மீண்டும் அதிரடி ஆட்டத்திற்கு ரெடியாகிவிட்டார் சிம்பு. சமீபத்தில் அவரது 49வது படம் அறிவிக்கப்பட்டிருக்கிறது. ”Zen G தலைமுறை கொண்டாடும் வகையில், விண்டேஜ் எஸ்.டி.ஆரின் அனைத்து மேனரிசங்களுடன், இளமை துள்ளும் கலக்கலான கமர்ஷியல் படமாக இப்படம் உருவாகவுள்ளது என்றும் முழுக்க முழுக்க சிம்புவின் ரசிகர்களுக்கான படமாகவும் இருக்கும்” என்கிறார்கள்.

சிலம்பரசன் இப்போது கமல் – மணிரத்னத்தின் கூட்டணியில் ‘தக் லைஃப்’ படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் கமலின் போர்ஷன் நிறைவு பெற்றது. ஆனால் மொத்த படப்பிடிப்பு நிறைவடைய இன்னும் இரண்டு வார படப்பிடிப்பு இருக்கிறது. அதில் சிம்புவின் போர்ஷன் அதிகம் இருக்கிறது. படப்பிடிப்பு கோவா அல்லது மும்பையில் இருக்கும். தீபாவளிக்கு பிறகு புறப்படுகின்றனர்.

இதன் பிறகே, ‘ஓ மை கடவுளே’ அஸ்வத் மாரிமுத்துவின் டைரக்ஷனில் நடிக்கிறார் சிம்பு. ‘லவ் டுடே’, ‘எல்.ஐ.கே’ படங்களை போல, இந்தப் படம் 2கே கிட்ஸ் கொண்டாடும் படமாக இருக்கும். தேசிங்கு பெரியசாமியின் இயக்கத்தில் அவர் நடிக்கும் படம் ‘எஸ்.டி.ஆர்48’ ஆக இருந்தது. இப்போது ‘தக் லைஃப்’ படத்திற்கு அந்த பெயர் கிடைத்துவிட்டது. ‘தக் லைஃப்’ படப்பிடிப்பிற்கு முன்னரே சிம்புவிடம் இந்தக் கதையை சொல்லிவிட்டார் அஸ்வத். ஆனால், அப்போது ‘எஸ்.டி.ஆர்48’ எப்போது வேண்டுமானாலும் தொடங்கலாம் என்ற சூழல் இருந்ததால், அஸ்வத்தின் படம் தள்ளிப் போனது. அதனால் தான் அவர் ‘டிராகன்’ படத்தை இயக்க சென்றார்.

அஸ்வத்தின் ‘டிராகன்’ படம் நிறைவு கட்டத்தை நோக்கி ஜெட் வேகத்தில் பறக்கிறது. இன்னும் 20 நாட்கள் படப்பிடிப்பு மீதம் இருக்கிறது. அதன் பிறகு அதன் போஸ்ட் புரொடக்ஷனையும் முடித்துவிட்ட பிறகே சிம்புவின் படப்பிடிப்பை கையில் எடுக்கிறார் அஸ்வத். அனேகமாக அடுத்த ஆண்டு பிப்ரவரியில் ‘எஸ்.டி.ஆர்.49’ படப்பிடிப்பு இருக்கும். படத்தில் ஹீரோயினாக மீனாட்சி சௌத்ரி நடிப்பார் என்ற பேச்சு இருக்கிறது. இந்த தகவலும் உறுதியாகவில்லை. ஹீரோயின் உள்பட, நடிகர்கள், தொழில்நுட்பத்தினர் யாரும் இன்னமும் தேர்வு செய்யப்படவில்லை. அதே சமயம், மொத்தம் படப்பிடிப்பையும் 60 நாட்களில் முடிக்கின்றனர். படத்திற்கான இசையை யுவன் அல்லது அனிருத் இசையமைக்க பேச்சுக்கள் நடந்து வருகிறது. ஆக்ஷன், காதல், ஃபேன்டஸி கலவையாக இந்த படம் இருக்கும்.

அஸ்வத்தின் படப்பிடிப்பை முடித்த பிறகே, தேசிங்கு பெரியசாமி இயக்கும் படத்திற்கு வருகிறார் சிம்பு. ஆகையால் இது அவரது 50வது படமாக இருக்கும் என்கிறார்கள். பெரும்பாலான படப்பிடிப்பை வெளிநாடுகளில் எடுக்கவும் திட்டமிட்டு வருகின்றனர். தனது 50வது படத்தை பிரமாண்ட படமாக கொண்டு வர விரும்புகிறார் சிலம்பரசன். அதற்கான வேலைகளும் இன்னொரு பக்கம் தீவிரமடைந்து வருகிறது.
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள…
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்…