“கூட்டணிக் கட்சிகள் கைவிட்டால், தி.மு.க கீழே விழுந்துவிடும்” என்ற எடப்பாடி பழனிசாமியின் விமர்சனம்?

ஜெ.ஜெயவர்தன்

ஜெ.ஜெயவர்தன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர், அ.தி.மு.க

“உண்மையைப் பட்டவர்த்தனமாகச் சொல்லியிருக்கிறார் எடப்பாடி. கட்சி தொடங்கிய காலம் தொட்டு, சொந்தக்காலில் நிற்காமல் கூட்டணிக் கட்சிகளை நம்பி மட்டுமே தேர்தலைச் சந்திக்கும் ஒரு கட்சி இருக்கிறதென்றால், அது தி.மு.க-தான். 2011, 2016 என்று தொடர்ந்து இரண்டு சட்டமன்றத் தேர்தல் களில் படுதோல்வியடைந்த தி.மு.க., அடுத்து வந்த 2021 சட்டமன்றத் தேர்தலில் வெறும் 4.4 சதவிகித வாக்கு வித்தியாசத்திலேயே அ.தி.மு.க-வை முந்தியது. இன்னும் சொல்லப்போனால் கூட்டணிக் கட்சிகளின் வாக்குகளால்தான் தி.மு.க ஆட்சிக்கே வந்தது. ஆனால், அதிகாரத்துக்கு வந்த பிறகு பண்ணையார் மனப்பான்மையோடு நடந்துகொள்வதுடன், கூட்டணிக் கட்சிகளின் குரல்வளையையே நெரிக்க ஆரம்பித்துவிட்டது. கூடவே, மத்திய பா.ஜ.க அரசுடன் நெருக்கம் காட்டுகிறார்கள். போலியான வாக்குறுதிகளைக் கொடுத்து மக்களை ஏமாற்றியதுபோல, கூட்டணிக் கட்சிகளையும் ஏமாற்றியதால்தான் திருமாவும் கம்யூனிஸ்ட்டுகளும் தி.மு.க-வை விமர்சிக்கத் தொடங்கியிருக்கிறார்கள். ‘தி.மு.க-வுக்கு ஓட்டுப்போடவில்லை என்றால், பா.ஜ.க உள்ளே புகுந்துவிடும்’ என்று இனியும் பூச்சாண்டி காட்ட முடியாது. ஏனென்றால், மக்களும் சரி, பிற கட்சிகளும் சரி… அ.தி.மு.க ஆதரவு மனப்பான்மைக்கு வந்துவிட்டார்கள்!”

பழ.செல்வகுமார்

பழ.செல்வகுமார், மாநில துணைச் செயலாளர், சுற்றுச்சூழல் அணி, தி.மு.க

“2019 நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பாக அமைந்த தி.மு.க தலைமையிலான கொள்கைக் கூட்டணி மூன்று தேர்தல்களைக் கடந்தும் இன்றளவும் அப்படியே இருக்கிறது. ஆனால், அ.தி.மு.க-வோ சொந்தக் கட்சியினருக்கே பலன் தராத தனிமரமாக நிற்கிறது. பழனிசாமி எனும் திறமையற்ற மாலுமியின் அழைப்பை ஏற்று, ஓட்டைக் கப்பலான அ.தி.மு.க அணியில் சேர எந்தக் கட்சியும் முன்வருவதில்லை. அந்த அதிருப்தியிலும் விரக்தியிலும்தான் இப்படியெல்லாம் உளறிக்கொட்டியிருக்கிறார் எடப்பாடி. தி.மு.க கூட்டணிக் கட்சிகளை மட்டுமே நம்பியிருக்கிறது என்பது கொஞ்சமும் ஏற்புடையதல்ல. தி.மு.க-வுக்கு இருக்கும் வாக்குவங்கி அளவுக்குத் தமிழகத்தில் வேறு எந்தக் கட்சிக்கும் கிடையாது என்பதை அடுத்தடுத்த தேர்தல்களில் நிரூபித்துக் காட்டியிருக்கிறோம். ‘தி.மு.க கூட்டணியில் எந்தப் புகைச்சலும் இல்லை. நாங்கள் மிகவும் ஒற்றுமையாகவே இருக்கிறோம்’ என கூட்டணிக் கட்சித் தலைவர்களே அழுத்தமாகச் சொல்லியிருக்கிறார்கள். ஆனாலும், எப்படியாவது இந்தக் கூட்டணியை உடைத்துவிடலாம் என்று என்னென்னமோ நரித் தந்திரம் செய்து பார்க்கிறார்கள். வாக்கு அரசியலைத் தாண்டி, கொள்கைரீதியில் அமைந்த தி.மு.க கூட்டணியை உடைக்க யாராலும் முடியாது!”

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.