சியோல் (தென் கொரியா): உக்ரைன் போரில் ஈடுபட்டு வரும் ரஷ்யாவுக்கு உதவும் நோக்கில் வட கொரியா 3 ஆயிரம் ராணுவ வீரர்களை அனுப்பி உள்ளதாக தென் கொரிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக தென் கொரிய தேசிய புலனாய்வு நிறுவனம், அதன் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு விளக்கம் அளித்தது. அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த தென் கொரிய நாடாளுமன்ற உறுப்பினர்கள், “உக்ரைனுடன் போரிட்டு வரும் ரஷ்யாவுக்கு ஆதரவாக வட கொரியா 3 ஆயிரம் ராணுவ வீரர்களை அனுப்பியுள்ளது. மொத்தம் சுமார் 10,000 துருப்புக்களை வழங்குவதாக வட கொரியா உறுதியளித்துள்ளது. அவர்கள் அனைவரும் வரும் டிசம்பருக்குள் அனுப்பப்பட்டுவிடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
வட கொரியா தனது ராணுவ வீரர்களை கப்பல் மூலம் அனுப்பி உள்ளது. முன்னதாக, வட கொரியாவுக்குள் துருப்புக்கள் பயிற்சி பெற்றதற்கான அறிகுறிகள் செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதங்களில் கண்டறியப்பட்டன. ரஷ்யாவுக்கு அனுப்பப்பட்ட வட கொரிய துருப்புகள், அங்கு பல்வேறு பயிற்சி நிலையங்களுக்கு பிரித்து அனுப்பப்பட்டுள்ளனர். சூழலுக்கு ஏற்றவாறு அவர்கள் களமிறக்கப்படுவார்கள் என தெரிகிறது” என குறிப்பிட்டனர்.
கடந்த செவ்வாய்க்கிழமை செய்தியாளர்களிடம் பேசிய உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கி, ரஷ்யாவுக்கு 10,000 வீரர்களை அனுப்ப வட கொரியா தயாராகி வருவதாகக் குற்றஞ்சாட்டி இருந்தார். மேலும், இந்த போரில் வட கொரியா ஈடுபட்டதற்கான ஆதாரங்கள் தொடர்பாக நட்பு நாடுகள் தங்கள் கருத்துக்களை தெரிவிக்க வேண்டும் என்றும் அவர் வேண்டுகோள் விடுத்தார்.
எனினும், இந்த குற்றச்சாட்டை ரஷ்யாவும் வட கொரியாவும் மறுத்துள்ளன. வட கொரியா துருப்புக்களை அனுப்புவதாக தென் கொரியா கூறி இருப்பது ‘போலி செய்தி’ என்று ரஷ்யா நிராகரித்துள்ளது. தென் கொரியா மற்றும் உக்ரைனின் குற்றச்சாட்டுக்களுக்கு வட கொரியா பதில் அளிக்கவில்லை. எனினும், இந்த விவகாரம் பரவாமல் இருக்க வட கொரிய அதிகாரிகள் முயற்சிகளை மேற்கொண்டதாக தென் கொரிய நாடாளுமன்ற உறுப்பினரான லீ சியோங் – குவென் தெரிவித்துள்ளார்.