வயநாடு: காலியாக உள்ள வயநாடு மக்களவைத் தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இன்று (அக்.23) வேட்புமனு தாக்கல் செய்கிறார் பிரியங்கா காந்தி. இதனையொட்டி அவர் நேற்று தாய் சோனியா காந்தியுடன் கேரளா வந்து சேர்ந்தார். முன்னதாக விமானம் மூலம் மைசூரு வந்த அவர்கள் இருவரும் அங்கிருந்து சாலை மார்க்கமாக கேரளா வந்தடைந்தனர்.
2024 மக்களவைத் தேர்தலில் ராகுல் காந்தி கேரளாவின் வயநாடு, உத்தர பிரதேசத்தின் ரே பரேலி என இரு தொகுதிகளிலும் போட்டியிட்டு இரண்டிலும் வெற்றி பெற ஏதேனும் ஒரு தொகுதியை அவர் கைவிட வேண்டிய சூழல் உருவானது. இந்நிலையில்தான் மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் ஜூன் 17 அன்று ராகுல் காந்தி வயநாடு தொகுதியில் எம்.பி. பதவியை ராஜினாமா செய்தார். இதனையடுத்து அந்தத் தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. வயநாடு தொகுதிக்கு நவம்பர் 13-ல் இடைத்தேர்தல் நடத்தப்படும் என இந்திய தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதனையடுத்து காங்கிரஸ் எதிர்பார்க்கப்பட்டது போலவே பிரியங்காவை வேட்பாளராக அறிவித்தது. பாஜக சார்பில் நவ்யா ஹாரிதாஸ், இடதுசாரி ஜனநாயக முன்னணி சார்பில் சத்யன் மொக்கேரி ஆகியோர் களம் காண்கின்றனர்.
இந்நிலையில் இன்று (புதன்கிழமை) அவர் சோனியா காந்தி, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, ராகுல் காந்தியுடன் சென்று வேட்புமனு தாக்கல் செய்கிறார். வேட்புமனு தாக்கலுக்கு முன் வயநாட்டில் கல்பேட்டா பேருந்து நிலைய பகுதியில் பிரியங்கா, ராகுல் காந்தி ரோடு ஷோ நட்த்துகின்றனர். காலை 11.45 மணியளவில் இந்த பேரணி நடைபெற வாய்ப்புள்ளது. வயநாடு இடைத்தேர்தலில் போட்டியிடுவதன் மூலம் பிரியங்கா காந்தி தேர்தல் அரசியலில் காலடி எடுத்து வைக்கிறார்.
தேர்தல் அரசியல் பிரவேசம்: பிரியங்கா காந்தியின் தேர்தல் அரசியல் பிரவேசம் இது. அதனாலேயே வயநாடு மீண்டும் ஒரு நட்சத்திர தொகுதியாக கவனம் பெறுகிறது. பிரியங்கா காந்தி தேர்தல் களம் காணலாம் என்ற பேச்சுக்கள் 2019 மக்களவைத் தேர்தல் தொட்டே உலாவந்த நிலையில் இப்போதுதான் அது சாத்தியப்பட்டுள்ளது. 52 வயதில் தேர்தல் களம் காணும் பிரியங்கா காந்தி ஒருவேளை தொகுதியைக் கைப்பற்றினால் நாடாளுமன்றத்தில் சோனியா காந்தி, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி என மூவரின் இருப்பும் தாக்கத்தை ஏற்படுத்தும்.
கடந்த 2019 தேர்தலில் உ.பி.யின் அமேதியில் ராகுல் காந்தி பாஜக வேட்பாளர் ஸ்மிருதி இராணியிடம் மோசமாக தோற்றார். ஆனால் கேரளாவின் வயநாட்டில் வெற்றி பெற்றார். இந்திய கம்யூனிஸ்ட் வேட்பாளரை 4,31,770 வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தினார் ராகுல். இந்த முறை வயநாட்டில் ராகுல் வெற்றி வாய்ப்பு விமர்சனங்களுக்கு உள்ளான நிலையில் தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட ஆனி ராஜாவை 3,64,422 வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தி தொகுதியை தக்கவைத்துக் கொண்டார். கடந்த முறையைவிட இந்த வெற்றி வித்தியாசம் குறைவுதான் என்றாலும் காங்கிரஸைத் தழுவிக் கொள்ள வயநாடு தயாராகத் தான் இருக்கிறது என்பதை காட்டுவதாக அது அமைந்தது. வயநாடு இந்த வகையில் காங்கிரஸின் கோட்டையாகவே கருதப்படுவதால், பிரியங்கா இங்கே எளிதாக வென்றுவிடுவார் என்றே கணிக்கப்பட்டு அவர் களம் இறக்கப்பட்டுள்ளார். ஆனால் வயநாடு நிலச்சரிவுக்குப் பிந்தைய சூழல் எப்படி இருக்கும் என்பது பற்றிய கணிப்புகள் இன்னும் தெளிவாக வெளிவரவில்லை. இருப்பினும் இப்போதைக்கு பிரியங்கா பலமான வேட்பாளரகவே அறியப்படுகிறார்.
தெற்கின் பலம்.. தெற்கில் தன்னை வலுப்படுத்திக் கொள்ள கேரளாவை முக்கியமான மையமாக காங்கிரஸ் கருதுவதும் பிரியங்காவை அங்கே களமிறக்கக் காரணம் என்று கூறப்படுகிறது. மேலும் ராகுல் காந்தி வயநாட்டை விடுத்து ரேபரேலியை தக்கவைத்துக் கொண்டிருப்பது காங்கிரஸ் கேரளாவை கைவிடுகிறது என்று பார்ப்பதை விடுத்து வயநாட்டை ஸ்வீகரித்துக் கொள்ள பிரியங்காவை களமிறக்குகிறது என்றே பார்க்கலாம்.
வயநாடு காந்தி குடும்பத்துக்கு மிகவும் முக்கியமானது. காந்தி குடும்பத்துக்கு தமிழகத்தில் நேரடி பிரதிநிதி இல்லை. கர்நாடகாவிலாவது நம்பகத்தன்மை மிகுந்த டிகே சிவகுமார் இருக்கிறார். அதனால் வயநாட்டில் பிரியங்கா காந்தியை களம் இறக்குவது இப்போது அரசியல் ரீதியாக சிறந்த உத்தி. காரணம் கேரளாவில் பாஜக தடம் பதித்துள்ளது. சுரேஷ் கோபி எம்.பி.யாகி உள்ளார். இந்தச் சூழலில் காந்தி குடும்பத்தின் நேரடி சுவடு கேரளாவில் இருப்பது கேரளாவுக்கு மட்டுமல்லாது ஒட்டுமொத்த தெற்குக்கும் அவசியமாகிறது. அதுமட்டுமல்லாது காந்தி குடும்பம் தெற்கை புறக்கணிக்கிறது என்ற புகார்களுக்கு பிரியங்கா காந்தியை களம் இறக்குவது முற்றுப்புள்ளி வைக்கும் என்பதால் அவர் களம் இறக்கப்பட்டுள்ளார்.