IND vs NZ: 300 அடிச்சாலும் வெளியே தான்; சர்ஃபராஸ் கானுக்கு அடுத்து வாய்ப்பில்லை – காரணம் என்ன?

India vs New Zealand 2nd Test, Sarfaraz Khan: இந்தியா – நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி வரும் அக். 26ஆம் தேதி புனேவில் நடைபெற இருக்கிறது. பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி படுதோல்வி அடைந்தது. சுமார் 36 ஆண்டுகளுக்கு பின்னர் நியூசிலாந்து அணியிடம், தனது சொந்த மண்ணில் ஒரு டெஸ்ட் போட்டியில் இந்திய அணி தோல்வியடைந்துள்ளது. 

இந்த தோல்வியினால் இந்திய அணி உடனடியாக உஷாராக வேண்டிய சூழலில் உள்ளது. ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியஷிப் இறுதிப்போட்டிக்கு தகுதிபெற இந்திய அணியின் முன் பெரிய டாஸ்க் ஒன்றும் உள்ளது. இன்னும் 7 டெஸ்ட் போட்டிகள் இருக்கின்றன, நியூசிலாந்துக்கு எதிராக சொந்த மண்ணில் 2 போட்டிகளும், ஆஸ்திரேலியாவில் 5 போட்டிகளும் இருக்கின்றன. இந்த 7 போட்டிகளில் இந்தியா 3 போட்டிகளை வென்றாக வேண்டும். கேட்பதற்கு எளிதாக இருந்தாலும் இதில் உஷாராக இல்லையென்றால் சற்று பிரச்னை வந்துவிடும். ஆஸ்திரேலியாவில் அழுத்தம் அதிகரித்துவிடும். 

பிளேயிங் லெவன் பிரச்னை

எனவே, புனே மற்றும் மும்பையில் அடுத்தடுத்து நியூசிலாந்து அணிக்கு எதிராக நடைபெற உள்ள டெஸ்ட் போட்டிகளை வென்றாக வேண்டிய கட்டாயத்தில் இந்திய அணி உள்ளது. குறிப்பாக கடந்த பெங்களூரு டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் 46 ரன்களில் ஆல்-அவுட்டானது யாராலும் ஜீரணிக்க முடியாத ஒன்றாகும். அதன்பின்னரும் நியூசிலாந்து பேட்டிங் செய்து 350 ரன்கள் முன்னிலை பெற்றது.

இந்திய அணி இதனை படுவேகமாக துரத்தி 462 ரன்களை குவித்தாலும் கூட அது வெற்றி பெற போதுமானதாக இல்லை. நியூசிலாந்து அணிக்கு 107 ரன்கள்தான் நியூசிலாந்து அணிக்கு இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. இரண்டு வேகப்பந்துவீச்சாளர்களை மட்டும் வைத்துக்கொண்டு, மூன்று ஸ்பின்னர்களை வைத்து களமிறங்கிய இந்தியாவுக்கு இந்த திட்டம் முதல் இன்னிங்ஸிலும் சரி, இரண்டு இன்னிங்ஸிலும் சரி பின்னடைவையே ஏற்படுத்தியது. 

வெளியேறப்போவது யார்?

எனவே அடுத்த டெஸ்ட் போட்டியில் பிளேயிங் லெவனை இந்தியா எப்படி அமைக்கப்போகிறது என்ற எதிர்பார்ப்பும் அனைவரிடத்திலும் இருக்கிறது. சுப்மான் கில் கடந்த போட்டியில் கழுத்து பிடிப்பு காரணமாக விளையாடவில்லை. அவருக்கு பதில் சர்ஃபராஸ் கான் விளையாடினார். சர்ஃபராஸ் கான் முதல் இன்னிங்ஸில் டக்கவுட் ஆனாலும் இரண்டாவது இன்னிங்ஸில் 150 ரன்களை அடித்து மிரட்டலாக விளையாடினார். இதனால் ஒருவேளை அடுத்த போட்டியில் சுப்மான் கில் அணிக்குள் வரும்பட்சத்தில் சர்ஃபராஸ் கான் வெளியேறுவாரா, கேஎல் ராகுல் வெளியேறுவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. பலரும் சர்ஃபராஸ் கானுக்கு தங்களின் ஆதரவை தெரிவித்து வந்தாலும், இந்திய அணியின் முன்னாள் வீரர் பார்த்தீவ் பட்டேல் கேஎல் ராகுலுக்கு ஆதரவு தெரிவித்துள்ளார். 

கருண் நாயர் நிலைமை தான்… சர்ஃபராஸ் கானுக்கு?

அதேபோல், இந்திய அணியின் முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ராவும் சர்ஃபராஸ் கானுக்கு அடுத்த போட்டியில் வாய்ப்பு மறுக்கப்பட வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் டெஸ்ட் போட்டியில் முச்சதம் அடித்த கருண் நாயரை நினைவுக்கூர்ந்து இந்த கருத்தை கூறியுள்ளார். இதுகுறித்து ஜியோ சினிமாஸில் ஆகாஷ் சோப்ரா கூறுகையில்,”ஒரு கோட்பாடு உள்ளது. கருண் நாயர் 300 ரன்களை அடித்தார். ஆனால் அடுத்த போட்டியில் அணியில் இருந்து நீக்கப்பட்டாரே… ஏன்?. 

கருண் நாயர் அந்த போட்டியில் அஜிங்க்யா ரஹானேவுக்குப் பதிலாக அவர் விளையாடினார். ரஹானே மீண்டும் வந்ததால், கருண் நாயர் வெளியே வைக்கப்பட்டார். கருண் நாயருக்கு தொடர்ச்சியாக வாய்ப்பு கிடைக்கவில்லை. அந்த கோட்பாட்டின் படி, சர்ஃபராஸ் வெளியே வைக்கப்படலாம். ஆனால் அது நடக்க வாய்ப்பு குறைவு என்று நான் உணர்கிறேன். இந்திய கிரிக்கெட்டில் இன்னும் ஒரு விஷயம் முக்கியமானது. வெளியில் இருந்து வரும் குரல்கள்… அது இப்போது சர்ஃபராஸ் கான் சாதகமாக உள்ளது” என்றார். 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.