Jio – Hotstar : டொமைனை வைத்துக்கொண்டு ரூ.1 கோடி கேட்கும் டெவலபர் – என்ன செய்யப்போகிறது ரிலையன்ஸ்?

டெல்லியைச் சேர்ந்த டெவலபர் ஒருவர் Jiohotstar.com என்ற டொமைனை வாங்கி வைத்துள்ளார். ஜியோ மற்றும் ஹாட்ஸ்டார் தளங்கள் இணைவது உறுதியாகியிருக்கும் நிலையில், இவர் இந்த டொமைனை அளிப்பதற்கு சில நிபந்தனைகளை வைத்துள்ளார்.

பொதுவாக பெரிய நிறுவனங்கள் தொடங்கப்படும்போது அதற்கான டொமைன் யாரிடம் இருந்தாலும், எவ்வளவு விலை சொன்னாலும் வாங்கிக்கொள்வர்.

அப்படி ஜியோ ஹாட்ஸ்டார் டொமைனை வாங்கி வைத்துள்ள நபர், அந்த நிறுவனத்தினருக்கு தான் வைத்திருக்கும் டொமைன் வேண்டுமென்றால், தன்னுடைய படிப்புச் செலவுக்கு பணம் வழங்க வேண்டும் எனக் கூறியுள்ளார்.

தன்னை யாரென்று காட்டிக்கொள்ளாத அந்த நபர், ரிலையன்ஸ் நிறுவனத்தினருக்கு எழுதிய கடிதத்தில், “ஜியோ – ஹாட்ஸ்டார் தளங்கள் இணைகிறதென்றால் Jiohotstar.com என்று பெயர் மாற்றப்படும் என நினைத்தேன். ஒருவேளை இந்த பெயருக்கு மாறினால் என்னுடைய கேம்பிரிட்ஜ் கனவை நனவாக்கிக்கொள்ள முடியும் என்பதால், இந்த டொமைனை வாங்கினேன்”. என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்த டெவலப்பர் கேம்பிரிட்ஜ் பல்கலைகழகத்தின் Accelerate program -ல் தேர்ந்தெடுக்கப்பட்டார். “என்னால் ஐஐடி-க்குள் நுழையமுடியவில்லை. இரண்டாம் நிலை கல்லூரியில் படித்த எனக்கு இந்த திட்டத்தில் வாய்ப்பு கிடைத்தது பெரிய விஷயம், இது எனக்கு சிறந்த அனுபவத்தைக் கொடுக்கும்” என்றும் குறிப்பிட்டுள்ளார்.

ஜியோ – ஹாட்ஸ்டார் தளங்கள் இணைவு ஏறத்தாழ உறுதியாகியிருக்கிறது. ஆனால் புதிய டொமைன் உருவாக்கப்படுமா என்பது குறித்து தகவல்கள் எதுவும் சொல்லப்படவில்லை.

கேம்பிரிட்ஜில் தொழில்முனைவோருக்கான பட்டபடிப்பை படிக்க விரும்பும் அந்த டெவலபர், அது விலை உயர்வானது என்பதைக் குறிப்பிட்டுள்ளார்.

தற்போது உலக தரம்வாய்ந்த பல்கலைகழகத்தில் எம்.பி.ஏ படிக்க ஒரு கோடி ரூபாய் வேண்டும் என்று தெரிவித்துள்ளார். முகம் தெரியாத அந்த டெவலபர், ரிலையன்ஸ், ஹாட்ஸ்டார் நிறுவனங்களுக்கு இது சிறிய தொகை என்றும் தனக்கு வாழ்க்கையை மாற்றும் வாய்ப்பாக இருக்கும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

ரிலையன்ஸ் தளம் இவரது கோரிக்கையை மறுத்திருப்பதாகவும் சட்ட ரீதியாக டொமைனைப் பெற முயற்சிகள் மேற்கொள்வதாகவும் சமீபத்திய தகவல்கள் தெரிவிக்கின்றன.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.