சுகாதார அமைச்சின் 167 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீட்டில் மாத்தறை தாதியர் கல்லூரியில் (Nilwala College of Nursing) நவீன வசதிகளுடன், தாதியர் கல்வி நடவடிக்கைகளுக்காக நிர்மாணிக்கப்பட்ட நான்கு மாடிகளைக் கொண்ட விரிவுரை மண்டபங்கள் நேற்று (23) திறந்து வைக்கப்பட்டது.
மாத்தறை தாதியர் கல்லூரியின் அபிவிருத்திக்காக சுகாதார அமைச்சினால் 410 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீட்டில் செயற்திட்டமொன்று அமுல்படுத்தப்பட்டுள்ளதுடன் அதன் பயனாக இந்த நான்கு மாடிகளை கொண்ட விரிவுரை மண்டபங்கள் இன்று சுகாதார அமைச்சின் செயலாளர் டாக்டர். பாலித மஹிபாலவினால் திறந்து வைக்கப்பட்டது. இதற்கு முன்னர், 165 மில்லியன் ரூபா செலவில் மாணவர் விடுதி மற்றும் 65 மில்லியன் ரூபா செலவில் நிர்வாக கட்டிடம் ஒன்றும் வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது. இந்த விரிவுரை மண்டபம் வழங்குவதன் மூலம், மாத்தறை தாதியர் கல்லூரி பரிபூரணமான தாதியர் கல்லூரியாக மாற்றமடையும்.
மாத்தறை தாதியர் கல்லூரியில் தற்போது 425 மாணவர்கள் தாதியர் கல்வியைத் தொடர்கின்றனர்;. இந்த புதிய கட்டடத் தொகுதி; 04 விரிவுரை மண்டபங்களைக் கொண்டுள்ளது ஒரு விரிவுரை மண்டபத்தில் சுமார் 100 மாணவர்கள் ஒரே நேரத்தில் விரிவுரையில் பங்குபற்றலாம். ஒரு நூலகம், ஒரு தொழில்நுட்ப பிரிவு, 02 வெளிக்கள செயற்பாட்டுப் பிரிவுகள் மற்றும் நவீன உபகரணங்களுடன் சுமார் 200 பேர் பங்குபற்றக் கூடிய ஒரு கேட்போர் கூடமும் இங்கு காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.