தமிழக ஆளுநர் ரவி மாற்றப்படுகிறாரா? – சலசலப்பும் உண்மை நிலையும்!

தமிழக ஆளுநராக ஆர்.என்.ரவி பொறுப்பேற்றதிலிருந்தே, ஆளும் திமுக அரசுக்கும், ஆளுநருக்கும் மோதல் போக்கு அதிகரித்துக்கொண்டே போகிறது. அமைச்சரவை ஒப்புதல் கொடுத்து அனுப்பும் கோப்புகளுக்கு ஆளுநர் ஒப்புதல் வழங்காமல் இழுத்தடிக்கிறார் என்று தமிழக அரசு நீதிமன்றம் செல்லும் நிலை ஏற்பட்டது. சமீபத்தில் கூட அமைச்சரவை முடிவுக்கு ஆளுநர் கட்டுப்பட்டவர் என்று சென்னை உயர் நீதிமன்றம் சொல்லியிருந்தது குறிப்பிடத்தக்கது. மோதல் போக்கு நீடிக்கும் அதே நேரத்தில் சுதந்திர தின தேநீர் விருந்தில் திமுக கலந்துகொள்ளாது என்று ஆர்.எஸ்.பாரதி கூறினார். ஆனால், அரசு தரப்பில் அமைச்சர்கள் மட்டும் கலந்துகொள்ளாமல், முதல்வருமே நேரடியாகக் கலந்துகொண்டது விமர்சனத்துக்கு உள்ளது.

ஆர்.என்.ரவி

இதனிடையே நடந்த அமைச்சரவை மாற்றத்துக்குப் பிறகு புதிதாகப் பொறுப்பேற்றுக்கொண்ட உயர் கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன், ‘ஆளுநர் உடன் மோதல் போக்கு இல்லாமல் செல்லவிருக்கிறோம்’ என்று சொல்லியிருந்தார். இதனை தொடர்ந்து, `திமுக ஆளுநருடன் ஒட்டி உறவாடுகிறது, பாஜக-வுடன் மறைமுக ஒப்பந்தம் போட்டிருக்கிறது’ என்று எதிர்க்கட்சியினர் குற்றச்சாட்டை முன்வைத்தார்கள். அந்த கருத்தை பலப்படுத்தும் விதமாக ஆளுநர் ‘பருவமழை முன்னேற்பாடுகளை அரசு சிறப்பாகச் செய்திருக்கிறது’ என்று அரசுக்கு நற்சான்று வழங்கியிருந்தார். கசந்த உறவு மலர்ந்தது என்று சொல்வதற்கு முன்பாகவே ஆளுநர் மீண்டும் அரசின் மீது குற்றச்சாட்டுகளை அடுத்தடுத்து அள்ளிவீச ஆரம்பித்துவிட்டார்.

சமீபத்தில் சங்கரன்கோவிலில் தனியார் அமைப்பு நிகழ்ச்சியில் பேசிய தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, “மத்திய புலனாய்வு அமைப்புகள் நூற்றுக்கணக்கான டன் அளவில் கெமிக்கல் மற்றும் சிந்தெட்டிக் போதைப்பொருள்களைப் பறிமுதல் செய்கின்றனர். நான் பொறுப்பேற்றது முதல், போதைப்பொருள் புழக்கத்தைக் கட்டுப்படுத்துவதில் கூடுதல் கவனம் செலுத்துங்கள் என காவல்துறையினரிடம் கேட்டுக்கொண்டேன். கடந்த மூன்று ஆண்டுகளில் தமிழகத்தில் அதிக அளவில் கஞ்சா புழக்கம் அதிகரித்திருக்கிறது. மத்திய புலனாய்வு அமைப்புகள் சிந்தெட்டிக் மற்றும் கெமிக்கல் போதைப் பொருள்களைப் பறிமுதல் செய்வதுபோல தமிழ்நாடு அரசு ஏன் கஞ்சாவைப் பறிமுதல் செய்ய முடிவதில்லை” என்று அரசை விமர்சனம் செய்திருந்தார்.

ஆர்.என்.ரவி

இந்த சர்ச்சை அடங்குவதற்கு முன்பாகவே, காந்தி ஜெயந்தி விழாவில் பேசிய ஆளுநர், ” தமிழகத்தில் கடந்த மூன்று ஆண்டுகளில் தலித் மக்களுக்கு எதிரான குற்றங்கள் 40 சதவிகிதம் அதிகரித்திருப்பதாகப் புள்ளிவிவரங்கள் சொல்கின்றன” என்று கொளுத்திப் போட்டார்.

