மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் இலங்கை அணி வெற்றி

மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் இலங்கை அணி 05 விக்கெட்டுக்களால் வெற்றிப்பெற்றுள்ளது. 

கண்டி பல்லேகல மைதானத்தில் இடம்பெற்ற இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிப்பெற்ற மேற்கிந்திய தீவுகள் அணி, முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது. 

இதன்படி அந்த அணி 38.3 ஓவர்கள் நிறைவில் 04 விக்கெட்டுக்களை இழந்து 185 ஓட்டங்களை பெற்றிருந்த போது மழை குறுக்கிட்டது. 

அந்த அணி சார்பில் துடுப்பாட்டத்தில் Sherfane Rutherford 74 ஓட்டங்களையும், Roston Chase 33 ஓட்டங்களையும் பெற்று ஆடுகளத்தில் இருந்தனர். 

பந்து வீச்சில் இலங்கை அணி சார்பில் Wanindu Hasaranga 02 விக்கெட்டுக்களையும் Jeffrey Vandersay மற்றும் Charith Asalanka ஆகியோர் தலா ஒரு விக்கெட்டினை வீழ்த்தியிருந்தனர். 

இந்நிலையில், டக்வத் லூயிஸ் முறைப்படி போட்டி 37 ஓவர்களுக்கு மட்டுப்படுத்தப்பட்டது. 

இதற்கமைய இலங்கை அணிக்கு 37 ஓவர்களில் 232 ஓட்டங்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. 

இதன்படி பதிலுக்கு துடுப்பாடிய இலங்கை அணி 31.5 ஓவர்கள் நிறைவில் 05 விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்த நிலையில், வெற்றி இலக்கை அடைந்தது. 

துடுப்பாட்டத்தில் இலங்கை அணி சார்பில் அணித்தலைவர் Charith Asalanka அதிகபட்சமாக 77 ஓட்டங்களையும், Nishan Madushka 69 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர். 

பந்து வீச்சில் மேற்கிந்திய தீவுகள் அணி சார்பில் Gudakesh Motie 03 விக்கெட்டுக்களையும், Alzarri Joseph 02 விக்கெட்டுக்களையும் வீழ்த்தினர். 

இதன்படி 03 போட்டிகள் கொண்ட இந்த ஒருநாள் தொடரில் இலங்கை அணி ஒன்றுக்கு பூஜ்ஜியம் என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.