புவனேஸ்வர்: வங்கக் கடலில் உருவான டானா புயல் கரையை கடந்த தினத்தில் ஒடிசாவில் பிறந்த 10 குழந்தைகளுக்கு டானா என பெயர் வைக்கப்பட்டுள்ளது.
வங்கக் கடலில் உருவான டானா புயல், ஒடிசா மற்றும் மேற்கு வங்கம் இடையே கடந்த 25-ம் தேதி அதிகாலை கரையை கடந்தது. இதை முன்னிட்டு மேற்கு வங்கம் மற்றும் ஒடிசாவில் பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.
பாதுகாப்பு கருதி ஒடிசாவில் கர்ப்பிணி பெண்கள் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் சுகாதார மையங்களில் அனுமதிக்கப்பட்டனர் என ஒடிசா முதல்வர் மோகன் மாஜி தெரிவித்தார். இவர்களில் 1,600 பெண்களுக்கு டானா பயல் கரையை கடந்த தினத்தில் குழந்தை பிறந்தது. இதில் 16 பேருக்கு இரட்டை குழந்தைகள் பிறந்தன. ஒடிசாவில் 10 குழந்தைகளுக்கு புயலின் நினைவாக ‘டானா’ என பெயர் சூட்டப்பட்டது.
இதேபோல் மேற்குவங்கத்திலும் கர்ப்பிணி பெண்களுக்கு சிறப்பு மையங்கள் ஏற்பாடு செய்ய மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி உத்தரவிட்டிருந்தார். இங்கு 392 குழந்தைகள் கடந்த 25-ம் தேதி பிறந்தன. அதிக அளவிலான குழந்தைகள் மேற்கு மிட்னாபூர் மாவட்டத்தில் பிறந்தன.