உத்தரப்பிரதேசத்தில் காலியாக இருக்கும் 9 சட்டமன்றத் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த இடைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சி தங்களுக்கு மூன்று தொகுதிகள் ஒதுக்க வேண்டும் என்று சமாஜ்வாடி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ்விடம் கேட்டது.
இது தொடர்பாக இரண்டு கட்சித் தலைவர்களும் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர். இப்பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படவில்லை. திடீரென சமாஜ்வாடி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் டிவிட்டரில் வெளியிட்டு இருக்கும் ஒரு பதிவு காங்கிரஸ் கட்சியை அதிர்ச்சியடையச் செய்துள்ளது.
அகிலேஷ் யாதவ் தனது பதிவில், “வெற்றியை இலக்காகக் கொண்டு 9 தொகுதியிலும் சைக்கிள் சின்னத்தில் இந்தியா கூட்டணி போட்டியிடும். தொகுதிகள் முக்கியம் இல்லை. வெற்றிதான் தான் முக்கியம். ஒரு மிகப்பெரிய வெற்றிக்காகக் காங்கிரஸும், சமாஜ்வாடி கட்சியும் தோளோடு தோள் கொடுத்து நிற்கின்றன. இடைத்தேர்தலில் இந்தியா கூட்டணி மிகப்பெரிய சாதனை படைக்க இருக்கிறது. காங்கிரஸ் கட்சியின் உயர்மட்டத் தலைவர்கள் முதல் பூத் மட்ட தொண்டர்கள் வரை அனைவரும் இணைந்து சமாஜ்வாடிக்குப் பலம் சேர்த்துள்ளனர்” என்று குறிப்பிட்டுள்ளார்.
அதோடு நாட்டின் அரசியலமைப்பு மற்றும் மதநல்லிணக்கத்தைக் காப்பாற்றுவதற்கான தேர்தல் இது என்றும், ஒரு வாக்கைக்கூட வீணாக்கவேண்டாம் என்றும் அதில் குறிப்பிட்டுள்ளார்.
அகிலேஷ் யாதவின் பதிவு காங்கிரஸ் கட்சிக்கு அதிர்ச்சியைக் கொடுப்பதாக அமைந்துள்ளது. காங்கிரஸ் கட்சிக்கு இடைத்தேர்தலில் சீட் உண்டா இல்லையா என்ற கேள்வி எழுந்துள்ளது. சமாஜ்வாடி கட்சி ஏற்கனவே 6 தொகுதிகளுக்கு வேட்பாளர்களை அறிவித்து விட்டது.
இரண்டு தொகுதிகளைக் காங்கிரஸ் கட்சிக்குக் கொடுப்பதாக ஆரம்பத்தில் சமாஜ்வாடி கட்சி தெரிவித்தது. ஆனால் இப்போது அகிலேஷ் யாதவ் பதிவைப் பார்க்கும்போது அந்த இரண்டு தொகுதியும் கிடையாது என்றே தெரிகிறது. மகாராஷ்டிராவில் சமாஜ்வாடி கட்சிக்குக் கூடுதல் தொகுதிகள் கொடுக்கும்படி காங்கிரஸ் கட்சியிடம் அகிலேஷ் யாதவ் கேட்டுக்கொண்டார். ஆனால் காங்கிரஸ் அதற்குச் சம்மதிக்கவில்லை. இதனால்தான் அகிலேஷ் யாதவ் உத்தரப்பிரதேச இடைத்தேர்தலில் இம்முடிவை எடுத்திருப்பதாகக் கூறப்படுகிறது. எனவே அனைத்து தொகுதியிலும் சமாஜ்வாடி கட்சியே போட்டியிடட்டும் என்று கருதி விட்டுக்கொடுத்துவிட்டு மகாராஷ்டிரா சட்டமன்றத் தேர்தலில் கவனம் செலுத்துவது குறித்து காங்கிரஸ் பரிசீலித்து வருகிறது.
மகாராஷ்டிராவில் ஏற்கனவே தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை இழுத்துக்கொண்டே செல்கிறது. அகிலேஷ் யாதவ் பதிவு குறித்து காங்கிரஸ் இன்னும் எந்தவித கருத்தும் தெரிவிக்கவில்லை.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/2b963ppb
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/2b963ppb