குஜராத்தில் போலி நீதிமன்றம் நடத்தியவர் கைது: ஓராண்டில் 500 வழக்குகளுக்கு தீர்ப்பு; பல கோடி ரூபாய் மோசடி

அகமதாபாத்: குஜராத்தில் போலி நீதிமன்றம் நடத்திய போலி நீதிபதி கைது செய்யப்பட்டு உள்ளார். அவர் ஓராண்டில் சுமார் 500-க்கும் மேற்பட்ட வழக்குகளுக்கு தீர்ப்பு வழங்கி உள்ளார். பொதுமக்களிடம் இருந்து பல கோடி ரூபாயை மோசடி செய்துள்ளார்.

குஜராத்தின் அகமதாபாத் நகரை சேர்ந்தவர் மோரிஸ் சாமுவேல் கிறிஸ்டியன் (37). இவர் குஜராத் தலைநகர் காந்திநகரில் வாடகை கட்டிடத்தில் போலி நீதிமன்றத்தை உருவாக்கி உள்ளார்.அசல் நீதிமன்றத்தை போன்று போலியாக எழுத்தர்கள், வழக்கறிஞர்களையும் நியமித்து இருக்கிறார். நில விவகாரங்கள் சார்ந்த சிறப்பு தீர்ப்பாயத்தின் நீதிபதி என்று பொதுஅரங்கில் தன்னை அறிமுகப்படுத்தி உள்ளார்.

பல்வேறு நீதிமன்றங்களில் நிலங்கள் சார்ந்து தொடரப்பட்ட வழக்குகளின் மனுதாரர்களை கிறிஸ்டியனின் போலி வழக்கறிஞர்கள் அணுகி உள்ளனர். சிறப்பு தீர்ப்பாயத்தில் விரைந்து தீர்ப்பு வழங்கப்படும் என்று அவர்கள் வாக்குறுதி அளித்து உள்ளனர்.

இதை நம்பிய பொதுமக்கள், போலி நீதிபதி மோரிஸ் சாமுவேல்கிறிஸ்டியனின் நீதிமன்றத்தில் மனுக்களை தாக்கல் செய்துள்ளனர். அசல் நீதிமன்றம் போன்றே போலி நீதிபதி கிறிஸ்டியன் மனுக்கள் மீது விசாரணை நடத்தி உள்ளார். அவரது நீதிமன்றத்தில் நாள்தோறும் காரசாரமான விவாதங்கள் நடைபெற்று உள்ளன.அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட பிறகு கிறிஸ்டியன் தனக்கு சாதகமாக தீர்ப்புகளை வழங்கி வந்துள்ளார். கடந்த 2019-ம் ஆண்டுமுதல் காந்தி நகரில் அவர் போலி நீதிமன்றத்தை நடத்தியிருக்கிறார்.

சில ஆண்டுகளுக்கு முன்பு பாபுஜி என்பவர் நில விவகாரம் தொடர்பாக கிறிஸ்டியனின் போலி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். அவர் ரூ.200 கோடி மதிப்பிலான அரசு நிலத்தை ஆக்கிரமித்து வைத்திருந்தார். சுமார் 50 ஆண்டு காலம் அரசு நிலத்தில் குடியிருப்பதால் அந்த நிலத்தை தனது பெயருக்கு பத்திரப்பதிவு செய்ய வேண்டும் என்று பாபுஜி கோரினார்.

இந்த வழக்கை விசாரிக்க போலிநீதிபதி கிறிஸ்டியன், மனுதாரர் பாபுஜியிடம் இருந்து பெரும் தொகையை பெற்று உள்ளார். அரசு மற்றும் மனுதாரர் தரப்பு வாதங்களுக்கு பிறகு குறிப்பிட்ட அரசு நிலம் பாபுஜிக்கு சொந்தமானது என்று கிறிஸ்டியன் தீர்ப்பு வழங்கி உள்ளார். இதுதொடர்பான தீர்ப்பாணையை அகமதாபாத் ஆட்சியரிடம் பாபுஜி வழங்கி உள்ளார். ஆனால் ஆட்சியர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இதைத் தொடர்ந்து அகமதாபாத் உரிமையியல் நீதிமன்றத்தில் பாபுஜி வழக்கு தொடர்ந்து உள்ளார். கிறிஸ்டியனின் போலி நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பின் நகலை இணைத்து ரூ.200 கோடி மதிப்பிலான அரசு நிலத்தை தனது பெயரில் மாற்ற வேண்டும் என்று அவர் மனுவில் கோரியிருந்தார்.

இந்த தீர்ப்பு நகலை பார்த்து சந்தேகமடைந்த நீதிமன்ற பதிவாளர் ஹர்திக் தேசாய், போலீஸ்நிலையத்தில் புகார் அளித்தார். போலீஸார் விசாரணை நடத்தியபோது, போலி நீதிபதி மோரிஸ் சாமுவேல் கிறிஸ்டியனின் சட்டவிரோத செயல்கள் அம்பலமாகின. சில நாட்களுக்கு முன்பு அவர் கைது செய்யப்பட்டார்.

இதுகுறித்து போலீஸார் கூறியதாவது: போலி நீதிபதி கிறிஸ்டியன் அசல் நீதிமன்றங்களை போன்றேதீர்ப்பாணைகளை வழங்கியிருக்கிறார். சுமார் 5 ஆண்டுகள் போலீஸ்வலையில் சிக்காமல் அவர் மிகப்பெரிய மோசடிகளை அரங்கேற்றிஇருக்கிறார். வழக்கு விசாரணைக்காக பாபுஜியிடம் இருந்து அவர் ரூ.30 லட்சத்தை பெற்றிருக்கிறார்.

ஓராண்டில் சுமார் 500-க்கும் மேற்பட்ட வழக்குகளுக்கு கிறிஸ்டியன் தீர்ப்பு வழங்கி இருக்கிறார். அவரது பெயரில் பல கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துகள் உள்ளன. அரசு நிலம் மற்றும் பொதுமக்களிடம் இருந்து சுமார் 100 ஏக்கர் நிலங்களை அவர் தனது பெயருக்கு மாற்றியிருக்கிறார். மக்களிடம் இருந்து பல கோடி ரூபாயை அவர் அபகரித்துள்ளார். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறோம். இவ்வாறு போலீஸார் தெரிவித்தனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.