வயநாடு: வயநாட்டில் பிரியங்கா காந்தியின் வேட்புமனு தாக்கல், குடும்ப அரசியலின் வெற்றியையும் தகுதியின் தோல்வியையும் காட்டுகிறது என பாஜக விமர்சனம் செய்துள்ளது.
கேரள மாநிலம் வயநாடு மக்களவைத் தொகுதிக்கான இடைத்தேர்தல் நவம்பர் 13-ம் தேதி நடைபெற உள்ளது. இங்கு காங்கிரஸ் சார்பில் கட்சியின் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி வதேரா நேற்று முன்தினம் வேட்பு மனு தாக்கல் செய்தார்.
இதுகுறித்து பாஜக செய்தித் தொடர்பாளர் கவுரவ் பாட்டியா நேற்று டெல்லியில் செய்தியாளர்களிடம் கூறியதாவது: வயநாட்டில் பிரியங்கா காந்தி வேட்புமனு தாக்கல் செய்துள்ளார். இது நேரு-காந்தி குடும்பத்தின் ஊழல் மற்றும் குடும்ப அரசியலின் வெற்றியையும் தகுதியின் தோல்வியையும் காட்டுகிறது.
பிரியங்கா காந்தி தனது தேர்தல் பிரமாண பத்திரத்தில் அறிவித்துள்ள சொத்துகள், அவரும் அவரது கணவர் ராபர்ட் வதேராவும் வைத்திருக்கும் சொத்துகளை காட்டிலும் குறைவாக உள்ளது. இது நேரு-காந்தி குடும்பம் மற்றும் ராபர்ட் வதேரா செய்த ஊழல்களின் ஒப்புதல் வாக்குமூலமாக உள்ளது. காங்கிரஸ் கட்சி அளித்த பொறுப்புகளை அவர் நிறைவேற்றவில்லை. என்றாலும் அவருக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.
கிழக்கு உ.பி. காங்கிரஸ் பொறுப்பாளராக அவர் நியமிக்கப்பட்டார். அப்போது 80 மக்களவைத் தொகுதிகளில் காங்கிரஸ் ஒன்றில் மட்டுமே வெற்றி பெற்றது. என்றாலும் பிரியங்கா பதவி உயர்வு பெற்று, 2020-ல் உ.பி. முழுவதற்கும் கட்சியின் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டார். 2022-ல் 403 சட்டப்பேரவை தொகுதிகளில் காங்கிரஸ் இரண்டில் மட்டுமே வெற்றி பெற்றது. ஆனாலும் அவருக்கு பதவி உயர்வு அளிக்கப்பட்டு, வயநாடு மக்களவை இடைத்தேர்தலில் போட்டியிட காங்கிரஸ் வாய்ப்பு வழங்கியுள்ளது. இவ்வாறு கவுரவ் பாட்டியா கூறினார்.