புதுடெல்லி: மகாராஷ்டிராவில் ஷிவ்பா சங்கட்னா என்ற மராட்டிய சமூக அமைப்பின் தலைவர் மனோஜ் ஜாரங்கி பாட்டீல் (41). ஜெய்னா மாவட்டம் அந்தர்வாலி சராத்தி கிராமத்தைச் சேர்ந்த இவர், மராட்டிய சமூகத்தினருக்கு கல்வி, அரசு வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீடு வழங்கக் கோரி போராடி வருகிறார். இதற்காக சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டம் இருமுறை நடத்தினர்.
இந்நிலையில், மனோஜ் ஜாரங்கி நேற்று கூறும்போது, ‘‘மகாராஷ்டிரா சட்டப்பேரவைத் தேர்தலில் மராட்டிய சமூகத்தினர் உறுதியாக வெல்லும் தொகுதிகளில் போட்டியிடுவோம். இதில் விருப்பம் உள்ள மராட்டிய சமூகத்தினர் வேட்பு மனு தாக்கல் செய்யலாம். இவர்களில் வலுவான வேட்பாளரை தேர்வு செய்து நாங்கள் ஆதரிப்போம். இதரவேட்பாளர்கள் தங்கள் மனுவைவாபஸ் பெற்றுக் கொள்ளவேண்டும். அவ்வாறு வாபஸ் பெறாதவர்களை விலை போனவர்களாகக் கருதுவோம். எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கான தனி தொகுதிகளில் எங்கள் கொள்கைகளை ஆதரிப்பவர்களுக்கு ஆதரவு கொடுப்போம்’’ என்றார்.
இவரது இந்த அறிவிப்பு, பாஜகவை உள்ளடக்கிய ஆளும் மஹாயுதி மற்றும் எதிர்க்கட்சிகள் அடங்கிய மகா விகாஸ் அகாடி ஆகிய இரு பெரும் கூட்டணிகளுக்கு சிக்கலை உருவாக்கி உள்ளது.
மராத்வாடா பகுதியில் ஒவ்வொரு தொகுதிகளிலும் மராட்டிய சமூகத்தின் வாக்குகள் சராசரியாக ஒரு லட்சத்துக்கும் அதிகம் எனக் கருதப்படுகிறது. இதர தொகுதிகளிலும் மராட்டிய சமூகத்தினர் கணிசமாக உள்ளனர். இதனால், இரு பெரும் கூட்டணிகளின் வாக்குகள் மனோஜ் ஆதரவாளர்களால் சிதறும் அச்சம் எழுந்துள்ளது. இச்சூழலை சமாளிக்க மராட்டிய சமூகத்தில் வேட்பாளர்கள் கிடைக்காத தொகுதியில், ஓபிசி பிரிவினரை முன்னிறுத்த இரு கூட்டணிகளும் திட்டமிட்டு வருகின்றன.