டெல் அவிவ்: ஈரான் மீது இன்று காலை துல்லிய தாக்குதல்களை தொடங்கிய இஸ்ரேல் ராணுவம், சில மணி நேரங்களில் தாக்குதலை முடித்துவிட்டதாக அறிவித்துள்ளது.
இது தொடர்பாக இஸ்ரேல் ராணுவ செய்தித் தொடர்பாளர் ரியர் அட்மிரல் டேனியல் ஹகாரி இன்று வெளியிட்டுள்ள 2வது வீடியோ பதிவில், “இஸ்ரேலுக்கு எதிரான ஈரானின் தாக்குதல்களுக்கு இஸ்ரேலின் பதிலடியை நாங்கள் முடித்துவிட்டோம் என்பதை இப்போது என்னால் உறுதிப்படுத்த முடியும். நாங்கள் ஈரானில் உள்ள இராணுவ இலக்குகள் மீது துல்லியமான தாக்குதல்களை நடத்தினோம். இதன் மூலம், இஸ்ரேல் அரசுக்கு இருந்த உடனடி அச்சுறுத்தல்களை முறியடித்தோம்.
ஈரான் மீண்டும் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்துமானால், இஸ்ரேல் நாட்டையும் மக்களையும் காக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் இஸ்ரேல் எடுக்கும்” என தெரிவித்துள்ளார்.
முன்னதாக இன்று காலை அவர் வெளியிட்ட முதல் வீடியோவில், “இஸ்ரேல் அரசுக்கு எதிராக ஈரானில் இருந்து பல மாதங்களாக நடத்தப்படும் தொடர்ச்சியான தாக்குதல்களுக்கு பதில் அளிக்கும் வகையில் இப்போது இஸ்ரேல் பாதுகாப்புப் படைகள் ஈரானில் உள்ள இராணுவ இலக்குகளை குறிவைத்து துல்லியமான தாக்குதல்களை நடத்தி வருகின்றன.
ஈரானில் உள்ள ஆட்சியும் பிராந்தியத்தில் உள்ள அதன் பினாமிகளும் அக்டோபர் 7 முதல் இஸ்ரேலை இடைவிடாமல் தாக்கி வருகின்றனர். ஈரானிய மண்ணில் இருந்தும் நேரடி தாக்குதல்கள் நடத்தப்பட்டன. இவ்வாறு ஏழு முனைகளில் இருந்து இஸ்ரேலுக்கு எதிராக தாக்குதல்கள் நடத்தப்பட்டு வருகின்றன.
உலகில் உள்ள மற்ற இறையாண்மை கொண்ட நாடுகளைப் போலவே, இஸ்ரேலுக்கும் பதிலளிக்கும் உரிமையும் கடமையும் உள்ளது. எங்கள் தற்காப்பு மற்றும் தாக்குதல் திறன்கள் முழுமையாக அணிதிரட்டப்பட்டுள்ளன. இஸ்ரேல் நாட்டையும் மக்களையும் பாதுகாக்க தேவையான அனைத்தையும் செய்வோம்” என தெரிவித்திருந்தார்.
ஈரான் தலைநகரான தெஹ்ரானில், வெடிப்புகளின் சத்தம் கேட்டதாகத் தெரிவித்த அந்நாட்டு ஊடகங்கள், நகரத்தைச் சுற்றியுள்ள வான் பாதுகாப்பு அமைப்புகளிலிருந்து ஒலிகள் வந்ததாகவும் தெரிவித்தன. எனினும், ஈரானில் ஏற்பட்டுள்ள சேதங்கள் குறித்து உடனடி தகவல் இல்லை.
இஸ்ரேலின் தாக்குதலை அடுத்து ஈரானில் உள்ள அனைத்து வழித்தடங்களிலும் விமானங்கள் மறு அறிவிப்பு வரும் வரை ரத்து செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டின் அரசு செய்தி நிறுவனமான ஐஆர்என்ஏ தெரிவித்தது. மேலும், இஸ்ரேலின் ஆக்கிரமிப்புக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ஈரான் கூறியது. ஈரானின் தலைநகரான தெஹ்ரான் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகள் மீது இஸ்ரேல் வான்வழித் தாக்குதல்களை நடத்தியதை அடுத்து, ஈராக்கும் அனைத்து விமான நடவடிக்கைகளையும் ரத்து செய்தது.