தென்காசி: தென்காசி மாவட்டத்தில் நேற்று (அக்.22) மதியம் ஒரு சில இடங்களில் மட்டும் இடி, மின்னலுடன் மழை பெய்தது. இந்நிலையில், இரவில் மாவட்டம் முழுவதும் பரவலாக மழை பெய்தது. இன்று காலை வரை 24 மணி நேரத்தில் மாவட்டத்தில் அதிகபட்சமாக செங்கோட்டையில் 68 மி.மீ. மழை பதிவானது.
சிவகிரியில் 46 மி.மீ., ராமநதி அணையில் 30 மி.மீ., குண்டாறு அணையில் 22 மி.மீ., சங்கரன்கோயிலில் 19.50 மி.மீ., தென்காசியில் 15 மி.மீ., ஆய்க்குடியில் 10 மி.மீ., கருப்பாநதி அணையில் 9 மி.மீ., கடனாநதி அணையில் 4 மி.மீ., அடவிநயினார் அணையில் 2 மி.மீ. மழை பதிவானது. நீர்ப்பிடிப்பு பகுதியில் பெய்த மழையால் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரிக்க தொடங்கியுள்ளது.
கடனாநதி அணை நீர்மட்டம் 40.50 அடியாகவும், ராமநதி அணை நீர்மட்டம் 53 அடியாகவும், கருப்பாநதி அணை நீர்மட்டம் 48.39 அடியாகவும், அடவிநயினார் அணை நீர்மட்டம் 73 அடியாகவும் இருந்தது. குண்டாறு அணை தொடர்ந்து முழு கொள்ளளவில் உள்ளது. குற்றாலத்தில் அனைத்து அருவிகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது.
வெள்ளப்பெருக்கு குறைந்ததால் அருவிகளில் குளிக்க சுற்றுலாப் பயணிகள் அனுமதிக்கப்பட்டனர். இருப்பினும் சுற்றுலாப் பயணிகள் கூட்டம் குறைவாக இருந்தது. சங்கரன்கோவில் சங்கரநாராயண சுவாமி கோயிலில் மழை நீர் புகுந்ததால் பக்தர்கள் தண்ணீரில் நடந்து சென்று சுவாமி தரிசனம் செய்தனர். கோயிலில் தேங்கிய மழை நீரை வெளியேற்றும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டனர்.
கோயிலை சுற்றியுள்ள பகுதிகள் மேடாக இருப்பதால் சிறிய மழை பெய்தாலே சங்கரன்கோவில் சங்கரநாராயண சுவாமி கோயிலுக்குள் மழை நீர் புகுந்து விடுகிறது. இதனால் மழைக் காலங்களில் கோயிலுக்கு வரும் பக்தர்கள் சிரமத்துக்கு ஆளாகின்றனர். மழைநீர் கோயிலுக்குள் வருவதைத் தடுக்க வடிகால் வசதியை ஏற்படுத்த வேண்டும் என்பது பக்தர்களின் நீண்டகால கோரிக்கையாக உள்ளது.