திருவனந்தபுரம்: கேரளாவின் பல பகுதிகளில் பெய்த கனமழையால் சாலைகளில் தண்ணீர் தேங்கி, போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. இந்நிலையில் இந்திய வானிலை ஆய்வு மையம் மாநிலத்தின் ஐந்து மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுத்துள்ளது.
திருவனந்தபுரம், கோட்டயம், எர்ணாகுளம், இடுக்கி மற்றும் திருச்சூர் ஆகிய ஐந்து மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதேபோல் 7 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ஆரஞ்சு எச்சரிக்கை என்பது அதிகனமழை (6 முதல் 20 செ.மீ வரை) பெய்யக்கூடும் என்பதைக் குறிப்பதாகும். மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டால் அப்பகுதியில் கனமழை பெய்யக்கூடும் என்று அர்த்தம்.
மேலும், திருவனந்தபுரம் மற்றும் கொல்லம் மாவட்டங்களின் ஒருசில இடங்களில் பலத்த காற்றுடன் கனமழை பெய்யக்கூடும். அதேபோல், பத்தனம்திட்டா மற்றும் ஆலப்புழாவின் சில பகுதிகளில் பலத்த காற்றுடன் மிதமான மழை பெய்யக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.