சென்னை: தமிழக வெற்றிக் கழக மாநாட்டு திடலில் இடம்பெற்றுள்ள காமராஜர், பெரியார், அம்பேத்கர் ஆகியோருக்கு நடுவே விஜய் இடம்பெற்றுள்ள கட்-அவுட் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.
விக்கிரவாண்டி அடுத்த வி.சாலையில் வரும் 27-ம் தேதி மாலை தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு நடைபெறவுள்ளது. மாநாட்டுக்கு இன்னும் 4 நாட்களே உள்ள நிலையில் மாநாட்டு ஏற்பாடுகளை ஒப்பந்ததாரர்கள் இரவு பகலாக செய்து வருகின்றனர்.
மாநாடு நுழைவாயிலில் கோட்டையின் மதில் சுவர் போல செட் அமைக்கப்பட்டு அதில் 2 யானைகள் முன்னங் கால்களை உயர்த்தி பிளிரும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. மேடையில் ‘வெற்றிக் கொள்கை திருவிழா’ என்கிற வாசகத்துடன் பேனர் வைக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், மாநாட்டு திடலில் தலைவர்களின் பிரம்மாண்ட கட்-அவுட்கள் இடம்பெற்றுள்ளன. காமராஜர், தந்தை பெரியார், அண்ணல் அம்பேத்கர் ஆகியோரின் பிரம்மாண்ட கட்-அவுட்களுக்கு நடுவே தவெக தலைவர் விஜய்யின் கட்-அவுட்டும் இடம்பெற்றுள்ளது. இது தொடர்பான வீடியோக்கள், புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.
முன்னதாக, தவெக மாநாடு குறித்து விஜய், கட்சித் தொண்டர்களுக்கு வெளியிட்ட அறிக்கையில், “மாநாட்டுப் பணிகளுக்கான குழுக்களும் தொகுதிப் பொறுப்பாளர்கள் பட்டியலும் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், நம் முதல் மாநில மாநாடான வெற்றிக் கொள்கைத் திருவிழாவின் ஏற்பாடுகளில் நீங்கள் தீவிரமாக இருப்பது எனக்குத் தெரியும். அரசியலை, வெற்றி-தோல்விகளை மட்டுமே அடிப்படையாகக் கொண்டு அளவிடாமல், ஆழமான அக உணர்வாகவும், கொள்கைக் கொண்டாட்டமாகவும் அணுகப் போகும் நம்முடைய அந்தத் தருணங்கள், மாநாட்டில் மேலும் அழகுற அமையட்டும்.
அரசியல் களத்தில், வாய்மொழியில் வித்தை காட்டுவது நம் வேலை அன்று. நம்மைப் பொறுத்தவரை, செயல்மொழிதான் நமது அரசியலுக்கான தாய்மொழி. மாநாட்டுக் களப்பணிகளில் மட்டுமல்லாமல், நம் ஓட்டுமொத்த அரசியல் களப்பணிகளிலும் நாம் அரசியல்மயப்படுத்தப்பட்டவர்கள் என்ற ஆழமான எண்ணத்தை மக்கள் மத்தியில் நீங்கள் உண்டாக்குவீர்கள் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது” என்று தெரிவித்திருந்தார்.