விஜயவாடா: இனி வருங்காலத்தில் ட்ரோன் தொழில்நுட்பம் முக்கியத்துவம் பெறும் என்று ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு தெரிவித்தார்.
ஆந்திர மாநிலம் அமராவதியில் நேற்று ட்ரோன் மாநாட்டை ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு குத்து விளக்கேற்றி தொடங்கி வைத்து பேசியதாவது: 1995-ல் நான் முதல்வராக இருந்தபோது, ஹைதராபாத்தில் ஐடி துறை வளர்ச்சி பெற முயற்சிகளை மேற்கொண்டேன். அந்த நாட்களில் அங்கு ஹை-டெக் சிட்டியை உருவாக்கினேன். அமெரிக்கா சென்று 15 நாட்கள் தங்கி பல பிரதிநிதிகளை சந்தித்து ஹைதராபாத் நகர வளர்ச்சிக்கு வித்திட்டேன்.
மக்கள் வசிக்க உலகிலேயே தற்போது மிகச் சிறந்த நகரமாக ஹைதராபாத் நகரம் உருவாகி உள்ளது என்பது மகிழ்ச்சி அளிக்கிறது. வெளிநாடுகளில் ஐடி துறையில் பணியாற்றுவோரில் 30 சதவீதம் பேர், தெலுங்கர்கள் என்பதிலும் பெருமை கொள்கிறேன். இப்போது சொத்து, பணத்தைவிட உண்மையான சொத்து டேட்டாதான் (தகவல்). வருங்காலங்களில் தொழிற்சாலைகள், நிறுவனங்கள், அவ்வளவு ஏன் ஒரு நாட்டுக்கே டேட்டா மிக முக்கியம். டேட்டாக்களுக்கு ஏஐ தொழில்நுட்பத்தை இணைத்தால் பல அற்புதங்கள் நடக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.
சமீபத்தில் விஜயவாடாவில் ஏற்பட்ட பெரு வெள்ளத்தின்போது ட்ரோன்கள் மூலம் பலருக்கு உணவு விநியோகம் செய்யப்பட்டது. எங்கெங்கு வெள்ளம் உள்ளது? வெள்ள நீர் வடிந்த விவரம், வெள்ளத்தில் சிக்கிய மக்கள், கால்நடைகள், வாகனங்கள் குறித்தும் ட்ரோன்கள் மூலம் அறிந்து உடனடியாக பேரிடர் மீட்பு குழுவினர் மூலம் மீட்பு பணிகளை மேற்கொண்டோம்.
விவசாயம், அடிப்படை வசதிகளில் கூட ட்ரோன்களை உபயோகித்து வருகிறோம். அந்தப் பணிகள் வியக்கும் வண்ணம் உள்ளன. நகரில் போக்குவரத்தை சரிசெய்யவும் ட்ரோன்களை உபயோகிக்கலாம். இனி வருங்காலங்களில் மருத்துவ சேவைகளிலும் ட்ரோனை உபயோகிக்கலாம். வீட்டை விட்டு வெளியே வர இயலாத நோயாளிகளுக்கும் ட்ரோன் மூலம் சிகிச்சை அளிக்கலாம்.
சில நாடுகள் இடையே நடைபெற்று வரும் போர்களில் கூட ட்ரோன் உபயோகிக்கின்றனர். ஆனால், நாம் நாட்டின், மாநிலத்தின் வளர்ச்சி பணிகளுக்காக உபயோகிப்போம். சட்டம்-ஒழுங்கை பாதுகாக்க உபயோகிப்போம். போலீஸ் துறையில் விரைவில்ட்ரோன்களை உபயோகப்படுத்துவோம். ரவுடிகளின் நடமாட்டத்தை ட்ரோன் மூலம் அறிந்து, அவர்களை கட்டுப்படுத்துவோம். இவ்வாறு முதல்வர் சந்திரபாபு நாயுடு பேசினார்.
5,500 ட்ரோன்கள் சாகசம்: இதனைத் தொடர்ந்து நேற்று மாலை விஜயவாடாவில் உள்ள கிருஷ்ணா நதிக்கரையில் 5,500 ட்ரோன்களை வானில் பறக்கவிட்ட சாகச நிகழ்ச்சி நடந்தது. இதில் பல நிறுவனங்கள் தயாரித்த விதவிதமான ட்ரோன்கள் பங் கேற்றன. லேசர் ஷோவும் நடைபெற்றது. மத்திய அமைச்சர் ராம்மோகன் நாயுடு, ஆந்திர அமைச்சர்கள், எம்பி, எம்.எல்.ஏக்கள், அரசு அதிகாரிகள், மாவட்ட ஆட்சியர்கள், பொதுமக்கள் உள்ளிட்டோர் பங்கேற்று ட்ரோன் நிகழ்ச்சியை ரசித்து மகிழ்ந்தனர்.