கசான் (ரஷ்யா): ரஷ்யா – உக்ரைன் இடையே நிலவும் மோதல்கள் அனைத்தும் அமைதியான முறையில் தீர்க்கப்பட வேண்டும் என்று விளாதிமிர் புதின் உடனான பேச்சுவார்த்தையின்போது பிரதமர் மோடி வலியுறுத்தினார்.
பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா, தென் ஆப்ரிக்கா ஆகிய நாடுகளின் கூட்டமைப்பான பிரிக்ஸ் கூட்டமைப்பின் 16-வது உச்சி மாநாடு ரஷ்யாவின் கசான் நகரில் நடைபெற உள்ளது. இதில் கலந்து கொள்வதற்காக கசான் சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி, உச்சி மாநாட்டுக்கு முன்னதாக ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதினுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். இந்தப் பேச்சுவார்த்தையில் இரு நாடுகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்ச்சியில் பேசிய அதிபர் விளாதிமிர் புதின், “கடந்த ஜூலையில் நாம் சந்தித்து பல்வேறு விஷயங்கள் குறித்து நன்றாக விவாதித்தது எனக்கு நினைவிருக்கிறது. நாம் பலமுறை தொலைபேசியில் பேசினோம். எனது அழைப்பை ஏற்று கசானுக்கு வருகை தந்ததற்காக நான் மிகவும் நன்றியுடையவனாக இருக்கிறேன். பிரிக்ஸ் உச்சி மாநாட்டின் தொடக்க விழாவில் இன்று நாம் பங்கேற்க இருக்கிறோம். அதன் பிறகு, நாம் இரவு விருந்தின்போதும் விவாதிக்க இருக்கிறோம். மேலும், பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் மற்ற தலைவர்களுடன் இணைந்து பல்வேறு முக்கிய முடிவுகளை நாம் எடுக்க இருக்கிறோம்.
இந்தியாவுக்கும் ரஷ்யாவுக்கும் இடையிலான ஒத்துழைப்பை நாங்கள் மிகவும் முக்கியமானதாக கருதுகிறோம். குறிப்பாக, இந்தியாவும் ரஷ்யாவும் பிரிக்ஸ் அமைப்பின் முக்கிய உறுப்பு நாடுகள் என்பதை மனதில் கொண்டுள்ளோம். இந்தியாவுக்கும் ரஷ்யாவுக்கும் இடையிலான கூட்டாண்மை மிகவும் சிறப்பு வாய்ந்தது. நமது இந்த உறவு தொடர்ந்து வளர்ந்து வருகிறது.
அரசுகளுக்கிடையேயான ஆணையத்தின் அடுத்தக் கூட்டம் டெல்லியில் டிசம்பர் 12-ம் தேதி திட்டமிடப்பட்டுள்ளது. நமது திட்டங்கள் தொடர்ந்து வளர்ச்சியடைந்து வருகின்றன. கசானில் இந்திய துணை தூதரகத்தை திறக்க நீங்கள் முடிவு செய்துள்ளீர்கள். இதனை நாங்கள் வரவேற்கிறோம். நமது ஒத்துழைப்பு இந்தியாவின் கொள்கைகளால் பயனடையும். ரஷ்யாவில் உங்களையும் (பிரதமர் மோடி) உங்கள் பிரதிநிதிகளையும் பார்த்து நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம்” என்று புதின் தெரிவித்தார்.
நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, “உங்கள் நட்பு, அன்பான வரவேற்பு மற்றும் விருந்தோம்பலுக்கு எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். பிரிக்ஸ் உச்சி மாநாட்டுக்ககா இதுபோன்ற அழகான நகரத்துக்கு வரக்கூடிய வாய்ப்பு எனக்குக் கிடைத்தது மகிழ்ச்சி அளிக்கிறது. கசான் நகரத்துடன் இந்தியா ஆழமான வரலாற்று உறவுகளைக் கொண்டுள்ளது. கசானில் தொடங்க உள்ள புதிய இந்திய தூதரகம் உறவை மேலும் வலுப்படுத்தும்.
கடந்த 3 மாதங்களில் ரஷ்யாவுக்கு நான் மேற்கொண்ட இரண்டாவது பயணம் இது. நமது நெருக்கத்தையும், ஒருங்கிணைப்பையும், ஆழமான நட்பையும் இது பிரதிபலிக்கிறது. கடந்த ஜூலை மாதம் மாஸ்கோவில் நடந்த நமது வருடாந்திர உச்சி மாநாடு அனைத்து துறைகளிலும் நமது ஒத்துழைப்பை வலுப்படுத்தியுள்ளது. 15 ஆண்டுகளில், பிரிக்ஸ் அதன் சிறப்பு அடையாளத்தை உருவாக்கியுள்ளது. இப்போது உலகின் பல நாடுகள் இதில் சேர விரும்புகின்றன.
ரஷ்யாவுக்கும் உக்ரைனுக்கும் இடையே நிலவும் மோதல்கள் அமைதியான முறையில் தீர்க்கப்பட வேண்டும் என்று நாங்கள் நம்புகிறோம். அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையை முன்கூட்டியே நிறுவுவதை நாங்கள் முழுமையாக ஆதரிக்கிறோம். முயற்சிகள் அனைத்தும் மனித நேயத்துக்கு முன்னுரிமை அளிக்கின்றன. வரும் காலங்களில் அனைத்து விதமான ஒத்துழைப்பையும் வழங்க இந்தியா தயாராக உள்ளது. ரஷ்யா – உக்ரைன் இடையே நிலவும் மோதல் விவகாரத்தில் நான் தொடர்ந்து உங்களுடன் தொடர்பில் இருந்தேன். நான் முன்பே கூறியது போல், பிரச்சனைகள் அமைதியான முறையில் தீர்க்கப்பட வேண்டும் என்று நாங்கள் நம்புகிறோம். அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையை நாங்கள் முழுமையாக ஆதரிப்போம்” என தெரிவித்தார்.