மகாராஷ்டிரா தேர்தல்: தாக்கரே வியூகத்தை உடைத்து சொந்த ஊரில் ஜெயிப்பாரா முதல்வர் ஏக்நாத் ஷிண்டே?

மகாராஷ்டிரா சட்டமன்ற தேர்தலுக்கான வேலையில் அரசியல் கட்சிகள் முழுவேகத்தில் ஈடுபட்டுள்ளது. ஆளும் மஹாயுதி கூட்டணியிலும், எதிர்க்கட்சிகளின் மகாவிகாஷ் அகாடி கூட்டணியிலும் இன்னும் தொகுதி பங்கீடு முடிவு செய்யப்படாமல் இருக்கிறது.

வேட்பு மனுத்தாக்கல் செய்ய நல்ல நாள் என்பதால் பேச்சுவார்த்தையில் இறுதி செய்யப்பட்ட தொகுதிகளுக்கு மட்டும் இரண்டு கூட்டணிகளும் வேட்பாளர்களை அறிவித்து இருக்கிறது. இத்தேர்தல் முதல்வர் ஏக்நாத் ஷிண்டேயிக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக கருதப்படுகிறது. மக்களவைத் தேர்தலில் சொந்த ஊரான தானே மாவட்டத்தில் தனது செல்வாக்கை தக்கவைத்துக்கொண்ட ஏக்நாத் ஷிண்டே இப்போது சட்டமன்றத் தேர்தலில் தனது செல்வாக்கை தக்கவைத்துக்கொள்ளவேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார். மும்பை மெட்ரோபாலிடன் பகுதியில் உள்ள மும்பை, தானே, பால்கர், ராய்கட் மாவட்டத்தில் மொத்தம் 65 தொகுதிகள் இருக்கிறது.

இதில் 36 தொகுதிகள் மும்பையில் இருக்கிறது. கடந்த 2019-ம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில் மும்பையில் பா.ஜ.க 16 தொகுதியிலும், பிளவுபடாத சிவசேனா 14 தொகுதியிலும் வெற்றி பெற்றன. மும்பை தவிர்த்து மும்பை மெட்ரோபாலிடன் பகுதியில் பா.ஜ.க 10 தொகுதியிலும், சிவசேனா 7 தொகுதியிலும் வெற்றி பெற்றன. முதல்வர் ஏக்நாத் ஷிண்டேயின் சொந்த ஊரான தானேயில் மொத்தம் 4 தொகுதிகள் இருக்கிறது. இதில் பா.ஜ.க ஒரு தொகுதியிலும், தேசியவாத காங்கிரஸ் ஒரு தொகுதியிலும் வெற்றி பெற்றுள்ளன. தானே நகரத்திற்குள் இருக்கும் மாஜிவாடா, கோப்ரி தொகுதிகள் இப்போது சிவசேனா வசம் இருக்கிறது.

இதில் கோப்ரி தொகுதியில் முதல்வர் ஷிண்டே போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா, மறைந்த சிவசேனா தலைவர் ஆனந்த் திகேயின் உறவினர் கேதார் திகேயை களத்தில் இறக்கி இருக்கிறது. இப்போது ஆனந்த் திகே பெயரைச்சொல்லித்தான் ஏக்நாத் ஷிண்டே தனது சொந்த ஊரில் அரசியல் செய்து கொண்டிருக்கிறார்.

இதனால் சட்டமன்ற தேர்தலில் மக்கள் துரோகிகளுக்கு தக்க பாடம் கற்பிப்பார்கள் என்று உத்தவ் தாக்கரே கட்சியைச் சேர்ந்த முன்னாள் எம்.எல்.ஏ.ராஜன் விச்சாரே தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் அளித்துள்ள பேட்டியில், ”தானே மாநகராட்சியில் ஊழல் நிறைந்துள்ளது. இது குறித்து பா.ஜ.க எம்.எல்.ஏ.சஞ்சய் கேல்கரும் பல முறை கேள்வி எழுப்பி இருக்கிறார். தனக்கு நற்பெயர் ஏற்படுத்திக்கொள்வதற்காக ஆனந்த் திகே பெயரை முதல்வர் ஏக்நாத் ஷிண்டே பயன்படுத்துவதை மக்கள் அறிவார்கள். துரோகிகளுக்கு மக்கள் தக்கபாடம் கற்பிப்பார்கள், எங்களது கட்சிக்கு வாய்ப்பு கொடுப்பார்கள்” என்று தெரிவித்தார்.