இதற்கு ஆளும் தரப்பினர் பதில் சொல்லி முடிந்த நேரத்தில் இந்தி மாத நிறைவு விழாவில் ஆளுநர் பேசியது எரியும் நெருப்பில் எண்ணெய்யை ஊற்றியது போல அமைத்தது. நிகழ்ச்சி தொடக்கத்தில் தமிழ்த்தாய் வாழ்த்து படும்போது ‘தெக்கணமும் அதிர்ச்சிறந்த திராவிட நல் திருநாடும்’ என்ற வரி விடுபட்டுப் பாடப்பட்டது பெரும் சர்ச்சையானது. இந்த நிகழ்ச்சி தொடங்குவதற்கு முன்பாகவே தமிழகத்தில் இந்தி தின விழா கொண்டாடக் கூடாது என்று சொல்லியும், ஆளுநர் அந்த நிகழ்ச்சியில் பங்கேற்கக் கூடாது என்றும் திமுக மாணவரணி சார்பில் ஆர்ப்பாட்டமும் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

தமிழ்த் தாய் வாழ்த்தில் திராவிடமும் வார்த்தை விடுபட்டதைத் தொடர்ந்து ஆளுநருக்கு முதல்வர் ஸ்டாலின், “ஆளுநரா? ஆரியநரா? திராவிடம் என்ற சொல்லை நீக்கி, தமிழ்த்தாய் வாழ்த்தைப் பாடுவது தமிழ்நாட்டின் சட்டத்தை மீறுவதாகும். சட்டப்படி நடக்காமல், இஷ்டப்படி நடப்பவர் அந்தப் பதவி வகிக்கவே தகுதியற்றவர். இந்தியைக் கொண்டாடும் போர்வையில் நாட்டின் ஒருமைப்பாட்டையும் இந்த மண்ணில் வாழும் பல்வேறு இன மக்களையும் இழிவுபடுத்துகிறார் ஆளுநர். திராவிட ஒவ்வாமையால் அவதிப்படும் ஆளுநர் அவர்கள், தேசிய கீதத்தில் வரும் திராவிடத்தையும் விட்டுவிட்டுப் பாடச் சொல்வாரா… தமிழ்நாட்டையும் – தமிழ்நாட்டு மக்களின் உணர்வுகளையும் வேண்டுமென்றே தொடர்ந்து அவமதித்து வரும் ஆளுநரை ஒன்றிய அரசு உடனடியாகத் திரும்பப் பெறவேண்டும்” என்று பதிவு செய்திருந்தார்.

தமிழ்த்தாய் வாழ்த்து சர்ச்சையில் ஆளுநர் ரவி

இதற்கு ஆளுநர் ஆர்.என்.ரவி, “எனக்கு எதிராக இனவாத கருத்தைத் தெரிவித்து, தமிழ்த்தாய் வாழ்த்துக்கு நான் அவமரியாதை இழைத்ததாகப் பொய்யான குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். ஒவ்வொரு விழாவிலும் நான் தமிழ்த் தாய் வாழ்த்தை முழுமையாகப் பாடுவேன் என்பதையும் அதை பக்திச்சிரத்தையோடும், பெருமையோடும், துல்லியமாகவும் பாடுவேன் என்பதும் அவருக்கு நன்றாகத் தெரியும். ஒரு பெருமைமிகு இந்தியன் என்ற முறையில், நாட்டின் தொன்மையான, வளமான மற்றும் உயிர்ப்பு மிக்க மொழியான தமிழை நாட்டின் பிற மாநிலங்களில் பரப்ப நான் ஏராளமான முயற்சிகளைச் செய்துள்ளேன். ஒரு ஆளுநருக்கு எதிராக முதலமைச்சர் இனவாதக் கருத்தைத் தவறான குற்றச்சாட்டுகளுடன் முன்வைப்பது துரதிருஷ்டவசமாக மலிவானது மற்றும் முதலமைச்சரின் உயர் அரசியலமைப்புப் பதவியின் கண்ணியத்தைக் குறைக்கும் வகையிலும் உள்ளது” என்று பதில் சொல்லியிருந்தார்.

