பெங்களூரு: கர்நாடகாவில் கன்னடர் – தமிழர் இடையே எந்த வேறுபாடும் இல்லாமல், ஒற்றுமையாக வாழ வேண்டும் என அம்மாநில முன்னாள் முதல்வரும் பாஜக மூத்த தலைவருமான எடியூரப்பா கேட்டுக்கொண்டார்.
பெங்களூருவில் தாய்மொழி கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் எஸ்.டி.குமார் தலைமையில் கன்னடர்- தமிழர் ஒற்றுமை மாநாடு நேற்று முன்தினம் நடைபெற்றது. இதனை முன்னாள் முதல்வரும் பாஜக மூத்த தலைவருமான எடியூரப்பா விளக்கேற்றி தொடங்கி வைத்தார். பின்னர் எடியூரப்பா பேசியதாவது: எனது ஆட்சிக் காலத்தில் கர்நாடகாவில் கன்னடர்- தமிழர் இடையே ஒற்றுமை ஏற்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. அதன் தொடர்ச்சியாக பெங்களூருவில் மூடப்பட்டிருந்த திருவள்ளுவர் சிலையை திறக்க நடவடிக்கை எடுத்தேன். இதற்காக அப்போதைய தமிழக முதல்வராக இருந்த கருணாநிதியை நேரில் சந்தித்து, பெங்களூருவில் திருவள்ளுவர் சிலையும் சென்னையில் கன்னட கவிஞர் சர்வக்ஞர் சிலையும் திறக்க வேண்டும் எனவலியுறுத்தினேன். இதனையடுத்தே இரு சிலைகளும் எவ்விதபிரச்சினையும் இன்றி திறக்கப்பட்டன.
கர்நாடக மாநிலத்தின் வளர்ச்சிக்கு இங்குள்ள தமிழர்கள் பாடுபட்டுள்ளனர். அவர்களின் உழைப்பை அங்கீகரிக்கும் வகையில் நான் முதல்வராக இருந்தபோது தமிழர் நலனுக்காக முக்கிய திட்டங்களை உருவாக்கினேன். கன்னடர்களும், தமிழர்களும் ஒரு தாய் மக்கள் என்பதை அனைவரும் நினைவில் கொள்ள வேண்டும். அடிப்படையில் இருவரும் திராவிட இனத்தை சேர்ந்தவர்கள். சகோதரர்களான இருவரிடத்திலும் எந்த வேறுபாடும் இல்லை. கர்நாடகாவில் கன்னடரும் தமிழரும் ஒற்றுமையாக வாழ வேண்டும். இவ்வாறு எடியூரப்பா பேசினார்.
தமிழர்களுக்கு 5% இட ஒதுக்கீடு: மாநாட்டில் கன்னட ரக்ஷன வேதிகே தலைவர் நாராயண கவுடா, காங்கிரஸ் எம்எல்ஏ ரிஸ்வான் உள்ளிட்டோர் பங்கேற்றனர். பெங்களூருவில் நடந்த மாநாட்டில் 35 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதில், “தமிழக அரசு, வெளிமாநில தமிழர்களுக்கு கல்வி, வேலைவாய்ப்பு ஆகியவற்றில் 5% இட ஒதுக்கீடு வழங்க சிறப்புசட்டம் கொண்டு வர வேண்டும். தமிழக அரசு உருவாக்கியுள்ள அயலக தமிழர் நலத் துறையின் கிளையை பெங்களூருவில் தொடங்க வேண்டும். கர்நாடகாவில் பிறமொழி சிறுபான்மையினருக்கு வழங்கும் சலுகைகள் தமிழர்களுக்கும் வழங்க கர்நாடக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்பது போன்ற தீர்மானங்கள் குறிப்பிடத்தக்கவை ஆகும்.