புவனேஷ்வர்: டானா புயல் மற்றும் கனமழை காரணமாக ஒடிசாவில் 1.75 லட்சம் ஏக்கர் பரப்பளவிலான பயிர்கள் சேதமடைந்துள்ளதாகவும், 2.80 லட்சம் ஏக்கர் பரப்பு நீரில் மூழ்கியுள்ளதாகவும் முதல்கட்ட மதிப்பீட்டைச் சுட்டிக் காட்டி அதிகாரி ஒருவர் சனிக்கிழமை தெரிவித்துள்ளார். வேளாண் மற்றும் வருவாய்த்துறை இணைந்து மொத்த பயிர் பாதிப்புகளை மதிப்பீடு செய்யுமாறு அரசு உத்தரவிட்டுள்ளது என்றும் அவர் கூறினார்.
இதுகுறித்து ஒடிசா வேளாண்மை மற்றும் விவசாயிகளுக்கான அதிகாரமளித்தல் துறை முதன்மைச் செயலாளர் அரபிந்தா பதி தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “முதல்கட்ட அறிக்கையின் படி, டானா புயலால் 1,75,000 ஏக்கர் (69,995 ஹெக்டேர்) பரப்பளவிலான பயிர்கள் சேதமடைந்துள்ளன. கண்பார்வைக்கு தெரியும் அளவில் மதிப்பீடு செய்யப்பட்டதில் 2,80,000 ஏக்கர் (1,12,310 ஹெக்டேர்) நீரில் மூழ்கியுள்ளன.
மாவட்ட ஆட்சியரின் மேற்பார்வையில் குழு அணுகுமுறையில் மாவட்ட வருவாய் அதிகாரிகளுடன் இணைந்து பயிர் இழப்பினை (33 சதவீதம் மற்றும் அதற்கு மேல்) கணக்கிடுமாறு வேளாண்துறைக்கு (@krushibibhag) நாங்கள் உத்தரவிட்டுள்ளோம்” என்று தெரிவித்துள்ளார்.
மாநில முதல்வர் மோகன் சரண் மஞ்ஹி வெள்ளிக்கிழமை இரவு நடத்திய ஆய்வுக்கூட்டத்தில் கூறுகையில், “வேளாண்துறையில் ஏற்பட்டுள்ள மொத்த இழப்புகள் குறித்து விரிவான அறிக்கை மூலம் தகவல் பெறப்படும், அதன் அடிப்படையில் விவசாயிகளுக்கான இழப்பீடு குறித்து அரசு முடிவு செய்யும்.
புயல் காரணமாக சுமார் 8 லட்சம் பேர் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டு முகாம்களில் தங்கவைக்கப்பட்டனர். தற்போது வானிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதால் அவர்களில் பலர் வீடு திரும்ப அனுமதிக்கப்படுகின்றனர்” என்று தெரிவித்தார்.
டானா புயல் காரணமாக 22.42 லட்சம் வீடுகளுக்கு மின்சாரம் துண்டிக்கப்பட்டது. அதில் 14.8 லட்சம் வீடுகளுக்கு வெள்ளிக்கிழமை மாலைக்குள் மின்சாரம் வழங்கப்பட்டதாகவும், மீதமுள்ள வீடுகளுக்கு சனிக்கிழமைக்குள் மின்சாரம் வழங்கப்படும் என்றும் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
கடுமையான சூறாவளி புயலான டானா வெள்ளிக்கிழமை அதிகாலை ஒடிசாவுக்கும் மேற்கு வங்கத்துக்கும் இடையே கரையைக் கடந்தது. வியாழக்கிழமை நள்ளிரவு 12.05க்கு தொடங்கி வெள்ளிக்கிழமை காலை 8.30 மணி வரை புயல் கரையைக் கடந்தது. அப்போது காற்று மணிக்கு 11 கி.மீ வேகத்தில் வீசியது.
இதன் காரணமாக பல இடங்களில் மரங்கள் மற்றும் மின்கம்பங்கள் வேரோடு சாய்ந்தன. ஒடிசா மற்றும் மேற்குவங்கத்தில் குறிப்பிடத்தக்க அளவில் பயிர் மற்றும் உள்கட்டமைப்பு சேதங்கள் ஏற்பட்டுள்ளன.
மேற்குவங்கத்தில் 4 ஆன பலி எண்ணிக்கை: மேற்குவங்கத்தில் டானா புயல் காரணமாக இறந்தவர்களின் எண்ணிக்கை நான்காக உயர்ந்துள்ளது. மாநிலத்தின் புர்பா பர்தமான் மாவட்டத்தின் பட் பட் என்ற இடத்தில், சந்தன் தாஸ் (31) என்ற தன்னார்வளர் மின்சார கம்பியைத் தொட்டதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அவர் போலீஸ் குழுவுடன் இணைந்து பணியாற்றியபோது இந்தச் சம்பவம் நடந்துள்ளது.
ஹவுரா நகராட்சி ஊழியர் ஒருவரின் உடல் தன்திபாபா என்ற இடத்தில் தேங்கியிருந்த நீரில் கண்டெடுக்கப்பட்டது. அவர் நீரில் மூழ்கி இறந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. முன்னதாக வெள்ளிக்கிழமை மின்சாரம் தாக்கி இரண்டு பேர் இறந்திருப்பதாக கூறப்பட்டது.