மெகா ஏலத்தில் மாஸ் என்ட்ரி கொடுக்கும் ரஷித் கான்…? – வளைச்சுப் போட காத்திருக்கும் இந்த 1 அணி!

IPL 2025 Mega Auction: ஐபிஎல் 2025 மெகா ஏலம் வரும் நவம்பர் மாத கடைசியில் நடைபெற இருப்பதாக தகவல்கள் வந்துகொண்டிருக்கின்றன. அதற்கு முன் இன்னும் 9 நாள்களுக்குள் அதாவது அக். 31ஆம் தேதிக்குள் 10 ஐபிஎல் அணிகளும் தாங்கள் ஏலத்திற்கு முன் யார் யாரை தக்கவைக்கப்போகிறோம் என்ற பட்டியலை வெளியிட வேண்டும். 

இதனால், ஐபிஎல் ரசிகர்கள் இப்போது ஒவ்வொரு நாளையும் எண்ணி வருகின்றனர். மனம் கொத்தி பறவை படத்தில் சிவகார்த்திகேயன் காதலியின் திருமண நாளை ஸ்லேட்டில் எழுதிவைத்து எண்ணி வருவார்… அதேபோல்தான் இப்போது ஐபிஎல் ரசிகர்களின் எண்ணமும் உள்ளது. சிஎஸ்கே, மும்பை உள்ளிட்ட ஜாம்பவான் அணிகள் யார் யாரை தக்கவைக்கும்; கொல்கத்தா, ஹைதராபாத், ராஜஸ்தான் போன்ற கடந்த சீசனில் ஜொலித்த அணிகள் என்னென்ன முடிவெடுக்கும் என ஆர்வமுடன் உள்ளனர். 

அணிகளுக்கு ஆப்பு வைத்த விதிமுறைகள்

அதுவும் ஐபிஎல் 2025 மெகா ஏலத்திற்கு (IPL Mega Auction) விதிமுறைகளும் தாறுமாறாக மாறியிருக்கிறது. வீரர்கள் தக்கவைப்பதில் தொடங்கி RTM பயன்பாடு வரை அனைத்தும் அணிகளுக்கு ஆப்பு சொருகப்பட்டுள்ளது. வீரர்களுக்கு நியாயமான விலை கிடைக்க இந்த விதிமுறைகள் வழிவகை செய்துள்ளன. இதனால், அணிகளின் ஒட்டுமொத்த ஏலத்தொகையை ரூ.90 கோடியில் ( 2024 மினி ஏலத்தில் ரூ.10 கோடி கூடியது) இருந்து ரூ.120 கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது. புதிய விதிகளால் பல்வேறு அணிகள் தங்களின் வீரர்களை பெரிய தொகைக்கு தக்கவைக்க வேண்டிய நிலையில் உள்ளனர், இல்லையெனில் RTM மூலம் எடுக்கவே திட்டமிடுவார்கள்.

இந்த காரணத்தால் பல அணிகளும் பல வீரர்களை இழக்க நேரிடலாம். அதிலும் குறிப்பாக வீரர்களே பிரியப்பட்டு ஐபிஎல் மெகா ஏலத்திற்கு வர திட்டமிட்டு, அணியில் இருந்து விடுவித்துக்கொள்ளும் வாய்ப்புகளும் அதிகம். அப்படி நட்சத்திர வீரர்கள் ஏலத்திற்கு வந்தால் ஏலம் களைகட்டும், அணிகள் முட்டிமோதும். அதிக தொகை வைத்திருக்கும் அணிகள்தான் அன்றைக்கு ராஜாவாகிவிடுவார்கள். அந்த வகையில், பில் சால்ட், மிட்செல் ஸ்டார்க், ககிசோ ரபாடா, டிம் டேவிட், ஜாஸ் பட்லர், மேக்ஸ்வெல் உள்ளிட்டோர் அணிகளில் இருந்து வெளியேறி ஏலத்திற்கு வரும் வாய்ப்புள்ளது என கூறப்படுகிறது.  

ஐபிஎல் மெகா ஏலத்தில் ரஷித் கான்

இந்நிலையில் இந்த லிஸ்டில் யாருமே எதிர்பார்க்காத வீரராக குஜராத் அணியின் நட்சத்திர ஸ்பின்னர் ரிஷத் கானும் இணைகிறார் என தகவல்கள் கூறப்படுகின்றன. அதாவது அவர் குஜராத் அணியில் இருந்து தன்னை விடுவித்துக்கொண்டு ஐபிஎல் மெகா ஏலத்தில் பங்கெடுக்க விரும்புவதாக கூறப்படுகிறது. இதனால் அவருக்கு நியாயமான தொகை கிடைக்கலாம். மீண்டும் குஜராத் அணியே அவரை RTM மூலம் எடுக்கலாம். எதுவாக இருந்தாலும் ரஷித் கான் (Rashid Khan) போன்ற உலகத்தர வீரர் ஏலத்திற்கு வந்தால் பயங்கரமாக சூடுபிடித்துவிடும்.

ரஷித் கானும்… மும்பை இந்தியன்ஸ் அணியும்…

ரஷித் கான் ஏலத்திற்கு வந்தால் அவரை அனைத்து அணிகளும் எடுக்க முற்படும் என்றாலும் இந்த அணி நிச்சயம் பெரிய தொகை வரை செல்லும். அது வேற யாரும் இல்லை, மும்பை இந்தியன்ஸ் அணிதான் (Mumbai Indians)… ரஷித் கான் உலகம் முழுவதும் நடைபெறும் பல டி20 லீக் தொடர்களில் மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்காக விளையாடுகிறார். அமெரிக்காவின் மேஜர் லீக் தொடரில் MI நியூயார்க் அணிக்காகவும், தென்னாப்பிரிக்காவின் SA20 தொடரில் MI கேப் டவுண் அணிக்காகவும், அரபு நாடுகளில் நடைபெறும் ILT20 லீக்கில் MI எமிரேட்ஸ் அணிக்காவும் ரஷித் கான் விளையாடி வருகிறார். 

கொக்கிப் போடுமா மும்பை இந்தியன்ஸ்

எனவே இவரை ஐபிஎல் தொடரிலும் எடுக்க மும்பை இந்தியன்ஸ் அணி துடிக்கும். அதுவும் 2022 மெகா ஏலத்திற்கு அவர் விடுவிக்கப்படும் முன் ஹைதராபாத் அணியுடன் மும்பை அணி டிரேடிங் கேட்டது. ஆனால் அது நடக்கவில்லை. எனவே இம்முறை அவரை விடாமல் கொக்கிப்போட்டு தூக்க மும்பை இந்தியன்ஸ் அணி உரிமையாளர்கள் துடிப்பார்கள். மும்பை அணி ஏற்கெனவே பெரிய பெரிய வீரர்களை ஜாஸ்தி தொகையில் எடுக்கும் நிலையில் அவர்களால் ரஷித் கானை தூக்க முடியுமா என்பது பெரிய கேள்வியாகவே உள்ளது. இருப்பினும், ரஷித் கான் ஐபிஎல் 2025 மெகா ஏலத்திற்கு வருவாரா, வந்தால் அவரை எந்த அணி, என்ன தொகையில் எடுக்கும் என்பதை கமெண்ட் செய்யுங்கள்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.