பிரியங்கா காந்தியின் பேரணியில் காங்கிரஸ் கட்சி கொடிகளை பயன்படுத்த தடையில்லை

வயநாடு,

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான ராகுல் காந்தி லோக்சபா தேர்தலில் இரண்டு தொகுதிகளில் போட்டியிட்டார். ரேபரேலி மற்றும் வயநாடு ஆகிய இரண்டு தொகுதிகளில் ராகுல் காந்தி போட்டியிட்ட நிலையில் இரண்டிலுமே வெற்றி பெற்றார். இதனால், வயநாடு தொகுதி எம்பி பதவியை ராகுல் காந்தி ராஜினாமா செய்தார். இதையடுத்து, அந்த தொகுதி காலியாக இருந்தது.

இந்த நிலையில், வயநாடு தொகுதிக்கு வரும் நவம்பர் 13ம் தேதி தேர்தல் நடத்தப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதில் காங்கிரஸ் கட்சி சார்பில் பிரியங்கா காந்தி போட்டியிடுவார் என்று அக்கட்சி தேர்தலுக்கு முன்பே அறிவித்துவிட்டது. பாஜக சார்பில் நவ்யா ஹரிதாஸ் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார். இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் சத்யன் மொகேரியும் போட்டியிடுகிறார்.

இதனிடையே, நாளை ( புதன்கிழமை) பிரியங்கா காந்தி வயநாடு மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் வேட்புமனு தாக்கல் செய்ய உள்ளார். இதையொட்டி கல்பெட்டாவில் இருந்து கலெக்டர் அலுவலகம் முன்பு வரை வாகன பேரணி (ரோடு ஷோ) நடைபெறுகிறது.

இந்நிலையில், பிரியங்கா காந்தியின் பேரணியில் கட்சி கொடிகளை பயன்படுத்துவதில் எந்த தடையும் இல்லை என்று காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது. இந்த பேரணியில் பிரியங்கா காந்தியுடன் காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி, மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே ஆகியோர் பங்கேற்கிறார்கள்.

இந்த ஆண்டு தொடக்கத்தில் வயநாடு மக்களவைத் தேர்தலுக்கு முன்னதாக ராகுல் காந்தி நடத்திய வாகன பேரணியின் போது காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளின் கொடிகள் பயன்படுத்தவில்லை. இதனால் பெரும் பழமையான கட்சி பயப்படுவதாக சிபிஐ(எம்) குற்றம்சாட்டியதால் இந்த முடிவு முக்கியத்துவம் பெறுகிறது.

வயநாடு மக்கள் என் இதயத்தில் ஒரு சிறப்பான இடத்தைப் பிடித்துள்ளனர், அவர்களுக்கு எனது சகோதரி பிரியங்காவை விட ஒரு சிறந்த பிரதிநிதியை என்னால் கற்பனை செய்து பார்க்க முடியாது என்று ராகுல் காந்தி தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.