புதுடெல்லி: வடக்கு அந்தமானை ஒட்டிய வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவானது. 48 மணி நேரத்தில் இது புயலாக மாற வாய்ப்புள்ளது என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது குறித்து இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியிருப்பதாவது: மத்திய கிழக்கு வங்கக்கடல், அதை ஒட்டிய வடக்கு அந்தமான் கடலில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று (அக்.21) உருவானது. இது, மேற்கு, வடமேற்கு திசையில் நகர்ந்து, நாளை (அக்.22 ) காலை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடையும். இது மேலும் வலுவடைந்து, 23-ம் தேதி புயலாக மாறும் என்று தெரிகிறது. பின்னர், இந்த புயல் வடமேற்கு திசையில் நகர்ந்து, ஒடிசா – மேற்கு வங்க கடலோர பகுதிகளுக்கு இடையே 24-ம் தேதி கரையை கடக்கக்கூடும்.
தமிழகம், புதுவை, காரைக்கால் ஆகிய பகுதிகளில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என்பதால் அடுத்த 3 நாட்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில் வங்கக் கடலில் உருவாகவுள்ள முதல் புயல் இதுதான். காற்றழுத்த தாழ்வு பகுதி புயலாக மாறினால், அதற்கு கத்தார் நாட்டின் பரிந்துரைப்படி ‘டானா’ என பெயரிடப்படும். இந்த புயலானது தமிழகத்துக்கு பாதிப்பு ஏதும் ஏற்படுத்தாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் வரும் நவம்பர் மாதம் முதல் தமிழகம் முழுவதும் பரவலாக கனமழை பெய்யும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்று முதல் 26 ஆம் தேதி வரை மழை.. “வட தமிழக கடலோர பகுதிகளை ஒட்டி வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் 3 நாட்களுக்கு லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். இன்று (அக்.21) ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, கடலூர், அரியலூர், பெரம்பலூர், திருச்சி, மயிலாடுதுறை ஆகிய 13 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
நாளை (அக்.22) கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், தருமபுரி, சேலம், கள்ளக்குறிச்சி, நாமக்கல், கரூர், திருச்சி, கடலூர், பெரம்பலூர், அரியலூர், மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை ஆகிய 16 மாவட்டங்கள், காரைக்கால் பகுதியில் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. 23-ம் தேதி கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், ஈரோடு ஆகிய 4 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும். 24, 25, 26-ம் தேதிகளில் தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். ஒருசில பகுதிகளில் இடியுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.” என்று ஏற்கெனவே சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.