திமுக கூட்டணி பலத்தை வலுவிழக்கச் செய்யும் முனைப்பில் எடப்பாடி – சாத்தியம்தானா?

விமர்சிக்கும் எடப்பாடி!

திமுகவுக்கும் அதன் கூட்டணிக் கட்சிகளுக்கும் தொடர்ந்து மனக்கசப்பு ஏற்படுவது அதிகரித்துக்கொண்டே போகிறது. திமுக கூட்டணியில் எந்த பிரச்னையும் இல்லை என்று அவர்களே சொன்னாலும் அவை அனைத்துமே வெறும் வாய் வார்த்தை என்று அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவிக்கிறார்கள். சமீபத்தில் திருமா பேசியதும், சாம்சங் போராட்டத்தில் அரசின் நடவடிக்கையை எதிர்த்து கம்யூனிட்ஸ் எதுவும் பேசமுடியாமல் தவித்ததையும் நாம் பார்த்தோம்.

திமுக கூட்டணி கட்சிகள்

இந்த நிலையில், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி திமுக கூட்டணிக் கட்சிகளைத் தொடர்ந்து விமர்சித்து வருகிறார். அதிலும், “திமுக கூட்டணியில் உள்ள கட்சிகள் தங்கள் அதிருப்தியை வெளிப்படுத்திவருகிறார்கள். திமுக கூட்டணிக் கட்சித் தலைவர்கள் தான் திமுகவைப் பிடித்துக்கொண்டு இருக்கிறார்கள். அவர்கள் கைவிட்டால் திமுகவின் நிலைமை என்ன ஆகும். திமுக வீழ்ந்து போய்விடும்” என்று சமீபத்தில் எடப்பாடி பழனிசாமி விமர்சனம் செய்திருந்தார்.

கூட்டணியில் புகைச்சல்!

பத்திரிகையாளர் சந்திப்பில் திமுக கூட்டணி குறித்த கேள்விக்குப் பதிலளித்த எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, “திமுக கூட்டணி வலிமையாக இருக்கிறது என்கிறார்கள். அந்த கூட்டணியில் இருக்கும் கம்யூனிஸ்ட்டும் கட்சிக்கு என்ன ஆனது… காங்கிரஸைச் சேர்ந்த வேலுச்சாமி திமுகவினர் பெருந்தலைவர் காமராஜர் குறித்துப் பேசினால் நாங்களும் பதிலுக்குப் பேசுவோம் என எச்சரிக்கை மணி அடித்திருக்கிறார். விடுதலை சிறுத்தைகள் திமுகவிடம் கோரிக்கை வைத்து எச்சரிக்கை மணி அடித்திருக்கிறது. கூட்டணியில் புகைச்சல் ஆரம்பித்து விட்டது. இந்த கூட்டணி இருக்குமா… இல்லையா என்பதைப் பொறுத்திருந்து பார்க்க வேண்டும்” என்று பதில் சொல்லியிருந்தார்.

ஸ்டாலின், எடப்பாடி பழனிசாமி

எதிர்க்கட்சி தலைவர் இப்படி சொல்லியிருந்த நிலையில் சென்னையில் திருமண நிகழ்ச்சி ஒன்றில் பேசிய முதல்வர் ஸ்டாலின், “இதுவரை கற்பனையில் தான் மிதந்து கொண்டிருந்தார் என்று நினைத்துக் கொண்டிருந்தேன். இப்போது அவர் ஜோசியராகவே மாறியிருக்கிறார். விரக்தியின் எல்லைக்கே போயிருக்கிறார். ஜோசியம் பார்த்துக் கொண்டிருக்கக்கூடிய அந்த பழனிசாமியைப் பார்த்து நான் கேட்டுக் கொள்ள விரும்புவது, எங்களுடைய கூட்டணி என்பது தேர்தலுக்காக உருவாக்கப்பட்ட கூட்டணி அல்ல… எங்களுடைய கூட்டணி என்பது கொள்கை கூட்டணி என்பதை நீங்கள் மறந்துவிடக் கூடாது. எங்கள் கூட்டணிக்குள் விவாதம் நடக்கலாம். எங்களுக்குள் பேச்சுக்கள் நடக்கலாம். விவாதங்கள் இருக்கலாமே தவிர விரிசல் ஏற்படவில்லை. விரிசல் ஏற்படாது. உறுதியாகச் சொல்கிறேன். 2026 மட்டுமல்ல, அதைத் தொடர்ந்து வரக்கூடிய எந்தத் தேர்தலாக இருந்தாலும் திமுக தான் வெற்றி பெறும்” என்று எதிர்க்கட்சி தலைவரைக் கடுமையாகத் தாக்கி பேசியிருந்தார்.

எடப்பாடியின் கணக்கு என்ன?

தொடர்ந்து எடப்பாடி பழனிசாமி திமுக கூட்டணியில் விரிசல், புகைச்சல் என்று பேசிக்கொண்டிருக்க என்ன காரணம் என்பது குறித்து அரசியல் விமர்சகர்கள் சிலரிடம் பேசினோம். “திமுக கூட்டணியில் பல்வேறு சர்ச்சைகள் இருப்பதை யாராலும் மறுக்க முடியாது. ஆனால், அந்த சர்ச்சைகள் அனைத்தும் கூட்டணியைக் கலைக்கும் அளவுக்கு இருக்கிறதா என்பது இங்கிருக்கும் மிகப்பெரிய கேள்வி… விசிக, கம்யூனிஸ்ட்டு, காங்கிரஸ் எனப் பல கட்சிகளைச் சேர்ந்த முடிவெடுக்கக் கூடிய யாரும் திமுக குறித்து விமர்சனம் செய்வதில்லை. பேசுபவர்கள் அனைவருமே இரண்டாம் கட்ட தலைவர்கள்தான். திமுகவுடன் கூட்டணி தொடரும் என்று அனைத்து கூட்டணித் தலைவர்களும் அழுத்தமாகச் சொல்லிக்கொண்டிருக்கிறார்கள்.

எடப்பாடி பழனிசாமி

இருந்தபோதிலும், பழனிசாமி கூட்டணி குறித்து மீண்டும் மீண்டும் பேசுவதற்குக் காரணம் இருக்கிறது. உங்களுக்கு திமுகவுடன் ஏதாவது மனக்கசப்பு இருக்கிறது என்றால், எங்களுடன் கூட்டணிக்கு வரலாம். கதவுகள் திறந்தே இருக்கிறது என்ற செய்தியை திமுக கூட்டணிக் கட்சிகளுக்குச் செய்தியாகச் சொல்லிக்கொண்டிருக்கிறார். ஆனாலும், தற்போது வரை அதிமுகவுக்குச் செல்ல யாரும் தயாராக இல்லை. அடுத்த தேர்தலில் திமுகவின் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருக்கும் நிலையில், தங்கள் கட்சிக் கொள்கை சித்தாந்தமே கேள்வியாகினால் தவிர அவ்வளவு சீக்கிரம் யாரும் போய்விடமாட்டார்கள். இப்போது அதிமுக இப்படிப் பேசுவதில் திமுக கூட்டணிக் கட்சிகளுக்கு மற்றொரு வாய்ப்பு இருக்கிறது என்று அடுத்த தேர்தலுக்குக் கூடுதல் இடங்களைக் கேட்க வாய்ப்பாக அமையும்” என்றார்கள் விரிவாக.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/crf99e88

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/crf99e88

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.