மழைகாலங்களில் ஏற்படும் அனர்த்தங்களிலிருந்து மக்கள் தங்களை பாதுகாத்துக்கொள்ள வேண்டும் 

மழைகாலங்களில் ஏற்படும் அனர்த்தங்களிலிருந்து மக்கள் தங்களை பாதுகாத்துக்கொள்ள வேண்டுமென கிளிநொச்சி பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் த.வினோதன் தெரிவித்துள்ளார். 

கிளிநொச்சியில் நேற்று(24) நடைபெற்ற ஊடக சந்திப்பிலேயே இவ்வாறு தெரிவித்தார். குறித்த விடயம் தொடர்பில் தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில், தற்போது மழை காலம் ஆரம்பித்துள்ளமையால் டெங்கு நோயின் தாக்கம் அதிகரிப்பதற்குரிய சாத்தியம் காணப்படுவதனால் மக்கள் டெங்கு பரவுகின்ற இடங்களை சுத்தமாக வைத்திருக்க வேண்டும்.

மழைக் காலங்களில் நீர் நிரம்பிய குழிகளில் சிறுபிள்ளைகள் வீழ்ந்து உயிரிழக்கின்ற சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. எனவே பெற்றோர்கள் அவதானமாக செயற்பட்டு குறித்த அனர்த்தங்களிலிருந்து தமது சிறுகுழந்தைகளை பாதுகாக்க வேண்டும் என்றும்  அவ்வாறான குழிகள் இனங்காணப்பட்டு மூடப்பட வேண்டும் என்றும் குறிப்பிட்டார். 

மேலும் மழை காலங்களில் நீரில் மூழ்கி உயிரிழக்கின்ற சம்பவங்களும் அதிகரித்து வருகிறன. நீர் நிலைகளில் நீர் அதிகரித்து காணப்படுகின்றது.

நீர் நிலைகளில் நீராடுவதை தவிர்க்கவும் இடி மின்னல் மற்றும் மின்சார தாக்கங்களிலிருந்தும் மக்கள் தங்களை பாதுகாப்பதோடு விஷயந்துக்களின் நடமாட்டம் அதிகமாக காணப்படுவதனால்  விஷயந்துக்களின் பாதிப்பிலிருந்தும் மக்கள் தங்களை பாதுகாப்பதற்கான முன்னேற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் மேலும் தெரிவித்தார்.

 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.