டெல் அவிவ்: ஹமாஸ் தீவிரவாத அமைப்பின் தலைவர் யாஹியா சின்வர், பாதாள அறையில் சொகுசாக வாழ்ந்துள்ளார். அவரது மனைவி ரூ.27 லட்சம் மதிப்புள்ள கைப்பை வைத்துள்ளார்.
கடந்த ஆண்டு அக்டோபர் 7-ம் தேதி பாலஸ்தீனத்தின் ஹமாஸ் தீவிரவாதிகள் இஸ்ரேல் மீது பலமுனை தாக்குதல்களை நடத்தினர். அன்றைய தினம் இஸ்ரேல் பகுதிகளை குறிவைத்து 5,000-க்கும் மேற்பட்ட ஏவுகணைகள் வீசப்பட்டன. சுமார் 6,000-க்கும் மேற்பட்ட ஹமாஸ் தீவிரவாதிகள் இஸ்ரேலின் தெற்கு பகுதியில் அத்துமீறி நுழைந்து 119 இடங்களில் திடீர் தாக்குதல் நடத்தினர். இதில் 1,200 இஸ்ரேலியர்கள் உயிரிழந்தனர். 251 பேர் பிணைக்கைதிகளாக பிடித்துச் செல்லப்பட்டனர்.
இஸ்ரேல் மீதான தாக்குதலுக்கு ஹமாஸ் தலைவர் யாஹியா சின்வர் மூளையாக செயல்பட்டார். கடந்த ஆண்டு அக்டோபர் 7-ம் தேதி இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்த உத்தரவு பிறப்பித்த அவர் அன்றைய தினம் தனது குடும்பத்தினருடன் பாதாள அறையில் பதுங்கி உள்ளார்.
இதுதொடர்பான வீடியோவை இஸ்ரேல் ராணுவம் வெளியிட்டு உள்ளது. இதன் பின்னணி குறித்து இஸ்ரேல் ராணுவ வட்டாரங்கள் கூறியதாவது: ஹமாஸ் தலைவர் யாஹியா சின்வர் (61) கடந்த 2011-ம் ஆண்டில் தன்னைவிட 12 வயது குறைந்த சமர் முகமது அபு ஜாமர் (49) என்பவரை திருமணம் செய்தார். அவர்களுக்கு 3 குழந்தைகள் உள்ளனர்.
யாஹியா சின்வரின் வீடு காசாவின் கான் யூனிஸ் நகரில் இருந்தது. அவரது வீட்டுக்கு அடியில் பல அடி ஆழத்தில் பாதாள அறை கட்டப்பட்டு இருந்தது. அந்த பாதாள அறைக்கு செல்ல மிக நீளமான சுரங்கப் பாதை அமைக்கப்பட்டு இருந்தது.
கடந்த ஆண்டு அக்டோபர் 7-ம் தேதி இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்த உத்தரவிட்ட யாஹியா சின்வர், தனது மனைவி, குழந்தைகளுடன் பாதாள அறைக்கு சென்று சொகுசாக வாழ்ந்துள்ளார். அவர் தனது குடும்பத்தினருடன் சுரங்கப் பாதையை கடந்து செல்லும் வீடியோ இப்போது கிடைத்திருக்கிறது.
காசா அகதிகளுக்காக ஐ.நா. சபை சார்பில் இலவசமாக தானியங்கள் வழங்கப்படுகிறது. இந்த தானியங்கள் மற்றும் தொலைக்காட்சி பெட்டி, தொலைபேசி என சகல வசதிகளுடன் யாஹியா சின்வர் பாதாள அறையில் வாழ்ந்துள்ளார்.
யாஹியா சின்வரின் மனைவி ஆடம்பர பிரியை ஆவார். அவர் பிரான்ஸின் ஹெர்மஸ் நிறுவனத்தின் பிர்கின் கைப்பையை பாதாள அறைக்கு எடுத்து சென்றுள்ளார். இதன் விலை ரூ.27 லட்சமாகும். மேலும் பாதாள அறையில் கட்டு கட்டாக பணமும் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது. இஸ்ரேல் ராணுவ தாக்குதல்களில் ஹமாஸின் சுரங்கப்பாதைகள் தரைமட்டமாகின. இதன்காரணமாக பாதாள அறையில் இருந்து யாஹியா சின்வர் அண்மையில் வெளியேறி உள்ளார். கடந்த 16-ம் தேதி இஸ்ரேலின் பயிற்சி ராணுவ வீரர்கள், காசாவின் ரஃபா பகுதியில் நடத்திய தாக்குதலில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இவ்வாறு இஸ்ரேல் ராணுவ வட்டாரங்கள்தெரிவித்தன.
காசாவை சேர்ந்த ஒருவர் கூறும்போது, “இஸ்ரேல் ராணுவ தாக்குதலில் காசா பகுதி மக்கள் கொத்து கொத்தாக உயிரிழந்து வருகின்றனர். ஆனால் யாஹியா சின்வர் தனது குடும்பத்தினருடன் பாதாள அறையில் சொகுசாக வாழ்ந்துள்ளார். இதுதான் ஹமாஸ் தலைவர்களின் உண்மையான முகம். வேண்டுமென்றே போரை தொடங்கி காசாவின் அமைதியை ஹமாஸ் தீவிரவாதிகள் சீர்குலைத்துவிட்டனர். இப்போது காசா நரகமாக காட்சியளிக்கிறது” என்று தெரிவித்தார்.