தமிழக கடல் பரப்பில் 500 மெகாவாட்  திறன் கொண்ட காற்றாலை மின்னுற்பத்தி நிலையம்: தமிழக அரசு தகவல்

சென்னை: “தமிழகத்தில் கடல் பரப்பில் 500 மெகாவாட் திறன் கொண்ட காற்றாலை மின்னுற்பத்தி நிலையம் அமைக்கப்பட உள்ளது. இதற்காக அடுத்த ஆண்டு டெண்டர் விடப்படும்,” என்று மத்திய அரசின் புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகத்தின் கூடுதல் செயலாளர் சுதீப் ஜெயின் கூறினார்.

இந்தியாவின் முதன்மையான காற்றாலை எரிசக்தி வர்த்தக கண்காட்சி மற்றும் மாநாடான ‘விண்டர்ஜி இந்தியா 2024’, சென்னை வர்த்தக மையத்தில் இன்று (அக்.23) தொடங்கியது. இந்திய காற்று விசையாழி உற்பத்தியாளர்கள் சங்கம், மற்றும் பிடிஏ வென்ச்சர்ஸ் பிரைவேட் லிமிடெட் ஆகியவற்றால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த மாநாடு, மின்சார அமைச்சகம், புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகம், நிதி ஆயோக் மற்றும் ‘மேக் இன் இந்தியா’ முன்முயற்சியின் கீழ் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

மாநாட்டில் சிறப்பு விருந்தினராக மத்திய அரசின் புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகத்தின் கூடுதல் செயலாளர் சுதீப் ஜெயின் பங்கேற்று பேசியதாவது: “வரும் 2030-ம் ஆண்டுக்குள் 1 லட்சம் மெகாவாட் புதுப்பிக்கத்தக்க மின்சாரம் உற்பத்தி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கடந்த 3 ஆண்டுகளாக புதுப்பிக்கத்தக்க மின்சார உற்பத்தி துறை சற்று மந்தமாக இருந்தது. தற்போது இந்த நிலை மாறி மீண்டும் வேகமெடுத்துள்ளது.

இந்தியாவில், காற்றாலை மின்சார உற்பத்திக்கான காற்றாலைகள் அமைக்க பல நிறுவனங்கள் ஆர்வம் காட்டி வருகின்றன. புதுப்பிக்கத்தக்க மின்சார உற்பத்தியை அதிகரிக்கவும், தொழில்நுட்பத்தை மேம்படுத்தி வியாபார ரீதியாக கொண்டு செல்வதற்காகவும் தனியார் நிறுவனங்களுடன் இணைந்து செயல்பட திட்டமிடப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கடல் பரப்பில் 500 மெகாவாட் காற்றாலை மின்னுற்பத்தி நிலையம் அமைக்கப்படும். இதற்காக, அடுத்த ஆண்டு டெண்டர் விடப்படும்,” என்று அவர் கூறினார்.

மாநாட்டில், தமிழ்நாடு பசுமை எரிசக்தி கழகத்தின் மேலாண்மை இயக்குநர் அனீஷ் சேகர் பேசுகையில், “காற்றாலை மின்னுற்பத்தியில் தமிழகம், இந்திய அளவில் முன்னணி மாநிலமாக திகழ்கிறது. தமிழகத்தில் கன்னியாகுமரி மாவட்டம் முப்பந்தலில் முதல் காற்றாலை மின்னுற்பத்தி நிலையம் தொடங்கப்பட்டது. தமிழகத்தில் தற்போது 10 ஆயிரம் மெகாவாட் திறன் கொண்ட காற்றாலை மின்னுற்பத்தி நிலையங்கள் உள்ளன.

சூரிய சக்தி உள்ளிட்ட புதுப்பிக்கத்தக்க மின்சாரம் உற்பத்தி 24 ஆயிரம் மெகாவாட்டாக உள்ளது. வரும் 2030-ம் ஆண்டுக்குள் 30 ஆயிரம் மெகாவாட்டாக அதிகரிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தின் மொத்த மின்தேவையில் 50 சதவீதத்தை புதுப்பிக்கத்தக்க மின்சாரம் பூர்த்தி செய்யும். தமிழகத்தில் கடல் மற்றும் நிலப்பரப்பில் 75 ஆயிரம் மெகாவாட் திறன் கொண்ட காற்றாலைகளை அமைக்க வாய்ப்புள்ளது.

தமிழகத்தில் ஜவுளி உற்பத்தி ஆலைகள் தங்களது சொந்தத் தேவைக்காக காற்றாலைகளை அமைத்து மின்னுற்பத்தி செய்து வருகின்றன” என்றார். 3 நாட்கள் நடைபெறும் இந்தக் கண்காட்சியில் உலகம் முழுவதிலும் இருந்து 300-க்கும் மேற்பட்ட காற்றாலை மின்னுற்பத்தி நிறுவனங்கள் பங்கேற்கின்றன.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.