புதுடெல்லி: தந்தை, தாய், சகோதரர் மற்றும் கட்சிக்காகத் தேர்தல் பிரச்சாரம் செய்து வந்த பிரியங்கா காந்தி, முதன்முறையாக வேட்பாளராகி தேர்தலில் போட்டியிடுகிறார். இவர், கேரளாவின் வயநாடு தொகுதி இடைத்தேர்தலில் களமிறங்குகிறார்.
ராகுலுக்கு முன்பாகவே தேசிய அரசியலில் திரைமறைவில் செயல்பட்டவர் பிரியங்கா. முதன்முறையாக தனது தந்தைக்காக தேர்தல் பிரச்சாரம் செய்தவர், தொடர்ந்து தாய் சோனியா மற்றும் சகோதரர் ராகுலுக்காகவும் பிரச்சாரம் செய்திருந்தார். 2019-ல் அதிகாரபூர்வமாக காங்கிரஸில் இணைந்து அதன் தேசிய பொதுச் செயலாளரானார். அதே தேர்தலில் அவர் உத்தரப் பிரதேசத்தின் சட்டப்பேரவை போட்டியிடும் எதிர்பார்ப்பு இருந்தது.
அப்போது காங்கிரஸுக்கு நிலவிய இறங்குமுக சூழல் அவரை பின்வாங்கச் செய்தது. பிறகு கடந்த மக்களவை தேர்தலில் தனது தாய் சோனியாவின் ரேபரேலி அல்லது ராகுலின் அமேதி என ஏதாவது ஒன்றில் பிரியங்கா போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்பட்டது. இதற்கும் அவர் அசைந்து கொடுக்கவில்லை.
ஆனால், அப்போது முதல் காங்கிரஸ் கட்சிக்காக பல மாநிலங்களில் கட்சியின் நட்சத்திரப் பிரச்சாரகர் ஆனார். கடந்த அக்டோபர் 10-ல் வயநாடு மக்களவை தொகுதிக்கும் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டவுடன், தாமதம் இன்றி பிரியங்கா காங்கிரஸ் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். இதற்கு வயநாடில் உறுதியான வெற்றியை பிரியங்கா எதிர்பார்ப்பது காரணமாகி உள்ளது.
எனினும், சகோதரர் ராகுல் காந்தியை அவர் மிஞ்சுவரா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. ஏனெனில், காந்தி குடும்பத்தின் ராகுல் மற்றும் பிரியங்கா தேசிய அரசியலில் சமநிலையில் கருதப்படுவதில்லை. தொடக்க காலத்தில் பிரியங்காவுக்கு இருந்த செல்வாக்கை விட தற்போது ராகுலுக்கு செல்வாக்கு கூடி உள்ளது.
என்றாலும், கேரளாவின் மூத்த தலைவரான கே.சி.வேணுகோபால், ராகுலை விட அதிக வாக்குகள் எண்ணிக்கையில் பிரியங்கா வெற்றி பெறுவார் என நம்பிக்கை தெரிவித்துள்ளார். இதற்காக காங்கிரஸுக்கு கடுமையாக உழைக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
மக்களவை தேர்தலில் வயநாடில் போட்டியிட்ட ராகுல் தாம் இரண்டாவது தொகுதியில் போட்டியிடுவதாகக் கூறவில்லை. ஆனால், வயநாடு வாக்குப்பதிவு முடிந்த பின் ராகுல், ரே பரேலியில் திடீர் என வேட்புமனு தாக்கல் செய்தார். இது, வயநாடு தொகுதிவாசிகளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தாமல் இல்லை. இதன் தாக்கம் வயநாடு இடைத்தேர்தல் வாக்குப்பதிவில் எதிரொலிக்கும் வாய்ப்பும் உள்ளது.
