புரி: வங்கக் கடலில் உருவான டானா புயல் நேற்று அதிகாலை ஒடிசாவில் கரையைக் கடந்தது. இந்த புயலின் பாதிப்பால் மேற்கு வங்கத்தில் ஒருவர் உயிரிழந்தார்.
கடந்த 19-ம் தேதி வங்கக் கடலின் அந்தமான் பகுதியில் காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி, பின்னர் புயலாக மாறியது. டானா என்று பெயரிடப்பட்ட இந்த புயல் ஒடிசாவின் புரி மாவட்டம், மேற்கு வங்கத்தின் சாகர் தீவு இடையே வியாழக்கிழமை நள்ளிரவு முதல் கரையைக் கடக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.
இதன்படி வியாழக்கிழமை நள்ளிரவு முதல் நேற்று அதிகாலை வரை ஒடிசா, மேற்கு வங்கம் இடையே டானா புயல் கரையைக் கடந்தது. அப்போது மணிக்கு 110 கி.மீ. வேகத்தில் காற்று வீசியது. முன்னெச்சரிக்கை நடவடிக்கை யாக ஒடிசாவில் 10 லட்சம் பேர் பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். அந்த மாநிலத்தில் 14 மாவட்டங்கள் டானா புயலால் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளன. புயல் பாதித்த பகுதிகளை ஒடிசா முதல்வர் மோகன் மாஜி நேற்று பார்வையிட்டார். “மாநில அரசின் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளால் ஒரு உயிரிழப்புகூட ஏற்படவில்லை” என்று அவர் தெரிவித்தார்.
மேற்கு வங்கத்தில் 2.5 லட்சம் பேர் புயல் பாதிப்பு பகுதிகளில் இருந்து வெளியேற்றப்பட்டனர். அந்த மாநிலத்தில் 8 மாவட்டங்கள் கனமழையால் பாதிக்கப்பட்டன. மேற்கு வங்கத்தின் முர்ஷிதாபாத் பகுதியில் மழை பாதிப்பால் ஒருவர் உயிரிழந்தார்.
கடந்த வியாழக்கிழமை ஒடிசாவின் புவனேஸ்வர், மேற்கு வங்கத்தின் கொல்கத்தா விமான நிலையங்கள் மூடப்பட்டன. 300 விமான சேவைகள், 552 ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டன. டானா புயல் வலுவிழந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியிருக்கிறது. இதன் காரணமாக ஒடிசா, மேற்கு வங்கத்தில் நேற் றும் மழை நீடித்தது. எனினும் ரயில், விமான சேவைகள் நேற்று வழக்கம்போல இயக்கப்பட்டன.