திருமலை: திருப்பதி ஏழுமலையானை தரிசனம் செய்ய சர்க்கரை, ரத்த கொதிப்பு, வலிப்பு நோய், உடல் பருமன் உள்ள பக்தர்கள், கால்நடையாக திருமலைக்கு மலையேறி செல்வதை தவிர்க்க வேண்டுமெனவும், அப்படி ஒருவேளை செல்பவர்களுக்கு தேவையான முன் ஜாக்கிரதை நடவடிக்கைகளையும் திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது. இதனை பக்தர்கள் கண்டிப்பாக பின்பற்றும்படி கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
திருப்பதியில் இருந்து அலிபிரி மற்றும் ஸ்ரீநிவாச மங்காபுரம் அருகே உள்ள ஸ்ரீவாரி மெட்டு ஆகிய மார்கங்களில் இருந்து திருமலைக்கு மலையேறி செல்லும் பக்தர்களுக்கு திருமலை திருப்பதி தேவஸ்தானம் சில நிபந்தனைகளை விதித்துள்ளது. சமீப காலமாக மலையேறி செல்லும் பக்தர்களில் சிலர் வழியிலேயே தொடர்ந்து மலையேற முடியாமல் அவதிக்குள்ளாகின்றனர். அப்படி உடல் நலத்தில் பிரச்சினை இருந்தால் ஏன் மலையேறி செல்ல வேண்டும்? அவர்கள் பேருந்துகளிலேயோ அல்லது சொந்த வாகனங்களிலேயோ திருமலைக்கு செல்லலாம்.
ஒருவேளை கண்டிப்பாக நேர்த்தி கடன் செலுத்தும் வகையில் கால்நடையாக மலையேறி சென்றாக வேண்டும் என வேண்டுதல் இருந்தால் அவர்கள் என்னவென்ன முன் ஜாக்கிரதைகளை கையாள வேண்டும் ? மலைப்பாதையில் எங்கெங்கு மருத்துவ வசதிகள் உள்ளன ? போன்றவை குறித்து திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. 60 வயது நிரம்பிய முதியோர், சர்க்கரை நோயாளிகள், ரத்த கொதிப்பு, வலிப்பு நோய், மூட்டு வியாதி உள்ளவர்கள் தயவு செய்து கால்நடையாக மலையேறி திருமலைக்கு வர வேண்டாம்.
அளவுக்கதிகமான உடல் பருமன் உள்ளவர்கள், இதயம் சம்மந்தப்பட்ட வியாதி உள்ளவர்களும், அறுவை சிகிச்சை செய்து கொண்டவர்களும் திருமலைக்கு நடந்து செல்வது கூடாது. திருமலை கடல் மட்டத்தை விட அதிகமான உயரம் கொண்டது என்பதால், இதய நோய், உடல் பருமன் உள்ளவர்கள் மலை ஏற, ஏற ஆக்ஸிஜன் பிரச்சினை வரும் என்பதால் அதற்கு தகுந்த நடவடிக்கைகளை மேற்கொள்வதும் அவசியம். தீராத நோய் உள்ளவர்கள், அவர்கள் தினமும் உட்கொள்ளும் மருந்து, மாத்திரைகளை உடன் கொண்டு வருவது அவசியம்.
மலையேறி திருமலைக்கு வரும்போது, வழியில் ஏதாவது உடல் சம்மந்தப்பட்ட பிரச்சினைகள் வந்தால், அலிபிரி மார்கத்தில் 1500-வது படி அருகேயும், காலி கோபுரம் (Gali Gopuram), இராமானுஜர் சன்னதி அருகேயும் மருத்துவ முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. திருமலையில் அஸ்வினி தேவஸ்தான மருத்துவமனை உட்பட பல மருத்துவமனைகள் இரவும், பகலும் பணியாற்றி வருகின்றன. சிறுநீரக பிரச்சனை உள்ளவர்களுக்கு திருப்பதி சிம்ஸ் மருத்துவமனையில் டயாலஸிஸ் வசதி ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன என்று திருமலை திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.