சென்னை: குரூப்-1 தேர்வில் விடுபட்ட சான்றிதழ்களை தேர்வர்கள் நவம்பர் 2-ம் தேதிக்குள் ஆன்லைனில் பதிவேற்றம் செய்ய வேண்டும் என தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக டிஎன்பிஎஸ்சி தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் அ.ஜான் லூயிஸ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: குருப்-1 தேர்வில் சில தேர்வர்கள், தேவையான சான்றிதழ்களை பதிவேற்றம் செய்யாமல்இருப்பதும், சிலவற்றை முழுமையாக பதிவேற்றம் செய்யாமல் விட்டிருப்பதும் கண்டறியப்பட்டுள்ளது. அத்தகைய தேர்வர்கள் உரிய சான்றிதழ்களை ஆன்லைனில் பதிவேற்றம் செய்ய கடைசி வாய்ப்பு அளிக்கப்படுகிறது.
அவர்கள் நவம்பர் 2-ம் தேதி நள்ளிரவு 11.59 மணிக்குள் சான்றிதழ்களை ஆன்லைனில் பதிவேற்றம் செய்ய வேண்டும். இதுகுறித்து அவர்களுக்கு எஸ்எம்எஸ் மற்றும் மின்னஞ்சல் வாயிலாக தகவல் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. அவ்வாறு சான்றிதழ்களை பதிவேற்றம் செய்யாவிட்டால் அவர்களின் விண்ணப்பம் நிராகரிக்கப்படும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.