மலை மாவட்டமான நீலகிரியில் பழங்குடிகள் மற்றும் ஆதிதிராவிடர் மக்கள் அதிக எண்ணிக்கையில் வாழ்ந்து வருகின்றனர். அந்த மக்களை கல்வியில் மேம்படுத்தும் வகையில் பழங்குடியினர் மற்றும் ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் சிறப்பு பள்ளிகள் மாவட்டத்தின் பல பகுதிகளிலும் தொடங்கப்பட்டது. மாணவர்களின் எண்ணிக்கை குறைவதாகச் சொல்லி நீலகிரியில் இயங்கி வந்த அரசு பள்ளிகளை தொடர்ந்து மூடி வருகின்றனர். இந்நிலையில், பந்தலூர் அருகில் உள்ள கையுன்னி பகுதியில் கடந்த 50 ஆண்டுகளுக்கு மேலாக இயங்கி வந்த ஆதிதிராவிடர் நலத்துறையின் தொடக்கப்பள்ளியை மூடியிருக்கிறது கல்வித்துறை. இதற்கு உள்ளூர் மக்கள் முதல் கல்வியியல் செயல்பாட்டாளர்கள் வரை கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இது குறித்து தெரிவித்த கல்வித்துறை அதிகாரிகள், “நூற்றுக்கணக்கான மாணவர்கள் பயின்று வந்த இந்த பள்ளியில் படிப்படியாக மாணவர்களின் எண்ணிக்கை குறைந்தது. நடப்பு கல்வியாண்டில் 2 மாணவர்கள் 2 மாணவிகள் என 4 பேர் மட்டுமே பயின்று வந்தனர். ஒரு பொறுப்பு ஆசிரியரும் பணியாற்றி வந்தார். 4 மாணவர்களும் அருகில் உள்ள பள்ளியில் சேர்க்கப்பட்டதால் வேறுவழியின்றி பள்ளியை மூட வேண்டியதாயிற்று” என்றனர்.
ஆதிதிராவிடர் பள்ளி மூடப்பட்டது குறித்து தெரிவிக்கும் கல்வியாளர்கள், “அரசு பள்ளிகளில் மாணவர் எண்ணிக்கை குறைவதாக சொன்னாலும் நீலகிரியில் அது உண்மையில்லை. உணவு, குடியிருப்பு என அடிப்படை தேவைகளுக்காக போராடும் பழங்குடிகளும் பெருந்தோட்ட தினக்கூலிகளும் தங்கள் குழந்தைகளை தனியார் பள்ளியில் சேர்க்க வாய்ப்பில்லை. நீலகிரியில் பழங்குடி மற்றும் ஆதிதிராவிடர் மாணவர்களின் பள்ளி இடைநிற்றல் சர்வசாதாரணமான ஒன்றாக பார்க்கப்படுகிறது.
அர்ப்பணிப்புள்ள சில ஆசிரியர்கள், அதிகாரிகளைத் தவிர இதைப் பற்றி மற்ற ஆசிரியர்களோ கல்வித்துறை அதிகாரிகளோ கண்டுகொள்வதில்லை. இதனால்தான் எண்ணிக்கை குறைந்து பள்ளிகளை மூட வேண்டிய நிலை ஏற்படுகிறது. அந்த மக்கள் வாழும் பகுதிகளில் தொடர்ந்து ஆய்வு செய்து இடைநிற்றல் மாணவர்களை மீண்டும் பள்ளிகளில் சேர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்கின்றனர்.