IND vs NZ : வாஷிங்டன் சுந்தர் கலக்கல், கேப்டன் ரோகித் சொதப்பல்

IND vs NZ Pune Test Updates : இந்தியா – நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி புனேவில் தொடங்கியது. இப்போட்டியில் பிளேயிங் லெவனில் சேர்க்கப்பட்ட வாஷிங்டன் சுந்தர் கலக்கலாக பந்துவீசி நியூசிலாந்து அணியை ஆல்அவுட் செய்ய, அதன்பிறகு முதல் இன்னிங்ஸில் பேட்டிங் இறங்கிய கேப்டன் ரோகித் சர்மா படுமோசமாக போல்டாகி அவுட்டானார். இந்த இரண்டு சம்பவமும் இரண்டாவது டெஸ்ட் போட்டியின் முதல் நாளே நடந்தது. பெங்களூருவில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி தோல்வியை தழுவிய நிலையில், வெற்றி பெற்றாக வேண்டிய கட்டாயத்தில் புனே டெஸ்ட் போட்டியில் களமிறங்கியுள்ளது. 

டாஸ் வெற்றி பெற்ற நியூசிலாந்து அணியின் கேப்டன் டாம் லாதம் பேட்டிங்கை தேர்வு செய்தார். அந்த அணியின் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் எல்லாம் சிறப்பாகவே பேட்டிங் செய்தனர். இருப்பினும் சீரான இடைவெளியில் விக்கெட்டையும் பறி கொடுத்தனர். அந்த அணியின் முதல் விக்கெட் 37 ரன்களுக்கு விழுந்தது. கேப்டன் லாதம் 15 ரன்களுக்கு அஸ்வின் பந்துவீச்சில் எல்பிடபள்யூ ஆனார். அவரைத் தொடர்ந்து வில் யங் விக்கெட்டையும் எல்பிடபள்யூ முறையில் காலி செய்த அஸ்வின், சிறப்பாக ஆடி அரைசதம் அடித்த டெவோன் கான்வே விக்கெட்டையும் வீழ்த்தினார். கான்வே 76 ரன்கள் எடுத்து நியூசிலாந்து அணிக்கு வலுவான அடித்தளம் அமைத்து கொடுத்தார். 

பும்ரா, ஆகாஷ் தீப், ஜடேஜா ஆகியோருக்கு எந்த விக்கெட்டும் விழாதால் வாஷிங்டன் சுந்தரை பந்துவீச வைத்தார் கேப்டன் ரோகித். பெங்களூரு டெஸ்ட் போட்டியில் தோல்வியை தழுவியதும் உடனடியாக இந்திய அணியில் சேர்க்கப்பட்ட வாஷிங்டன் சுந்தர் இப்போட்டியில் களமிறங்கினார். அவர் மீது வைக்கப்பட்ட எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் சிறப்பாகவும் பந்துவீசினார் அவர். எந்தளவுக்கு என்றால், நியூசிலாந்து அணியின் கடைசி 7 விக்கெட்டுகளையும் வீழ்த்தினார் வாஷிங்டன் சுந்தர். அவரின் அபாரமான பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் பின்வரிசையில் மளமனவென விக்கெட்டுகளை இழந்தது நியூசிலாந்து கிரிக்கெட் அணி. அதாவது, 259 ரன்களுக்கு முதல் இன்னிங்ஸில் ஆல்அவுட்டானது நியூசிலாந்து அணி. 

இந்திய அணியில் தமிழக வீரர்களான ரவிச்சந்திரன் அஸ்வின் 3 விக்கெட்டுகளையும், வாஷிங்டன் சுந்தர் 7 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். மேலும், சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் ஒரு இன்னிங்ஸில் வாஷிங்டன் சுந்தர் எடுத்த அதிகபட்ச விக்கெட். சிறப்பாக பந்துவீசிய இருவரையும் தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் வாழ்த்தியுள்ளது. இதனைத் தொடர்ந்து இந்திய அணி இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கியது. ஆரம்பமே அதிர்ச்சி கொடுக்கும் வகையில் கேப்டன் ரோகித் சர்மா 9 பந்துகள் விளையாடி ரன் ஏதும் எடுக்காமல் டக்அவுட்டானார். பெங்களூரு டெஸ்ட் போட்டியிலும் பெரிய ஸ்கோர் ஏதும் அவர் அடிக்கவில்லை. இரண்டாவது இன்னிங்ஸில் அரைசதம் அடித்தாலும் அவரின் ஆட்டம் அணியை வெற்றி பெற வைப்பதற்கு உகந்த வகையில் இருக்கவில்லை. 

முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி ஒரு விக்கெட் இழப்புக்கு 16 ரன்கள் எடுத்துள்ளது. ஜெய்ஷ்வால் 6, கில் 10 ரன்களுடன் களத்தில் உள்ளனர். நாளை இரண்டாவது நாள் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி நடக்க இருக்கிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.