உத்தவ் தாக்கரே, ஏக்நாத் ஷிண்டே

இது குறித்து சிவசேனா(ஷிண்டே) எம்.பி. நரேஷ் மஷ்கேயிடம் பேசியபோது, ”மக்களவை தேர்தல் முடிவுகள் மக்கள் ஏக்நாத் ஷிண்டே பக்கம் திரும்பி இருப்பதை பார்க்க முடியும். முதல்வர் ஏக்நாத் ஷிண்டே அனைத்து துறைகளிலும் செய்யும் பணிகளை மக்கள் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறார்கள்.நாங்கள் செய்துள்ள பணிகள் தானே மட்டுமல்லாது மகாராஷ்டிரா முழுவதும் எங்களுக்கு கைகொடுக்கும் என்று நம்புகிறோம். எதிர்க்கட்சிகள் சிலவற்றை அரசியலாக்க முயற்சிக்கின்றன” என்றார்.

தானே மட்டுமல்லாது அருகில் உள்ள நவிமும்பையிலும் தனது செல்வாக்கை நிலைநாட்ட ஏக்நாத் ஷிண்டே முயற்சி செய்துகொண்டிருக்கிறார். இது நவிமும்பையில் பல ஆண்டுகளாக ஆதிக்கம் செலுத்திக்கொண்டிருக்கும் கணேஷ் நாயக்கிற்கு பிடிக்கவில்லை. இதனால் கணேஷ் நாயக் மகன் பா.ஜ.கவில் இருந்து விலகி சரத்பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் கட்சியில் சேர்ந்துவிட்டார்.

மற்றொரு புறம் கல்யான் மேற்கு மற்றும் அம்பர்நாத் தொகுதிகளை இம்முறை பா.ஜ.க கேட்டுக்கொண்டிருக்கிறது. இதனால் அத்தொகுதிகளுக்கு முதல்வர் ஷிண்டே இன்னும் வேட்பாளர்களை அறிவிக்காமல் இருக்கிறார். ஏற்கெனவே இருக்கும் எம்.எல்.ஏ.க்கள் மீது உள்ளூர் கட்சி நிர்வாகிகள் புகார் கொடுத்து இருப்பதாக கூறப்படுகிறது. எனவே தானே மாவட்டத்தில் செல்வாக்கை தக்கவைத்துக்கொள்ள இரண்டு தொகுதியிலும் வேட்பாளர்களை மாற்றுவது குறித்து ஏக்நாத் ஷிண்டே பரிசீலித்து வருகிறார்.

ஏக்நாத் ஷிண்டே

தானே மாவட்டத்தை தக்கவைத்துக்கொள்வதன் மூலம் மட்டுமே தொடர்ந்து ஏக்நாத் ஷிண்டேயால் சிவசேனாவை தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்துக்கொள்ள முடியும் என்று அரசியல் பார்வையாளர்கள் தெரிவித்தனர். மக்களவை தேர்தலில் தானே மற்றும் கல்யான் தொகுதியில் ஏக்நாத் ஷிண்டேயின் வேட்பாளர்கள் வெற்றி பெற்றுள்ளனர். இதற்காக ஏக்நாத் ஷிண்டே மகன் ஸ்ரீகாந்த் ஷிண்டே கல்யான், டோம்பிவலி, அம்பர்நாத் பகுதியில் கோடிக்கணக்கான பணம் செலவு செய்து பொதுநிகழ்ச்சிகளை நடத்தினர்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/2b963ppb

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/2b963ppb

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.