ராஞ்சி: ஜார்க்கண்டின் காந்தே பேரவைத் தொகுதியில் போட்டியிடுவதற்காக ஜேஎம்எம் கட்சியின் எம்எல்ஏவும், ஹேமந்த் சோரனின் மனைவியுமான கல்பனா சோரன் இன்று (வியாழக்கிழமை) வேட்புமனு தாக்கல் செய்தார்.
இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், “எனது காந்தே தொகுதி மக்களுக்கு சேவை செய்வதற்காக, வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடுவதற்காக ஜேஎம்எம் சார்பில், இன்று எனது வேட்புமனுவினை தாக்கல் செய்தேன்” என்று தெரிவித்துள்ளார்.
ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரனின் மனைவியான கல்பனா சோரன், காந்தே தொகுதியில் ஜூன் 4-ம் தேதி நடைபெற்ற இடைத்தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அவர் தன்னை எதிர்த்து போட்டியிட்ட பாஜக வேட்பாளரான திலிப் குமார் வர்மாவை 27,149 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்திருந்தார்.
முன்னதாக, ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியின் எம்எல்ஏ சர்ஃபாராஸ் அஹ்மத் தனது பதவியை ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து அங்கு இடைத்தேர்தல் நடந்தது.
தலைவர்கள் வேட்பு மனு தாக்கல்: மாநில முதல்வர், பாஜகவின் அமர் குமார் பவுரி, அமைச்சர் பன்னா குப்தா மற்றும் முன்னாள் முதல்வர் சம்பை சோரன் போன்ற மூத்த அரசியல் தலைவர்கள் இன்று (வியாழக்கிழமை) வேட்பு மனு தாக்கல் செய்ய திட்டமிட்டுள்ளனர்.
காங்கிரஸ் மற்றும் பாஜகவைச் சேர்ந்த 51 வேட்பாளர்கள் இன்று வேட்புமனு தாக்கல் செய்ய உள்ளதாக விவரம் அறிந்தவர்கள் தெரிவித்தனர்.
ஜார்க்கண்ட் சட்டப்பேரவைக்கு நவம்பர் 13 மற்றும் நவம்பர் 20 என இரண்டு கட்டங்களாக பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. பதிவான வாக்குகள் நவம்பர் 23ம் தேதி எண்ணப்படுகின்றன. முதல்கட்ட வாக்குப்பதிவுக்கான வேட்பு மனு தாக்கல் அக்டோபர் 18-ம் தேதி தொடங்கி 25ம் தேதி நிறைவடைகிறது. இரண்டாம் கட்ட வாக்குப்பதிவுக்கான வேட்புமனு தாக்கல் அக்டோபர் 22ம் தேதி தொடங்கி 29ம் தேதி நிறைவடைகிறது.