மீண்டும் அணிக்கு திரும்புவது எப்போது..? – முகமது ஷமி விளக்கம்

பெங்களூரு,

இந்திய வேகப்பந்து வீச்சாளர் 34 வயதான முகமது ஷமி கணுக்காலில் ஏற்பட்ட காயத்தால் ஏறக்குறைய ஓராண்டாக எந்த போட்டியிலும் விளையாடவில்லை. காயத்தில் இருந்து மீண்டு வரும் அவர் பெங்களூருவில் நேற்று இந்தியா- நியூசிலாந்து டெஸ்ட் முடிந்ததும் அதே மைதானத்தில் பிற்பகலில் வலை பயிற்சியில் ஈடுபட்டார். பவுலிங் பயிற்சியாளர் மோர்னே மோர்கல் அவருக்கு ஆலோசனைகளை வழங்கினார். ஒரு மணி நேரம் எந்தவித அசவுகரியமின்றி அவர் பந்து வீசியதை பார்க்கும் போது, விரைவில் அணிக்கு திரும்புவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் பந்துவீச்சு பயிற்சியில் ஈடுபட்டது குறித்தும் அணிக்கு திரும்புவது குறித்தும் முகமது ஷமி பேசியுள்ளார்.

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள முகமது ஷமி கூறுகையில், காயத்திலிருந்து மெல்ல மெல்ல குணமடைந்து வருகிறேன். தற்போது எனக்கு காலில் வலி இல்லை. பயிற்சியில் நான் கொஞ்சம் தூரம் ஓடி வந்து தான் பந்து வீசினேன். ஏனென்றால் என்னுடைய உடம்பில் நான் பெரிய அளவில் அழுத்தம் கொடுக்க விரும்பவில்லை. ஆனால் நேற்று நான் முழுவீச்சில் பந்துவீச்சில் ஈடுபட்டேன். என்னுடைய 100 சதவீத பங்களிப்பை கொடுத்தேன். பந்துவீசி முடித்தவுடன் என்னுடைய உடல் தகுதி நல்ல நிலையில் இருந்தது. நான் இந்திய அணிக்கு திரும்பும் பாதையில் சரியான திசையில் சென்று கொண்டிருக்கின்றேன். நான் 100% உடல் தகுதியை பெரும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறேன்.

நான் ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரில் அணியில் இடம்பெறுவேனோ அல்லது இடம்பெற மாட்டேனா என்பதை அனைவரும் தெரிந்து கொள்ள விரும்புகின்றனர். ஆனால் அந்த தொடருக்கு இன்னும் ஒரு மாதத்திற்கு மேல் இருக்கிறது. அதற்குள் நான் உடல் தகுதியில் தேர்ச்சி பெற வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.