கடப்பா: மழையால் பிரேக் பிடிக்காமல் சாலையின் இடப்பக்கம் இருந்த சுமார் 30 அடி பள்ளத்தில் அரசு பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 25 பயணிகள் காயங்களுடன் உயிர் தப்பினர்.
ஆந்திர மாநிலம், அனந்தபுரம் மாவட்டம், கதிரியில் இருந்து கடப்பா மாவட்டம், புலிவேந்துலா எனும் ஊருக்கு ஆந்திர அரசு பேருந்து இன்று 25 பயணிகளுடன் சென்று கொண்டிருந்தது. லேசான மழை பெய்து கொண்டிருந்த நிலையில், புலிவேந்துலாவின் ஊருக்கு வெளியே குப்பை மேடு பகுதி அருகே பேருந்து சென்ற நிலையில், எதிரே வேகமாக வந்த லாரி மீது மோதாமல் இருக்க ஓட்டுநர் பிரேக் போட்டுள்ளார்.
அப்போது, பிரேக் பிடிக்காமல் அந்த பேருந்து திடீரென சாலையின் இடது புறம் உள்ள ஒரு மரத்தின் மீது மோதி, அங்கிருந்த 30 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக அனைவரும் காயங்களுடன் உயிர் தப்பினர். காயமடைந்தவர்களை புலிவேந்துலா அரசு மருத்துவமனையில் கொண்டு போய் சேர்த்தனர். இதில் இருவரின் நிலைமை சற்று கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இது குறித்து புலிவேந்துலா போலீஸார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.