ரஷ்யாவின் கசான் நகரில் நடைபெற்ற பிரிக்ஸ் உச்சி மாநாட்டுக்கு இடையே சீன அதிபர் ஜி ஜின்பிங், பிரதமர் மோடி ஆகியோர் சந்தித்து பேசியது இருதரப்பு உறவை மேம்படுத்துவதில் மிக முக்கியமானது என சீன கூறியுள்ளது.
பிரிக்ஸ் அமைப்பின் 16-வது உச்சி மாநாடு ரஷ்யாவின் கசான் நகரில் கடந்த புதன் கிழமை நடைபெற்றது. இந்த மாநாட்டில் பங்கேற்க சென்ற பிரதமர் மோடி, சீன அதிபர் ஜி ஜின்பிங்கை சந்தித்து இரு தரப்பு பேச்சுவார்த்தை நடத்தினார்.
கடந்த 2020-ம் ஆண்டு கல்வான் பள்ளத்தாக்கில் இரு நாட்டு வீரர்கள் இடையே நடைபெற்ற மோதல் காரணமாக இரு நாடுகள் இடையேயான உறவு பாதித்தது. அதன்பின் சுமார் 5 ஆண்டுகளுக்குப்பின் இரு தலைவர்களும் சந்தித்து இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் பரஸ்பர நம்பிக்கை, பரஸ்பர மரியாதை, பரஸ்பர உணர்வு இரு நாட்டு உறவுகளின் அடிப்படையாக இருக்க வேண்டும் என்பதை பிரதமர் மோடி வலியுறுத்தினார். இந்த சந்திப்பில் இரு நாடுகள் இடையே லடாக் எல்லையில் ரோந்து செல்லும் ஒப்பந்தத்துக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. இந்த சந்திப்பை தொடர்ந்து இரு நாடுகள் இடையேயான உறவை சுமூகமாக உயர் அதிகாரிகள் மட்டத்திலான பல்வேறு இருதரப்பு பேச்சுவார்த்தைகளை தொடர உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டன.
இந்த சந்திப்பு குறித்து சீன வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் லின் ஜியான் கூறியதாவது: இந்தியா – சீனா உறவுகளை மீண்டும் வளர்ச்சி பாதை நோக்கி கொண்டு செல்ல இருநாட்டு தலைவர்களும் ஒப்புக் கொண்டனர். இந்தியா- சீன எல்லையில் அமைதி நிலவுவதை உறுதி செய்ய சிறப்பு பிரதிநிதிகள் அளவிலான பேச்சுவார்த்தையை நன்கு பயன்படுத்திக்கொள்ளவும் இரு தலைவர்களும் சம்மதித்தனர். இது மிக முக்கியமானது. இந்தியாவுடன் இணைந்து செயல்பட்டு, இருதரப்பு உத்தரவை புதிய உச்சத்துக்கு கொண்டு செல்ல சீனா தயார். இரு நாடுகள் இடையேயான தகவல் தொடர்பு, ஒத்துழைப்பு, பரஸ்பர நம்பிக்கையை மேம்படுத்தவும், வேறுபாடுகளை முறையாக கையாளவும் சீனா தயாராக உள்ளது. இவ்வாறு லின் ஜியான் கூறினார்.
இந்திய வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மேஸ்திரி கூறுகையில், ‘‘ பரஸ்பர நலன், மரியாதையில் அக்கறை கொண்டு பக்குவத்துடன் செயல்பட்டால், இந்தியாவும், சீனாவும், அமைதியான, நிலையான மற்றும் பயன் அளிக்கக் கூடிய இருதரப்பு உறவுகளை பெற முடியும் என்பதை பிரதமர் மோடி, அதிபர் ஜி ஜின்பிங் ஆகியோர் வலியுறுத்தினர்’’ என தெரிவித்தார்.