ராய்ப்பூர்: மாணவர்களே, அர்ப்பணிப்புடன் கடமைப் பாதையில் முன்னேறுங்கள்; வெற்றியும் கவுரவமும் உங்களைத் தொடரும் என்று குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு தெரிவித்துள்ளார்.
சத்தீஸ்கர் தலைநகர் ராய்ப்பூரில் உள்ள எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்டு மாணவர்களுக்கு குடியரசுத் தலைவர் பட்டங்களை வழங்கினார். இந்நிகழ்வில் பேசிய அவர், “மனித விழுமியங்களுடன் பணியாற்றுமாறு மருத்துவர்களுக்கு உலகின் பல தலைசிறந்த மருத்துவ நிபுணர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.
எய்ம்ஸ் நிறுவனங்கள் குறைந்த செலவில் தரமான சுகாதார சேவைகள் மற்றும் மருத்துவக் கல்வியை வழங்குவதில் பெயர் பெற்றவை. எய்ம்ஸ் மருத்துவமனைகள் மீது நாட்டு மக்கள் மிகுந்த நம்பிக்கை வைத்துள்ளனர். அதனால்தான் எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற ஏராளமானோர் தொலைதூரங்களில் இருந்தும் வருகின்றனர். ராய்ப்பூர் எய்ம்ஸ், மருத்துவம் மற்றும் மக்கள் நலனுக்காக பல பணிகளை மேற்கொண்டு வருவதாகவும், இந்த நிறுவனம் தேசிய மற்றும் சர்வதேச ஒத்துழைப்புடன் ஊட்டச்சத்து குறைபாட்டை ஒழிப்பதற்காக செயல்பட்டு வருவதாகவும் என்னிடம் தெரிவிக்கப்பட்டது. இந்த தகவல் மகிழ்ச்சி அளிக்கிறது.
எய்ம்ஸ் மருத்துவர்கள் மற்றும் மாணவர்கள் நவீன நடைமுறைகளைக் கடைப்பிடிப்பதில் எப்போதும் சுறுசுறுப்பாக இருப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. உலக அளவில் சிந்தியுங்கள்; உள்ளூரில் செயல்படுத்துங்கள் என்பது சில பன்னாட்டு நிறுவனங்களால் பின்பற்றப்படும் கொள்கை. இந்தியாவின் உயர்கல்வி நிறுவனங்களில் உள்ள மாணவர்கள் மற்றும் பேராசிரியர்களுக்கு இந்த சிந்தனை மிகவும் பொருத்தமானது.
உங்கள் பங்களிப்பின் நோக்கத்தை நீங்கள் எவ்வளவு விரிவுபடுத்துகிறீர்களோ, அவ்வளவுக்கு உங்கள் தனிப்பட்ட வளர்ச்சியும் அதிகரிக்கும். பெரிய சிந்தனை பெரிய விருப்பங்களை உருவாக்குகிறது. பெரிய விருப்பங்கள் மட்டுமே ஈர்க்கக்கூடிய யதார்த்தத்தின் வடிவத்தை எடுக்கின்றன. முழு ஈடுபாட்டுடனும், ஒழுக்கத்துடனும், திறமையுடனும் தங்கள் பணியைத் தொடர்ந்து செய்பவர்கள், மக்களின் மரியாதையை எளிதில் பெறுவார்கள். நிறுவனங்களுக்கும் இதே விஷயம் பொருந்தும். மாணவர்களே, அர்ப்பணிப்புடன் கடமைப் பாதையில் முன்னேறுங்கள். வெற்றியும் கவுரவமும் உங்களைத் தொடரும்.
நம் நாட்டின் திறமையான பொறியாளர்கள் யாரும் நினைத்துக்கூட பார்க்க முடியாத தனித்துவமான நிறுவனங்களை நிறுவியுள்ளனர். உங்களைப் போன்ற இளம் மாணவர்களிடம் உள்ள பொறியியல் திறமையின் பலத்தால், லட்சியத் திட்டங்கள் நம் நாட்டில் உருவாக்கப்பட்டு செயல்படுத்தப்படுகின்றன” என தெரிவித்தார்.