மீனவர் பிரச்சினைக்கு தீர்வு காண இலங்கை அரசிடம் இந்திய தூதரகம் வலியுறுத்தல்

ராமேசுவரம்: இந்திய – இலங்கை இரு நாட்டு மீனவர்களின் நீண்ட கால பிரச்சினைகளுக்கு தீர்வு காண இலங்கை அரசிடம் கொழும்புவிலுள்ள இந்திய தூதரகம் வலியுறுத்தி உள்ளது.

ஜனவரி மாதத்திலிருந்து அக்டோபர் வரையிலுமான கடந்த 10 மாதங்களில், இலங்கை கடற்படையினர் 61 தமிழக மீனவர்களின் படகுகளை சிறைபிடித்து, 450 மீனவர்களை கைது செய்துள்ளனர். கைது செய்யப்படும் மீனவர்கள் மீது வெளிநாட்டு மீன்பிடி தடை சட்டத்தின் கீழ் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு அந்நாட்டு நீதிமன்றங்களிலில் வழக்கு பதிவு செய்யப்பபடுகிறது. இதில் இதுவரை 88 மீனவர்கள் ஆறு மாதம் முதல் இரண்டு ஆண்டு காலம் வரையிலும் தண்டனை வழங்கப்பட்டு இலங்கை சிறைகளில் தண்டனை கைதிகளாக உள்ளனர்.

இலங்கை நாடாளுமன்றத்தில் 24.1.2018-ல் வெளிநாட்டு மீன்பிடி தடைச்சட்டம் நிறைவேற்றப்பட்டிருந்தாலும், இலங்கை அரசு, இந்த சட்டத்தை உடனடியாக அமல்படுத்தாமல், முதல் முறையாக சிறைப்பிடிக்கப்படும் மீனவர்கள் மீண்டும் எல்லை தாண்டி மீன்பிடித்தால் சிறை தண்டனை மற்றும் அபராதம் செலுத்த வேண்டும், என்ற நிபந்தனையின் கீழ் விடுதலை செய்தது. படகினை விடுவிப்பதற்கு அதன் உரிமையாளர்கள் ஆவணங்களுடன் நீதிமன்றத்தில் ஆஜராகி வழக்காடினால் படகுகளும் விடுவிக்கப்பட்டன.

ஆனால், கடந்த 10 மாதங்களாக மீனவர்கள், விசைப்படகு ஓட்டுநர்கள் முதல் முறையாக சிறைபிடிக்கப்பட்டாலே சிறை தண்டனை வழங்கப்படுகிறது. படகுகளை நாட்டுடமையாக்குதல், மீனவர்களுக்கு லட்சக்கணக்கில் அபராதம் விதித்தல், அபராதத்தை கட்டத் தவறினால் மீனவர்களுக்கு சிறை தண்டனை விதிப்பது, அல்லது அபராதத்தையும் சிறை தண்டனையும் ஒரு சேர விதிப்பது, என இலங்கை நீதிமன்றங்கள் வெளிநாட்டு மீன்பிடி தடைச்சட்டங்களை முழுமையாக அமல்படுத்தி வருகின்றன.

வெளிநாட்டு மீன்பிடிச் சட்டத்தை திரும்ப பெறக் கோரியும், மீனவர்களுக்கு அபராதம், சிறை தண்டனை வழங்குவதை கண்டித்தும், படகுகள், மீனவர்களை உடனடியாக விடுவிக்கக் கோரியும் மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்தி தமிழக மீனவர்கள் பல்வேறு போராட்டங்களை நடத்தி உள்ளனர்.மேலும், தமிழக மீனவப் பிரதிநிதிகள் டெல்லி சென்று மத்திய மீன்வளத்துறை அமைச்சர் பர்ஷோத்தம் ரூபாலா, வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் ஆகியோரைச் சந்தித்து இலங்கை சிறையில் தண்டனை கைதிகளாக உள்ள மீனவர்களை விடுதலை செய்ய வேண்டும், என வலியுறுத்தியும் உள்ளனர்.

இந்நிலையில் கொழும்பில் உள்ள அதிபர் மாளிகையில் இலங்கைக்கான இந்திய தூதர் சந்தோஷ் ஜா, அதிபர் அநுர குமார திசாநாயக்கவின் செயலாளர் கலாநிதி நந்திக குமாரநாயக்கவை சந்தித்துக் கலந்துரையாடினார். இது தொடர்பாக இலங்கை அதிபர் மாளிகை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது: “இந்த சந்திப்பில், பாக் ஜலசந்தி கடற்பரப்பில் நிலவும் இரு நாட்டு மீனவர்களின் பிரச்சினைகளை தீர்ப்பது குறித்து கலந்துரையாடப்பட்டது. இந்திய – இலங்கை இரு நாட்டு மீனவர்களின் நீண்ட கால பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்பட வேண்டியதன் அவசியத்தை இரு தரப்பினரும் வலியுறுத்தினர்.

மேலும், இந்திய அரசு சார்பாக இலங்கையில் மேற்கொள்ளப்படும் பல்வேறு அபிவிருத்தித் திட்டங்கள் குறித்தும், திட்டப்பணிகளை உரிய நேரத்தில் நிறைவுசெய்வதற்கான பணிகளை விரைவுபடுத்தல் குறித்தும் கலந்துரையாடப்பட்டது,” என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.