IND vs NZ, Test match update Tamil | இந்தியா – நியூசிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெறும் புனே டெஸ்ட் போட்டி பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இரண்டாவது நாள் ஆட்ட நேர முடிவில் நியூசிலாந்து அணி இரண்டாவது இன்னிங்ஸில் 301 ரன்கள் முன்னிலை பெற்றிருக்கிறது. கைவசம் இன்னும் 5 விக்கெட்டுகள் உள்ளன. நாளை மூன்றாவது நாள் ஆட்டத்தை அந்த அணி தொடர்ந்து ஆட இருக்கிறது. நியூசிலாந்து அணி முடிந்தளவுக்கு அதிகபட்ச ஸ்கோரை இந்திய அணிக்கு வெற்றி இலக்காக நிர்ணயிக்கும். இதனை இந்திய அணி எட்டுமா? என்பது தான் மிகப்பெரிய கேள்விக்குறி. ஒருவேளை எட்ட முடியவில்லை என்றால் இப்போட்டியிலும் தோல்வியடைந்து நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை இழக்க நேரிடும்.
இந்திய அணியின் பேட்டிங் மிகவும் பலவீனமாக இருக்கிறது. முதல் நாள் ஆட்டநேர முடிவில் ஒரு விக்கெட் இழப்புக்கு 16 ரன்கள் எடுத்திருந்த இந்தியா இன்று முதல் இன்னிங்ஸ் பேட்டிங்கை தொடர்ந்தது. ஆனால் எந்த பேட்ஸ்மேனும் பொறுப்புடன் விளையாடவில்லை. சுப்மன் கில் 30 ரன்களுக்கு ஆட்டமிழக்க, அடுத்து வந்த விராட் கோலி 1 ரன் மட்டுமே எடுத்து வெளியேறினார். அவரைத் தொடர்ந்து ஜெய்ஷ்வால், சர்பிராஸ்கான், ரிஷப் பந்த் ஆகியோரும் அடுத்தடுத்து விக்கெட்டை பறிகொடுத்து அவுட்டாகினர். பின்வரிசையில் ஜடேஜா 38 ரன்கள் எடுக்க மற்றவர்கள் யாரும் பெரிய ஸ்கோர் பேட்டிங்கில் அடிக்கவில்லை. இதனால், முதல் இன்னிங்ஸிலேயே 103 ரன்கள் முன்னிலை பெற்று இரண்டாவது இன்னிங்ஸ் பேட்டிங் ஆடியது நியூசிலாந்து அணி.
அந்த அணியில் கேப்டன் டாம் லாதம் சிறப்பாக பேட்டிங் ஆடி 86 ரன்கள் எடுத்து அவுட்டானர். கான்வே 17, வில் யங் 23 ரன்கள் எடுத்து அவுட்டாகினர். இதனால் இரண்டாவது நாள் ஆட்ட நேர முடிவில் நியூசிலாந்து அணி 5 விக்கெட் இழப்புக்கு 198 ரன்கள் எடுத்திருக்கிறது. மொத்தமாக 301 ரன்கள் முன்னிலை பெற்றிருக்கிறது. கைவசம் அந்த அணிக்கு இன்னும் 5 விக்கெட்டுகள் இருப்பதால் முடிந்தளவுக்கு அதிகபட்ச ரன்களை இலக்காக கொடுக்க திட்டமிட்டுள்ளது அந்த அணி. இது இந்திய அணிக்கு பெரும் சவாலான விஷயமே. தொடரை சமன் செய்ய வேண்டும் என்றால் குறைந்தபட்சம் இந்த டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றாக வேண்டும் அல்லது டிரா செய்தாக வேண்டும். தோல்வியை தழுவினால் நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை இழக்க நேரிடும்.
இப்படியான இக்கட்டான சூழலில் இந்திய அணி நியூசிலாந்து அணிக்கு எதிரான புனே டெஸ்ட் போட்டியில் நாளை களமிறங்க இருக்கிறது. இப்போதைய சூழலில் நியூசிலாந்து அணியின் கையே பலமாக ஓங்கியிருக்கிறது. வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் பிரகாசமாகவும் நியூசிலாந்து அணிக்கே இருக்கிறது. அதனால், நாளை செக்மேட் ஆட்டத்தை இந்திய அணி எப்படி விளையாடப்போகிறது என்பதை ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துள்ளனர். பெங்களூரு டெஸ்ட் போட்டியைப் போல் ஏதாவது மாயாஜாலம் நடந்தால் மட்டுமே இந்திய அணியை தோல்வியில் இருந்து காப்பாற்ற முடியும்.