முதல்வர் ஸ்டாலின்

இதற்கு மீண்டும் முதல்வர் ஸ்டாலின், “எனது கடும் கண்டனத்திற்குப் பதிலளித்துள்ள மாண்புமிகு ஆளுநருக்குச் சில கேள்விகள் என்று ‘தமிழ்த்தாய் வாழ்த்தை முழுமையாக பக்திச்சிரத்தையோடு பாடுவேன்’ எனச் சொல்லும் நீங்கள், முழுமையாகப் பாடப்படாத தமிழ்த்தாய் வாழ்த்தை உடனே மேடையிலேயே கண்டித்திருக்க வேண்டாமா? அதனை ஏன் செய்யவில்லை? ‘ஒரு ஆளுநருக்கு எதிராக முதலமைச்சர் இனவாதக் கருத்தைத் தவறான குற்றச்சாட்டுகளுடன் முன்வைப்பது துரதிருஷ்டவசமாக மலிவானது’ எனச் சொல்லியிருக்கிறீர்கள். இந்த மண்ணின் தாய்மொழிப் பற்றினை இனவாதம் என்றால் அது எங்களுக்குப் பெருமைதான். கடந்த காலத்தில் நீங்கள் பேசியது நினைவிருக்கிறதா… “தமிழ்நாடு என்ற பெயரைப் புறக்கணித்து, தமிழகம் என்று அழைக்க வேண்டும்” என்றும்; “திராவிடம் என்ற கோட்பாடே பிரிட்டிஷார் அறிமுகப்படுத்தியதுதான்” என்றும், ‘திராவிட மாடல் காலாவதியான கொள்கை’ என்று சொன்ன வெறுப்புதானே, இன்றைக்குத் தமிழ்த்தாய் வாழ்த்து வரை வந்து நிற்கிறது?” என்று பதில் சொல்லியிருந்தார்.

இப்படி திமுக தொண்டர்களைத் தாண்டி ஆளுநரும், முதல்வரும் என இருவரும் மாறி மாறி பதில் சொல்லிக்கொண்டிருந்தார்கள். இந்நிலையில்தான் தமிழக ஆளுநர் மாற்றப்படவுள்ளார் என்ற செய்தி தமிழகம் முழுவதும் காட்டுத்தீ போலப் பரவியது. உண்மையில் இந்த விவகாரத்தில் நடப்பது என்ன என்று ஆளுநர் மாளிகை வட்டாரத்தில் பேசினோம். “மத்திய அரசு ஆளுநர் நியமன முறையில் மாற்றம் கொண்டுவர முயற்சி செய்வதெல்லாம் உண்மைதான். தற்போதைய ஆளுநர் ரவிக்கு நாகாலாந்தில் இரண்டு வருடம், தமிழகத்தில் மூன்று வருடம் என ஐந்துவருடமாக ஆளுநராக பணியாற்றியிருக்கிறார். ஆளுநர் ரவிக்குப் பதவி முடிந்துவிட்டது அவர் மாற்றப்படுவார் என்ற செய்திகள் சமீபத்தில் பெரிதாகப் பேசப்பட்டது.

ஆளுநர் மாளிகை

அந்த இடத்துக்கு முன்னாள் மத்திய அமைச்சர் வி.கே.சிங் நியமிக்கப்படலாம் என்கிறார்கள் சிலர். வேறு சிலரும் ஆளுநர் பதவிக்கு முயற்சி செய்வதாக சொல்கிறார்கள். தமிழக ஆளுநர் பொறுப்புக்குப் போட்டிகள் மிகக் கடுமையாகவே இருக்கிறது. இருந்தபோதிலும், ஆளுநருக்கு என்று எந்த கால வரையறை கிடையாது. ரவி மாற்றப்படுவார் என்பது தற்போதைய நிலையில் வெறும் பேசுபொருள் மட்டும் தான். மத்திய பாஜக அரசு இப்போதைக்கு ஆளுநரை மாற்றும் திட்டத்திலேயே இல்லை. தமிழக ஆளுநர் பதவிக்குக் காய் நகர்த்துபவர்களும், ஆளுநர் ரவிக்கு எதிரானவர்களும் கிளப்பிவிட்டதால் ஆளுநர் மாற்றம் குறித்த பேச்சு பேசுபொருளானது. இப்போதைக்கு ஆளுநர் ரவி மாற்றப்படுவதற்கான சாத்தியங்கள் மிக மிகக் குறைவு. மத்திய அரசு ஆளுநர் பதவி தொடர்பாக சில வரைமுறைகளை வகுக்க திட்டமிட்டுள்ளதாக வெளியான செய்தியை தொடர்ந்தே இந்த செய்தியும் பரவியுள்ளது” என்றார்கள் விளக்கமாக.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/crf99e88

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/crf99e88

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.