மென்பொருள் நிறுவனங்கள் மூலம் அமெரிக்காவில் பல ஆயிரம் கோடி மதிப்புள்ள சொத்துக்களை வைத்திருப்பவர் பிரையன் ஜான்சன் (46). விரைவில் முதுமை அடைவதைத் தடுக்கும் பல்வேறு ஆராய்ச்சிகளுக்காகவும், சிகிச்சைகளுக்காகவும் தொடர்ந்து செய்திகளில் இடம் பெறுபவர். கடந்த ஆண்டு இவரின் தந்தை ரிச்சர்ட் ஜான்சன் (72) உடலிலிருந்து பிளாஸ்மாக்களை நீக்கிவிட்டு, தன்னுடைய பிளாஸ்மாக்களை அவருடைய தந்தையின் உடலுக்கு மாற்றினார். இதன் மூலம், தந்தையின் முதுமையை 25 வருடங்கள் தள்ளிப்போட முடியும் என்றும், அதற்காகத் தினமும் உடற்பயிற்சி, 111 மருந்துகள், 8 மணி நேரத்துக்கும் குறைவான தூக்கம் ஆகியவை முறையாகப் பின்பற்றப்பட வேண்டும் என்றெல்லாம் பகிர்ந்திருந்தார்.

அதைத் தொடர்ந்து, அவருடைய உடலிலிருந்த எல்லா பிளாஸ்மாக்களையும் நீக்கிவிட்டு, அதற்குப் பதிலாக அல்புமின் என்ற வேறொரு புரதத்தை தன் உடலில் ஏற்றி மீண்டும் மக்கள் அதிர்ச்சியடையும் வகையில் சிகிச்சை மேற்கொண்டார். இந்த நிலையில்தான் தன் முடி வளர்ச்சி குறித்த பதிவு ஒன்றை ‘எக்ஸ்’ பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார்.
அதில், “என் மரபணு ரீதியாக, நான் வழுக்கையாக இருக்க வேண்டும். என் 20 வயதைக் கடந்த பிறகுத் தலைமுடியை இழந்து நரைக்க ஆரம்பித்தேன். இப்போது எனக்கு 47 வயதாகிறது. ஆனால் எனக்கு முழு தலை முடியும் மீண்டும் வளர்ந்துவிட்டது. என் நரையில் 70 சதவிகிதம் காணாமல் போய்விட்டது.
அது எப்படி நடந்தது என்பதை உங்களுக்கு விளக்குகிறேன். 40 வயதைக் கடந்தால், தலைமுடியை இழக்க வேண்டும் என்ற பொதுவான நம்பிக்கைக்கு மாறாக உங்கள் தலைமுடியைப் பராமரிக்கலாம். உங்கள் தலைமுடியை இழப்பதற்கு முன்பு அதற்கான சிகிச்சையை விரைவில் தொடங்குங்கள். பலர் தலைமுடி இழப்பை உணருவதற்கு முன்பே 50 சதவிகித முடியை இழந்துவிடுகிறார்கள். முதலில், உங்களுக்குத் தேவையான, போதுமான அளவு ஊட்டச்சத்துகளைப் பெறுவதை உறுதி செய்யுங்கள்.

நான் புரதங்கள், collagen peptide, cyteine, lysine, taurine, collagen, elastin, methionine, synthesis போன்ற புரதங்களை எடுத்துக்கொண்டேன். ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள், முக்கிய வைட்டமின்கள், செலினியம் மற்றும் பயோட்டின் உட்பட இரும்புச் சத்துக்கானவை ஆகியவைகளையும் எடுத்துக்கொண்டேன். அடுத்து, என் மரபணுவுக்கு ஏற்றார்போல, முடி உதிர்வைத் தடுக்க Rx சூத்திரம் மூலம் ஒரு மருந்தைத் தயாரித்தேன். அது மினாக்ஸிடில் (7%), செடிரிசின் எச்.சி.எல் (1%), லட்டானோப்ரோஸ்ட் (0.004%), டுடாஸ்டரைடு (0.25%), மெலடோனின் (0.1%), காஃபின் (0.2%), ட்ரெட்டினோயின் (0.0125%) , வைட்டமின் D3 (1,000IU/ML), வைட்டமின் E (10 IU/ML) போன்ற பொருள்கள் மூலம் தயாரிக்கப்பட்டது.
மினாக்ஸிடிலை இரவு அல்லது காலையில் உச்சந்தலையில் 1 மில்லி தடவி நன்கு மசாஜ் செய்தேன். (சிலருக்கு இதில் தோல் அரிப்பு, தலைவலி போன்ற பக்கவிளைவுகளை ஏற்படுத்தலாம். கவனம் தேவை). சிகப்பு லேசார் லைட் சிகிச்சை செய்தேன். அதாவது ஒரு நாளைக்கு ஆறு நிமிடங்கள், லேசார் லைட் பொருத்தப்பட்ட கேப் போன்ற ஒன்றை அணிந்தேன். இது தொடர்பாக 44 ஆண்களிடம் (வயது 18-49) நடத்தப்பட்ட ஆய்வில், 655nm லேசர் கேப் மூலம் தினமும் 25 நிமிடங்களுக்கு 16 வாரங்களுக்குச் சிகிச்சையளிப்பதன் விளைவாக, மருந்துடன் ஒப்பிடும்போது முடி வளர்ச்சியில் 39 சதவிகித வளர்ச்சி அதிகரித்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

மினாக்ஸிடில் வாய்வழியாக உட்கொள்ளத் தொடங்கினேன். ஆரம்பத்தில் 2.5 மி.கி அளவு உட்கொண்டு, அதன் பக்க விளைவுகளை மதிப்பீடு செய்து, இறுதியில், 3.75 மி.கி வரை உட்கொண்டேன். மினாக்ஸிடில் பக்க விளைவுகளை ஏற்படுத்தும் வாய்ப்பிருப்பதால், பொதுவாகக் குறைந்த அளவுகளில் பயன்படுத்துவதே பாதுகாப்பானதாகக் கருதப்படுகிறது.
எனவே, முடி வளர்ச்சிக்கான புதிய பயணத்தை இப்படித் தொடங்குங்கள். மெதுவாக நிதானமாகத் திட்டமிட்டுத் தொடங்குங்கள், ஒரு நேரத்தில் ஒரே ஒரு தயாரிப்பை மட்டும் பயன்படுத்துங்கள், பக்க விளைவுகளை உன்னிப்பாகக் கண்காணியுங்கள், மருந்தின் செயல்பாட்டைக் கவனிக்க, குறைந்தது 3 மாதங்கள் கொடுங்கள், 5% மினாக்ஸிடில் மட்டுமே பலருக்கும் போதுமானது, இரத்தப் பரிசோதனை மூலம் உங்கள் உடலில் இருக்கும் ஒமேகா, புரதக் குறைபாடுகளைக் கண்காணித்து மாற்றியமைக்க முடியும். எனவே, உங்கள் மரபணு விவரம், உடல்நலம், உணவு, ஊட்டச்சத்து நிலை ஆகியவற்றின் அடிப்படையில் உங்களை நீங்களே கவனியுங்கள்.

முடி உதிர்தல் இனி நாம் கவலைப்பட வேண்டிய ஒரு விஷயமாக இருக்காது என நினைப்பதே மகிழ்ச்சியளிக்கிறது. எதிர்காலம் இன்னும் ஆச்சரியமாக இருக்கப் போகிறது என்பதற்கு இதுவும் ஒரு காரணம்” எனப் பதிவிட்டிருக்கிறார்.
இவரின் இந்த செயல்முறைகள் அனைத்தும் ஆராய்ச்சி, மருத்துவர்களின் கண்காணிப்பின் கீழ் நடந்தது. எனவே, மருத்துவர்களின் உரிய ஆலோசனை இல்லாமல் இந்த சிகிச்சையைத் தனிப்பட்ட முறையில் தொடங்குவது ஆபத்தானது.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/crf99e88
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/crf99e88