பெய்ரூட்: இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனத்தின் ஹமாஸ் தீவிரவாதிகளுக்கு இடையில் தொடங்கிய போர், தற்போது ஈரான், லெபனான் என அண்டை நாடுகளுக்கும் பரவியுள்ளது. ஈரானுக்கு ஆதரவாக இஸ்ரேல் மீது லெபனானில் உள்ள ஹிஸ்புல்லா தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தி வருகின்றனர். அதற்கு பதிலடி கொடுக்கப்படும் என்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அறிவித்தார்.
இந்நிலையில், இஸ்ரேல் வான்வழித் தாக்குதல் நடத்தி யதில் ஊடக ஊழியர்கள் 3 பேர் உயிரிழந்ததாக லெபனானின் தேசிய செய்தி ஏஜென்சி நேற்றுதகவல் வெளியிட்டது. இதுகுறித்து உள்ளூர் செய்தி ஏஜென்சி அல் ஜதீத் வீடியோ ஒன்றை ஒளிபரப்பியது. அதில், லெபனானின் ஹஸ்பயா பகுதியில் உள்ள ஒரு கட்டிடத்தில் பல்வேறு தொலைக்காட்சி நிறுவனங்கள், செய்தி ஏஜென்சிகள் இயங்கி வருகின்றன.
அந்தக் கட்டிடத்தின் மீது இஸ்ரேல் போர் விமானங்கள் நேற்று தாக்குதல் நடத்தின. இதில், பெய்ரூட்டைச் சேர்ந்த தொலைக்காட்சி கேமராமேன் கசன் நாஜர், ஒளிபரப்பு தொழில் நுட்ப வல்லுநர் முகம்மது ரிடா ஆகியோர் உயிரிழந்தனர். மேலும், லெபனானின் அல் மனார் டிவி கேமராமேன் வாசிம் குவாசிமும் உயிரிழந்தார் என்று தெரிவிக்கப்பட்டது. இதுகுறித்து இஸ்ரேல் ராணு வம் உடனடியாக எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை.