‘‘எனக்கு அவர் தளபதி’’: பாமக முன்னாள் தலைமை நிலைய செயலாளர் படத்திறப்பு நிகழ்வில் ராமதாஸ் உருக்கம்

விழுப்புரம்: ‘எனக்கு அவர் தளபதி’ என பாமக முன்னாள் தலைமை நிலையச் செயலாளர் இசக்கி படத்திறப்பு நிகழ்வில் பாமக நிறுவனர் ராமதாஸ் உருக்கமாக தெரிவித்துள்ளார்.

திண்டிவனம் அருகே தைலாபுரத்தில் உள்ள பாமக அரசியல் பயிலரங்கில் பாமக முன்னாள் தலைமை நிலைய செயலாளாரான மறைந்த இசக்கியின் முதலாமாண்டு நினைவேந்தல் மற்றும் படத்திறப்பு நிகழ்ச்சி இன்று பாமக கவுரவ தலைவர் ஜி.கே.மணி தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் பாமக மாநில பொருளாளர் திலகபாமா, தலைமை நிலைய செயலாளர் அன்பழகன், சமூக முன்னேற்ற சங்க தலைவர் சிவபிரகாசம், முன்னாள் எம்எல்ஏ-க்கள் கணேஷ்குமார், திருக்கச்சூர் ஆறுமுகம், ராஜமன்னார், மாவட்டச் செயலாளர் ஜெயராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

படத்திறப்பு நிகழ்ச்சியில் பங்கேற்று, மறைந்த இசக்கியின் படத்தை திறந்துவைத்து ராமதாஸ் பேசியதாவது: இசக்கி இல்லாத ஓராண்டு வெறுமையாக உள்ளது. விசுவாசத்தின் அடையாளம் அவர். கட்சியின் தவிர்க்க முடியாத அங்கம் இசக்கி. ஒவ்வொரு நாளும் சூரியன் உதிப்பதும், மறைவதும் தெரியாமல் இருக்கலாம். நான் தோட்டத்தில் இருக்கும் நாட்களில் தினமும் காலை 9 மணிக்கு கட்சிப் பணிகளை பட்டியலிட்டு மாலை 6 மணிக்கு அவர் செய்த கட்சிப்பணியை பட்டியலிடுவார். அவர் தனது வாழ்நாளில் பெரும்பகுதியை என்னுடன் தான் கழித்தார்.

1972-ம் ஆண்டு அவரை டிரிபிள் எஸ் கூட்டத்தில் சந்தித்தேன். அவர் நெல்லை மாவட்டம், விக்கிரமசிங்கபுரத்தை சேர்ந்தவர். கட்சியில் போட்டியிடும் வேட்பாளர்களை தேர்வு செய்வதில் முக்கிய பங்காற்றியவர். எனக்கு அவர் தளபதி. 45 ஆண்டுகளில் அவர் யாரையும் கடிந்து பேசியதில்லை. அப்படிப்பட்டவருக்கு நாம் அதிகார பதவியை கொடுக்கவில்லை. அவர் கட்சி பதவியை, பதவியாக பார்க்காமல் பொறுப்பாக ஏற்றுக்கொண்டவர். உலகின் அனைத்து விசுவாசங்களையும் இசக்கியை வைத்து அளந்துவிடலாம். ஆனால் அவரை அளந்துவிட முடியாது. இவ்வாறு அவர் பேசினார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.