பாலிவுட் நடிகர் ஆமீர் கான் தற்போது சிதாரே ஜமீன் பர் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை முடித்துவிட்டு, அடுத்து 6 படங்கள் அவரது பரிசீலனையில் இருக்கின்றன. அதில் பாடகர் கிஷோர் குமாரின் வாழ்க்கை வரலாற்றுப் படமும் ஒன்றாகும்.
வழக்கறிஞர் உஜ்வல் நிகம் வாழ்க்கை வரலாற்றுப் படம், கஜினி 2, லோகேஷ் கனகராஜ், சோயா அக்தர் ஆகியோர் இயக்கும் படங்கள் இதில் அடங்கும். இதில் முதல் கட்டமாக மூன்று படங்களில் நடிக்க ஆமீர் கான் முடிவு செய்துள்ளார். கிஷோர் குமாரின் வாழ்க்கை வரலாற்றை இயக்குநர் அனுராக் பாசு இயக்குகிறார். அப்படத்தை பூசன் குமார் தயாரிக்கிறார்.
இப்படத்தில் கிஷோர் குமார் கதாபாத்திரத்தில் நடிகர் ஆமீர் கான் நடிக்க இருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இது தொடர்பாக இரு தரப்பிலும் நான்கு முறை சந்தித்துப் பேசிவிட்டனர். இப்பேச்சுவார்த்தை சரியான பாதையில் சென்று கொண்டிருப்பதாக அனுராக் பாசு தெரிவித்துள்ளார்.
கிஷோர் குமாரின் தீவிர ரசிகராகக் கருதப்படும் ஆமீர் கான் அவரது வாழ்க்கையைப் படமாக்குவதில் மிகுந்த ஆர்வம் கொண்டுள்ளார். கொரோனா காலத்திலும் நடிகர் ஆமீர் கான் மற்றும் ரன்பீர் கபூரை வைத்து ஒரு படம் எடுக்க அனுராக் பாசு முயன்றார். ஆனால் அது முடியாமல் போய்விட்டது. கிஷோர் குமாரின் சுயசரிதை படத்தில் ரன்பீர் கபூர் நடிப்பதாக இருந்தது. அதுவும் கைகூடவில்லை. ஆமீர் கான் படங்களில் நடிப்பது மட்டுமல்லாது லாகூர் 1947 என்ற படத்தைத் தயாரித்து வருகிறார். சிறந்த பாடகராகவும், இசையமைப்பாளராகவும், நடிகராகவும் இருந்தார் கிஷோர் குமார். பெங்காலி, மராத்தி, இந்தி, குஜராத்தி, கன்னடம், போஜ்புரி, மலையாளம், ஒடிசா, உருது மொழிகளில் பாடி இருக்கிறார்.
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள…
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்…