இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி, கடைசியாக சர்வதேச கிரிக்கெட் ஆடி ஐந்தாண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டது. அதிகாரப்பூர்வமாக ஓய்வை அறிவித்து நான்காண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டது. ஆனாலும், சர்வதேச கிரிக்கெட்டில் இன்றைக்கு கோலோச்சிக்கொண்டிருக்கும் ஜாம்பவான்களைக் காட்டிலும், ஐ.பி.எல்லில் தோனி களமிறங்கும்போது வரும் ஆரவாரம் அளப்பரியதாக இருக்கிறது.
2025 ஐ.பி.எல்லில் தோனி விளையாடுவாரா என்பது இன்றும் காரசார விவாதமாக இருக்கிறது. களத்தில் ஸ்டம்புக்கு பின்னால் அவர் இருந்தாலும் சரி, கிரீஸுக்குள் அவர் பேட்டராக நின்றாலும் சரி அவர் என்ன பிளான் வைத்திருக்கிறார் என்பதை அறிந்து அவருக்கெதிராக பிளான் போடுவது என்பது சவாலான விஷயம் என இன்றும் பல கிரிக்கெட் வீரர்கள் கூறிக்கொண்டிருக்கிறார்கள்.
இந்த நிலையில், டி20 கிரிக்கெட்டில் சதமடித்த முதல் இந்திய விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் என்ற சாதனைக்குச் சொந்தக்காரரான சஞ்சு சாம்சன், ஐ.பி.எல்லில் தோனி குறித்து சுவாரஸ்யம் ஒன்றை பகிர்ந்திருக்கிறார். யூடியூப் சேனல் பேட்டியொன்றில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கெதிரான ஆட்டத்துக்கு முன்பு மேட்ச் பிளான் போடுவது குறித்து சஞ்சு சாம்சன் பேசியிருந்தார்.
அதில், “தோனியைப் பற்றி உங்களால் யோசிக்கவே முடியாது. பேட்டிங் ஆர்டரில் எல்லோருக்கும் பிளான் போடுவோம். ஆனால், தோனி பெயர் வந்தால் மட்டும், பரவாயில்லை அவருக்கடுத்த நபரைப் பாருங்கள் என்போம். எங்களால் தோனிக்கு பிளான் செய்யவே முடியாது” என்று சஞ்சு சாம்சன் கூறியிருக்கிறார்.
அடுத்தாண்டு ஐ.பி.எல்லில் விளையாடுவது குறித்து அக்டோபர் 31-ம் தேதிக்குள் தோனி தனது முடிவைத் தெரிவிப்பார் என சி.எஸ்.கே அணியின் சி.இ.ஓ காசி விஸ்வநாதன் கூறியிருக்கும் நிலையில், அடுத்தாண்டு ஐ.பி.எல் தோனி விளையாடுவாரா என்பது குறித்த உங்களின் கருத்தைக் கமெண்ட்டில் பதிவிடுங்கள்.