மக்களவை தேர்தலின் போது வயநாட்டில் ராகுலை எதிர்த்து இண்டியா கூட்டணியில் இடம்பெற்றுள்ள சிபிஐ-ன் ஆனி ராஜா போட்டியிட்டு இரண்டாவது இடம் பெற்றார். பாஜக வேட்பாளர் சுரேந்தருக்கு மூன்றாவது இடம் கிடைத்தது. தற்போது இரண்டாவது இடம்பிடித்த ஆனி ராஜா கைகட்டி நிற்க, சிபிஐ சார்பில் சத்யன் மோக்ரி போட்டியிடுகிறார். பாஜகவிலும் வேட்பாளர் மாற்றப்பட்டு, நவ்யா ஹரிதாஸ் மனு தாக்கல் செய்துள்ளார். இவர் கேரளாவில் முஸ்லிம்கள் அதிகமுள்ள தென்கோழிக்கோடு பேரவை தொகுதியில் 2021 தேர்தலில் போட்டியிட்டவர்.அதில் நவ்யா, இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக்கிற்கு அடுத்ததாக மூன்றாவது இடத்தில் 20.89 சதவிகித வாக்குகளை பெற்றிருந்தார். இதனால், இந்த இடைத்தேர்தலில் பிரியங்காவிற்கு சரிநிகர் போட்டியாளராக நவ்யா கருதப்படுகிறார். இவர்களுடன் பிரியங்காவின் போட்டி பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி விட்டது.
கடந்த 2019 மக்களவைத் தேர்தலில் வயநாட்டில் முதல் முறையாக போட்டியிட்ட ராகுல் காந்தி 64 சதவிகிதம் வாக்குகள் பெற்றிருந்தார். இது 2024 தேர்தலில்59.7 சதவீதமாக குறைந்தது. இந்தநிலையில் இதைவிட அதிகமான சதவீதத்துடன் வெற்றி பெறவேண்டியக் கட்டாயம் பிரியங்காவிற்கு ஏற்பட்டுள்ளது. வயநாடு மக்கள் தொகையில் இந்துக்கள் 54 சதவீதமும், முஸ்லிம்கள் 41.3, கிறித்தவர்கள் 13.7 சதவீதம் உள்ளனர்.
இதனிடையே தனது சகோதரியுடன் பேருந்தில் பயணிக்கும் ஒரு புதிய காட்சிப்பதிவை வெளியிட்டுள்ளார் ராகுல் காந்தி. அதில் அவர் பிரியங்காவிற்கு ஆதரவான பல கருத்துக்களையும் பதிவு செய்துள்ளார். இதனால், ராகுலின் நிழலிருந்து பிரியங்காவால் விலகி இருக்க முடியாத நிலை ஏற்றபட்டுள்ளது.
அதேநேரத்தில் வயநாடு போட்டியின் மூலம் பிரியங்கா தனக்கான ஒரு அரசியல் செல்வாக்கை நிலைநாட்ட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இதை அவர் செய்யவில்லை எனில், பிரியங்கா தம் சகோதரர் ராகுல் அல்லது காந்தி குடும்பத்தின் செல்லப்பிள்ளையாகவே பார்க்கப்படுவார்.
காந்தி குடும்பத்தின் முதல் தலைவரான ஜவகர்லால் நேரு, 1952-ம் ஆண்டு தேர்தலில் தனது 62-வது வயதில் தேர்தல் போட்டியிட்டார். அவரது மகள் இந்திரா காந்தி 1967-ல் 49 வயதிலும், பேரன் ராஜீவ் காந்தி 1981-ல் 36 ஆவது வயதிலும் தேர்தலில் முதல்முறையாக போட்டியிட்டனர். சோனியா காந்தி 1999-ல் 52-வது வயதிலும், அவரது மகன் ராகுல் காந்தி 2004-ல் 33வது வயதிலும் போட்டியிட்டனர்.
இந்த வரிசையில் பிரியங்கா தற்போது 2024-ல் தனது 52 ஆவது வயதில், வயநாடு இடைத்தேர்தலில் போட்டியிடுகிறார். இது ராகுல் இருமுறை எம்.பி.யாக இருந்த தொகுதி. இதற்கு முன்பும் இது காங்கிரஸிடம் இருந்த காரணத்தினால் வயநாடு பிரியங்காவின் வெற்றிக்கு மிகவும் பாதுகாப்பான தொகுதியாகக் கருதப்படுகிறது.