TVK : காமராஜர், பெரியார், அம்பேத்கர், விஜய்… த.வெ.க கட்-அவுட் ‘காட்டும்’ அரசியல் ரூட் என்ன?

நடிகர் விஜய் புதிதாகத் தொடங்கியிருக்கும் தமிழக வெற்றிக் கழகம் கட்சியைச் சுற்றியே அனைவரின் கண்களும் இருக்கிறது. கட்சி தொடங்கிய கையேடு கட்சியின் கொடி, பாடலையும் வெளியிட்டிருந்தார் விஜய். அடுத்ததாக அந்த கட்சியின் கொள்கை, கோட்பாடுகள் என்ன என்பதே அனைவரிடத்திலும் இருக்கும் ஒரே கேள்வி. இந்த அனைத்து கேள்விகளுக்கும் விடை தெரியும் இடமாக 27-ம் தேதி விக்கிரவாண்டியில் அந்த கட்சியின் முதல் மாநில மாநாடு இருக்கப் போகிறது. அந்த மாநாடு கட்சியின் முதல் மாநாடாக மட்டும் இருக்கப் போவதில்லை. விஜய்யின் அரசியல் எதிர்காலத்தைத் தீர்மானிக்கக் கூடிய இடமாகவும் அந்த மாநாடு இருக்கப் போகிறது.

தமிழக வெற்றிக் கழகத்தின் கொடி

மாநாட்டுக்குப் பூமி பூஜை போடப்பட்டதிலிருந்து இப்போதுவரை மாநாடு பணிகள் குறித்து நாளோடு செய்திகள் வந்துகொண்டே இருக்கிறது. 150 ஏக்கர் பரப்பளவு இடம் தேர்வுசெய்யப்பட்டு அதில் 80 ஏக்கரில் மாநாட்டுத் திடல், வாகன நிறுத்தம், கொடிக் கம்பம் எனத் தனித் தனியாக பணிகள் நடக்கிறது. அதேபோல, மாநாட்டுக்குத் தனித் தனி அணிகள் அமைக்கப்பட்டு கட்சி நிர்வாகிகள் மாநாடு பணிகளைச் செய்துவருகிறார்கள். லட்சக்கணக்கான தொடர்கள் வருவார்கள் என்பதற்காக அவர்களுக்கான, உணவு தொடங்கி அனைத்து வசதிகளும் செய்யப்பட்டு வருகிறது. மாநாட்டுக்கு சில தினங்களே இருக்கும் நிலையில் பணிகள் முடக்கி விடப்பட்டிருக்கிறது.

மாநாடு திடல் தொடங்கி வாகன நிறுத்துமிடம் ஏற்பாடுகள் வரை அனைத்தும் நடந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில், மாநாடு நடக்கும் இடத்தில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் வைக்கப்பட்டிருக்கும் கட்-அவுட் பெரும் பேசுபொருளாகியிருக்கிறது.

காமராஜர், பெரியார், அம்பேத்கர் ஆகியோரின் வானுயர கட்-அவுட்டுடன் நடிகர் விஜய் வணக்கம் சொல்லுவது போன்ற ஒரு கட்-அவுட்டும் வைக்கப்பட்டிருக்கிறது. இதில் புதியதாக வேலு நாச்சியார், அஞ்சலை அம்மாள் ஆகியோரின் கட்-அவுட்களும் இணைக்கப்பட்டுள்ளது. இந்த கட்-அவுட் மூலம் விஜய்யின் புதிய கட்சி சொல்லவரும் கருத்துதான் என்ன என்பதுதான் இன்றைய அரசியல் வட்டாரத்தில் ஹாட்-டாபிக். இப்போது வைத்திருக்கும் கட்-அவுட்களுடன் இன்னும் சில சுதந்திரப் போராட்ட வீரர்கள் படங்களும் கண்டிப்பாக இடம்பெறும் என்கிறார்கள் அந்த கட்சியைச் சேர்ந்தவர்கள்.

TVK

காமராஜர், பெரியார், அம்பேத்கர் கட்-அவுட் மூலம் தமிழக வெற்றிக் கழகம் சொல்லவரும் கருத்து என்ன என்பது குறித்து அரசியல் விமர்சகர்கள் சிலரிடம் பேசினோம். “தமிழகத்தில் யார் கட்சி தொடங்கினாலும் அவர்கள் அண்ணாவை வைத்து அரசியல் செய்வதை நாம் பார்த்திருப்போம். ஆனால், விஜய் ஒருபடி மேல் சென்று அண்ணாவுக்கு யார் தலைவர்களாக இருந்தார்களோ அவர்களை முன்னிலைப் படுத்துகிறது த.வெ.க. அண்ணாவை மையமிட்ட அரசியலைத் தாண்டி வேறொரு கோணத்தில் யோசித்திருக்கிறார்கள். ஏற்கனவே மாணவர்களுடன் பேசும்போதும் காமராஜர், பெரியார், அம்பேத்கர் ஆகியோரின் பெயரைக் குறிப்பிட்டிருந்தார்.

இப்போது முதல் மாநாட்டிலும் அவர்களின் கட்-அவுட் மூலமாக, பெரியாரின் சமூகநீதி பகுத்தறிவு கொள்கைகளையும், அம்பேத்கரின் அனைவரும் சமம் என்ற கருத்தையும், காமராஜரின் கல்வி தொடங்கி ஊழலற்ற ஆட்சி என்பதையும் மையப்படுத்தி கொள்கைகள் தமிழக வெற்றிக் கழகம் முன்னெடுக்கும். ஒரு அரசியல் கட்சி தொடர்ந்து செயல்பட அவர்களுக்கு முக்கிய தேவை அடிப்படை கொள்கை. திமுகவைப் பொறுத்தவரைச் சமூகநீதி, சமத்துவம், திராவிடம், தமிழ் என்று பல்வேறு கொள்கைகளை வைத்திருப்பதால்தான் இன்றுவரை அந்த கட்சி உயிர்ப்போடு இருக்கிறது. அதேபோல, அதிமுகவைப் பொறுத்தவரை திமுக எதிர்ப்பு அவர்களின் பிரதானம்.

TVK மாநாடு கட்-அவுட்

அதிமுகவுக்கு என்று தனி கொள்கைகள் இருந்தாலும், என்று அதிமுக திமுக எதிர்ப்பினை கைவிடுகிறதோ அன்று அந்த கட்சி அஸ்தமனமாகத் தொடங்கிவிடும். திமுக, அதிமுகவுக்குப் பிறகு பல்வேறு கட்சிகள் தமிழகத்தில் முளைத்திருந்தாலும் அவை ஓரிரு தேர்தலைத் தாண்டி தாக்குப் பிடிக்கவில்லை. காரணம் அவர்களிடம் கொள்கை என்று ஒன்று கிடையாது. அதேநேரத்தில் இன்றுவரை சீமான் அரசியலில் தாக்குப் பிடித்திருக்க ஒரே காரணம் தமிழ்த் தேசியம் என்ற ஒன்றை அவர் பிடித்துக்கொண்டிருக்கிறார். இப்படி விஜய் தனது கட்சியில் என்ன கொள்கையைத் தூக்கிப் பிடிக்கப் போகிறார் என்பதும், யாரை எதிர்த்து அரசியல் களம் காணப்போகிறார் என்பதும் மிகமுக்கியமான ஒன்று. அனைத்துக்கும் விடை இன்னும் ஓரிரு நாள்களில் தெரிந்துவிடும்” என்றார்கள் விரிவாக.

சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்

https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX

சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள…

உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்…

https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.