிபதி தெரிவித்தார்.